Friday, June 25, 2010

ஐ.நா., குழு இலங்கை வரஅனுமதிக்க கடும் எதிர்ப்பு

கொழும்பு:இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போர் குற்றங்களை விசாரிப்பதற்காக ஐ.நா., பொதுச் செயலர் நியமித்துள்ள மூவர் குழுவை கொழும்பு வர அனுமதிக்க மாட்டோம் என, அமைச்சர் காமினி லட்சுமண் பெரீஸ் தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதி கட்ட போர் நடந்தது. இதில் போர் குற்றங்கள் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க இலங்கை அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், ஐ.நா., பொதுச் செயலர் பான் -கி-மூன், தனக்கு இது குறித்து தெரியப்படுத்துவதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.இந்தோனேசிய முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஸ்மான், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வக்கீல் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் ஐ.நா., விசாரணைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஐ.நா.,வின் இந்த சிறப்பு குழு இலங்கை வர அனுமதிக்க மாட்டோம் என, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் நேற்று குறிப்பிடுகையில், "இலங்கையில் நடந்த போர் குற்றங்களை விசாரிக்க ராஜபக்ஷே அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், ஐ.நா., அமைத்துள்ள குழுவால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. இது தேவையற்ற தலையீடு; சொல்லப் போனால் இதனால், இடையூறு தான் ஏற்படும். எனவே, இந்த குழுவை நாங்கள் இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம். இக் குழுவுக்கு விசா வழங்கப்படமாட்டாது' என்றார்.

No comments:

Post a Comment