Saturday, April 24, 2010

கோப்பை கைப்பற்றுமா சென்னை கிங்ஸ்! * நாளை மும்பை அணியுடன் மோதல்


ஐ.பி.எல்., கோப்பை வெல்லப் போவது யார் என்பது நாளை தெரிந்துவிடும். கடந்த இரு முறை வெளிநாட்டு வீரர் தலைமை தாங்கிய அணிகள் தான் சாம்பியன் பட்டம் வென்றன. இந்தியன் பிரிமியர் லீக் என்று பெயர் வைத்து கொண்டு வெளிநாட்டு வீரர் தலைமையிலுள்ள அணி கோப்பை வாங்குகிறது என விமர்சனங்கள் எழுந்தன. இம்முறை பைனலில் மோதும் சென்னை, மும்பை அணிகளுக்கு இந்தியர்கள் கேப்டன் என்பதால், முந்தைய விமர்சனங்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.
மும்பையில் நடந்த இரண்டு அரையிறுதி போட்டிகளும், உப்புச்சப்பின்றி முடிந்தது உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருப்தியளிப்பதாக தெரியவில்லை. பெரும்பாலான ரசிகர்கள் போட்டியின் முடிவு இப்படியா போகணும் என அங்கலாய்கின்றனர். சூதாட்டம் புகார் வேறு எழுந்துள்ளதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. வீரர்கள் உண்மையாக விளையாடித்தான் முடிவு நிர்ணயிக்கப்படுகிறது என்றால் மகிழ்ச்சியே; ஒரு வேளை போட்டியின் நிலைமைக்கு ஏற்ப, "புக்கிகளால்' முடிவு செய்யப்படும் பட்சத்தில் கிரிக்கெட்டை வெறுக்கும் நிலை ஏற்படும்.


இந்நிலையில், நாளை நடக்கும் பைனலில் மும்பை- சென்னை மோதுகிறது என்ற நிலைமை போய், ஜெயிக்கப்போவது சச்சினா... தோனியா என்ற ரீதியில் சூதாட்டக்காரர்கள் கொளுத்தி போட்டுள்ளனர். தொடர் துவங்கியதில் இருந்து, பெரும்பாலான ரசிகர்கள் மும்பை அணிதான் சாம்பியன் கோப்பை வெல்லும் என்றனர். இரண்டாவது சுற்றில் வீறு கொண்டு எழுந்த சென்னையின் வேகத்தை பார்த்து ரசிகர்கள் போக்கு மாறியது. இறுதிப்போட்டிக்கு சென்னை வந்தால் நல்லதொரு ஆட்டத்தை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்து இரண்டு அணியினரும் முடிவு எப்படியிருந்தாலும் பரவாயில்லை, போட்டியை போட்டியாக பாவித்து விளையாடினால், ஐ.பி.எல்.-3 முடிவு மங்களமாக இருக்கும்.
மூன்று ஐ.பி.எல்., போட்டிகளில் அரையிறுதிபோட்டி வரை கணக்கில் எடுத்துக்கொண்டால் சென்னை அணி 46 ஆட்டங்களில் விளையாடி, 23 ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்து 13 முறையும், இரண்டாவதாக சேஸ் செய்து பத்து முறையும் வென்றுள்ளது.


மும்பை 43 ஆட்டங்களில் விளையாடி 22 வெற்றி பெற்றுள்ளது. இதில் முதலில் பேட் செய்து 12 முறையும், இரண்டாவதாக பேட் செய்து பத்து முறையும் வென்றுள்ளது. சென்னை அணி 20 முறை டாஸ் வென்றுள்ளது. மும்பை 23 முறை டாஸ் வென்றுள்ளது.
மூன்று ஐ.பி.எல்., தொடரையும் சேர்த்து மும்பையும் சென்னையும் இதுவரை 6 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா மூன்றில் வென்றுள்ளது.
இந்தாண்டு மும்பை அணியின் அதிக பட்ச ஸ்கோர் 211. அதே போல் சென்னையின் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 242. இதை ராஜஸ்தான் அணிக்கு எதிராகத்தான் இரு அணிகளும் எடுத்தன.
கடந்த மாதம் 25ம் தேதி மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பேட் செய்து 180 எடுத்தது. இதை 19 ஓவர்களில் 184 எடுத்து மும்பை வெற்றி பெற்றது.
ஏப்.6ம் தேதி சென்னையில் நடந்த போட்டியில் சென்னை முதலில் பேட் செய்து 165 எடுத்தது. மும்பை சேஸ் செய்து 141 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது.

No comments:

Post a Comment