Sunday, June 13, 2010

செம்மொழி மாநாட்டுக்கு யோசனைகள்!!!!!!!!!!!!(நூதன முறையில் தமிழை வளர்க்க, “சவுக்கின்“ ஆலோசனைகள்)






செம்மொழி மாநாட்டுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் கடிகார கோபுரம் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மணி அடிக்கும் போது ஒரு திருக்குறளைச் சொல்லி, அதற்கான விளக்கமும் சொல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழை வளர்க்க எப்படி ஏற்பாடுகள் பார்த்தீர்களா ?


இது போல் நூதன முறையில் தமிழை வளர்க்க, “சவுக்கின்“ ஆலோசனைகள் இதோ….
பொதுக் கழிப்பிடங்களின் கதவுகளின் உள்புறத்திலும், சுவர்களிலும், “ I Love You Meena I Love Namitha “ போன்ற வாசகங்கள் கிறுக்கப் பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.


இதைத் தவிர்க்கும் பொருட்டு, அனைத்து பொதுக் கழிப்பிடக் கதவுகளுக்கும், பெயின்ட் அடித்து, கருணாநிதியின் பொன்மொழிகளான “என்து, உன்துன்னா உதடு ஒட்டாது… நம்பள்துன்னா உதடு ஒட்டும்“ என்று எழுதி போடலாம்.


“சான்றோரே… சான்றோரே… நீங்கள் என்னை கடலிலே தூக்கிப் போட்டாலும்…. போன்ற வாசகங்களை சுவற்றில் எழுதிப் போடலாம்.


இவ்வாறு செய்தால், அவசரத்துக்கு, இங்க வந்தா, இந்தக் கருமத்தையெல்லாம் வேற படிக்க வேண்டியிருக்கு என்று, பெரும்பாலான பொதுமக்கள் பொதுக் கழிப்பிடங்களை பயன் படுத்துவதற்கு, மலச்சிக்கல் எவ்வளவோ தேவலை என்று பொதுக் கழிப்பிடங்களை பயன் படுத்தவதையே தவிர்த்து விடுவார்கள்.


இதனால், தமிழ் வளர்வதோடு, பொதுக் கழிப்பிடங்களும் சுத்தமாக இருக்கும். இது மட்டுமின்றி, கழிப்பிடத்தில் தமிழ் வளர்த்த தலைவர் என்று வரலாற்றில் எழுதப் படும்.


அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களுக்கான வருகைப் பதிவேட்டை மாற்றி விட்டு, ஒரு குயர் நோட்டு ஒன்றை கொடுத்து, தினமும் காலையில் அலுவலகம் வந்தவுடன், வருகைப் பதிவேட்டிற்குப் பதிலாக “கலைஞர்தான் தமிழ்… தமிழ்தான் கலைஞர். “ என்று ஐந்து முறை அல்லது பத்து முறை எழுதச் சொல்லாம்.


தொடர்ந்து தவறாமல் எழுதும் அரசு ஊழியர்களுக்கு, ஊக்கப் படியாக மாதம் ரூபாய் 20 என்று அறிவித்துப் பாருங்கள். இந்த இருபது ரூபாய்க்காக, 10 முறை அல்ல, தினமும் நூறு முறை எழுதுவார்கள் இந்த அரசு ஊழியர்கள்.


குழந்தைகளுக்கு பயன்படுத்தப் படும் டயப்பர்களில், தமிழ் வாழ்க, செம்மொழி வாழ்க, கலைஞர் வாழ்க போன்ற வாசகங்களை கட்டாயம் அச்சிட வேண்டும் என்று உத்தரவிடலாம்.


இதனால், குழந்தைப் பருவத்திலிருந்தே தமிழுணர்வு வளர்க்கப் படும். இது மட்டுமன்றி, ஒவ்வொரு முறையும், டயப்பரை மாற்றும், தாய்மார்கள் இதைப் படித்து தமிழுணர்வு பெறுவார்கள். இதனால், தமிழ் மொழி மென்மேலும் வளரும்.


இளம்பெண்கள் LOOK AT ME, STARE ME NOT, DON’T TOUCH போன்ற விதவிதமான வாசகங்களோடு “டிஷர்ட்டுகள்“ அணிந்து வருவார்கள். இதனால், இளைஞர்கள் இந்த வாசகங்களை படிக்க வேண்டும் என்ற இளம் பெண்களின் விருப்பமும் நிறைவேறும். இதைப் படிக்கும் சாக்கில், இளைஞர்கள் காமப் பார்வையை அள்ளி வீசவும் செய்யலாம்.


இது போன்ற “டிஷர்ட்டுகளில்“ கட்டாயம் இனி மேல் “கலைஞர் வாழ்க, செம்மொழி ஆசான் வாழ்க, திருவள்ளுவருக்கே திருக்குறளா ? கலைஞருக்கே தமிழா ? “ போன்ற வாசகங்களை வெளியிட வேண்டும் என்று உடனடியாக அரசாணை வெளியிடலாம்.


அரசாணை வெளியிட்ட மறு நாளே, டிஜிபி லத்திக்கா சரண் இந்த டிஷர்ட் அணிந்து வந்து, கருணாநிதியை சந்திப்பார். இதை கலைஞர் டிவியில் பெரிய அளவில் செய்தியாக வெளியிடலாம்.




தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் மெக்டொவெல், ஜானெக்ஷா, ரொமானாவ், பேக்பைப்பர், ஓல்ட் மங்க், ஓல்ட் சீக்ரெட் என அனைத்து சரக்குகளும் ஆங்கிலப் பெயர் கொண்டவையாகவே உள்ளது, தமிழ் மொழியின் வளர்ச்சியில் பெரும் தடையாக உள்ளது.


இதை சீர் செய்யும் பொருட்டு, கலைஞர் சரக்கு, முத்தமிழறிஞர் சரக்கு, செம்மொழிச் சரக்கு, திராவிடச் சரக்கு, என தமிழ்ப் பெயர்களில் மட்டுமே இனி மதுபானங்கள் விற்கப் படும் என அறிவிக்கலாம்.


தமிழ்ச் சரக்குகள் விற்கப் படுவதால், 24 மணி நேரமும், டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்கலாம். இதனால் அரசுக்கு வருவாயும் கூடும். சரக்கு வாங்கும் குடிமக்கள் மிகுந்த தமிழுணர்வோடு போதையாவார்கள்.


அந்தப் போதையும் தமிழ் போதையாக இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும், பெரும்பாலான டாஸ்மாக் பார்களில், அனைவரும் அடிக்கடி பயன்படுத்தும் சொல் “ஆப் பாயில்“. இதைத் தவிர்க்க, “அரை வேக்காடு“ என்ற சொல்லை கட்டாயம் பயன் படுத்த வேண்டும் என்று அனைத்து பார்களிலும் போர்ட் வைக்கலாம்.


தமிழ் கற்றுக் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த செம்மொழிப் பாடலை பாடிக் காட்டும் மார்வாடிகளுக்கு, வரிவிலக்கு என்ற அறிவிப்பு வெளியிட்டால், 10 நாட்களில் சவுகார்ப்பேட்டையில் உள்ள அனைத்து மார்வாடிகளும், பாடுவதோடு அல்லாமல்,



“வெஜிடெபிள் பிரிஞ்சி தமிழுக்கு சிஎம்ஜி
ஏழை வயிறு எரிஞ்சி பூத்துக் குலுங்கும் குறிஞ்சி
மைனே பியார் கியா கலைஞர் பேரன் தயா
ஹம் ஆப்கே ஹேன் கவுன். கலைஞர் மனசு நூறு பவுன்
ஏக் துஜே கேலியே.. ஜெயலலிதா காலியே…
போன்ற கவிதைகள் பாடுவார்கள்.


இதனால், மார்வாடிகள் மத்தியில் தமிழ் வளர்த்த அறிஞர் என்று கருணாநிதியின் புகழ் வரலாற்றில் பதிவு செய்யப் படும்.


கொடநாடு என்று ஒரு இடம் இருக்கிறதே. அந்த இடத்தின் பெயர், “செம்மொழி மாநாடு“ என்று மாற்றம் செய்யப் பட்டது என்று அரசு கெஜட்டில் அறிவிப்பு வெளியிடலாம். இந்த அறிவிப்பானது, பல விளைவுகளை ஏற்படுத்தும்.


பத்திரிக்கைகள், வருடத்தில் பத்து முறையாவது, “செம்மொழி மாநாட்டில் ஜெயலலிதா“ என்று தலைப்புச் செய்திகள் வெளியிடும். இதனால், எதிர்க்கட்சித் தலைவரை செம்மொழி மாநாட்டுக்கு வரவழைத்த கலைஞர் என்று, பெயர் கிடைக்கும்.


செம்மொழி மாநாட்டில், சுவாமி நித்யானந்தா மற்றும், தேவநாதன் ஆகியோரது புதிய படங்கள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டால், செம்மொழி மாநாட்டில் இருக்கும் கூட்டத்தைப் பாருங்கள். என்னடா இது இத்தனை பேருக்கா தமிழார்வம் என்று கருணாநிதியே ஆச்சர்யப் பட்டுப் போவார்.


ஹெல்மெட் அணிவது எப்படி கட்டாயச் சட்டம் ஆனதோ, அதே போல அனைத்து ஹெல்மெட்டுகளிலும், தமிழ் வாழ்க, செம்மொழி மாநாடு வாழ்க, கலைஞர் வாழ்க என்ற வாசகங்கள் கட்டாயம் எழுதப் பட வேண்டும் என்று உத்தரவு போடலாம். இதனால் பல்வேறு பயன்கள் உண்டு. வண்டி ஓட்டும் அனைவரும் ஹெல்மெட்டுகளைப் பார்த்து தமிழுணர்வு பெறுவார்கள். ஸ்டிக்கர் ஒட்டும் தொழிலாளர்கள், ஓவியர்கள் அனைவரும் வேலை வாய்ப்பு பெறுவார்கள். இதற்கெல்லாம் மேலாக, கருணாநிதிக்கு மிகவும் பிடித்த, காவல்றை நண்பர்கள் மாமூல் வாங்க அற்புதமான வாய்ப்பு பெறுவார்கள். கருணாநிதியை வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.



நன்றி

சவுக்கு

2 comments:

  1. சிரிச்சு மாளலை.. சரியான சவுக்கடி ..

    ReplyDelete
  2. இன்றைய டாப் இருபது வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete