Saturday, September 25, 2010

"அண்ணாவிடம்" பல்பு "வாங்கிய வடஇந்தியர்கள்

1962. தமிழ்நாட்டுல இந்தி எதிர்ப்பு போராட்டம் கொழுந்து விட்டு எரிஞ்சிட்டிருந்தது. டெல்லில இருந்தவங்க இங்க இருக்க சூழ்நிலை புரியாம, கண்டபடிக்கு பேட்டி குடுத்திட்டிருந்தாங்க.

அந்த காலத்துல தமிழ்நாட்டுல 'அண்ணா'ன்னு சொன்னா போதும், சின்னப் பசங்கலேந்து பல்லு போன கிழவனார்கள் வரைக்கும் அப்படியே ஒரு வேகம் தொத்திக்கும். அண்ணா எங்கயாவது பேசறார்னு தெரிஞ்சா, அந்த ஏரியாவே சும்மா கதிகலங்கும். கேக்கற எல்லாரையும் அப்படியே கட்டிப்போடற அளவுக்கு அண்ணாவோட தமிழ் தித்திக்கும். தான் சொல்ல வந்த விஷயத்தை எல்லார் மனசுலேயும் நல்லா பதியற மாதிரி பேசறதுல அண்ணாவுக்கு நிகர் அண்ணா தான்.

டெல்லி பார்லிமெண்ட். இந்தி மொழியை தேசிய மொழியா ஆக்கறது பத்தி தீர்மானம் போட கூட்டம் கூடியிருந்தது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர் ஒருத்தர் எழுந்தார். "இந்தியை தேசிய மொழியா அங்கீகரிக்க ஏன் எதிர்க்கறீங்கன்னு புரியலை.."ன்னு சொல்லி, தன் தரப்பு பாயிண்ட்டுகளை அடுக்கி வெச்சார். " சிம்பிள் லாஜிக். சின்ன குழந்தைக்கு கூட இது புரியும்.. இந்தியாவுல அதிகமான மக்கள் பேசற மொழி இந்தி.. அதனால இந்தி மொழிய தானே தேசிய மொழி ஆக்க முடியும்..!"னு முடிச்சார்.

அண்ணா எழுந்தார். "அதிகமான மக்கள் பேசற மொழி தான் தேசிய மொழியா இருக்கணும்னு சொல்றீங்க.. அப்படி பாத்தா, நம்ம நாட்டுல அதிகமா இருக்கற பறவை காக்கா தான். பின்ன ஏன் மயில் தேசியப் பறவையா இருக்கு...? நாட்டுல எலி இல்லாத மாநிலமே இல்லை.. அதனால இனிமே புலிக்கு பதிலா இனிமே எலியை தேசிய விலங்கா அறிவிச்சிடலாமா..?"ன்னு கேட்டதுக்கு பார்லிமெண்ட் கட்டடம் அதிர்ற அளவுக்கு கைதட்டினாங்க..

குல்லாகாரர் கேட்டார். "சரி.. அப்டீனா இந்தியர்கள் ஒருத்தொருக்கொருத்தர் பேச, இணைப்பு மொழியா எது இருக்கும்..?"

"ஏன்.. இப்ப தான் பள்ளிகூடத்துலயே ஆங்கிலம் சொல்லித் தரோமே.."

"ஆங்கிலம் சொல்லித் தரது உலகத்தோட தொடர்பு கொள்ள.. இந்தியர்களுக்குள்ள தொடர்பு கொள்ள ஒரு மொழி வேணும்.. இந்தியாவுல நிறைய பேருக்கு தெரிஞ்ச மொழி இந்தி.. அதனால கொஞ்சம் பேர் மட்டும் இந்தி கத்துகிட்டா போதும்.. அதுக்கு தான் இந்திய தேசிய மொழி ஆக்கணும்னு சொல்றோம்.."

"வெளிநாட்டுக்காரங்களோட பேச பயன்படற அதே ஆங்கிலத்தை, இந்தியாவுல இருக்கவங்ககிட்டயும் பேச பயன்படுத்திக்கலாம்.. எதுக்காக இன்னொரு மொழி கத்துக்கணும்..? உங்க வீட்ல ரெண்டு நாய் இருக்குன்னு வெச்சுக்கங்க.. ஒண்ணு பெரிசு.. ஒண்ணு சின்னது.. பெரிய நாய்க்காக ஒரு கதவும், சின்ன நாய்க்காக ஒரு கதவும் வெப்பீங்களா.. பெரிய நாய் வந்து போகுற கதவையே சின்ன நாயும் பயன்படுத்திக்கும் தானே.. ?ன்னாரு..

அறிஞர் அண்ணாவோட டைமிங் சென்ஸ், டெல்லிகாரங்களையே வாயடைக்க வெச்சிடுச்சு..!

மேற்கண்ட உரையாடல் ஆங்கிலத்தில் தான் நடந்தது. அண்ணா இவ்ளோ சூப்பரா ஆங்கிலம் பேசுவார்னு அங்க இருக்கவங்க ஒருத்தரும் எதிர்பாக்கலை. அண்ணா சொன்னார் : "I rarely speak English; But my English is not rare..!".

No comments:

Post a Comment