Saturday, April 24, 2010

தமிழரின் பாலியல் வேட்கை - ஒரு ஐரோப்பிய கண்ணோட்டம்


தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்த ஒரு நெதர்லாந்து எழுத்தாளர் தனது அனுபவங்களை பதிவு செய்துள்ளார். ஐரோப்பியர்கள் தம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தமிழர்களும் தெரிந்து கொள்வது நல்லது. "Te gast in India" என்ற நூலில் இருந்து தமிழாக்கம் செய்து தருகிறேன்.


பல நூற்றாண்டிற்கு முந்திய இந்தியாவை தமிழ்நாட்டில் தரிசிக்கலாம். ஆரியரின் பழக்கமான புலால் உண்ணும் முறை இங்கே கலாச்சாரமாகவில்லை. மொகலாயர்கள் தெற்கைப் பற்றி அதிகம் அக்கறைப்படவில்லை. தமது மதமாற்றும் நடவடிக்கையை வடக்கத்திய பிரதேசங்களுடன் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். பிரிட்டிஷார் கூட தமிழ்நாட்டில் அதிகளவு மாற்றங்களை கொண்டுவரவில்லை. மதராஸ் துறைமுகத்துடன் அவர்கள் திருப்தியடைந்தார்கள். இத்தகைய காரணங்களால் இங்கே திராவிட கலாச்சாரம் என்றென்றும் நிலைத்து நின்றது. பிரபலமான இந்துக் கோயில்கள் தெற்கில் காணப்படுவது ஒன்றும் அதிசயமல்ல. கோயில் கட்டடக்கலை ஒப்புவமை இல்லாதது.

"தமிழ் என்றால் இனிமை என்று அர்த்தம்" - எனக்கு அருகாமையில் இருந்த இளைஞர் சரளமான ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். நிச்சயமாக, ஆரியரின் வருகைக்கு முன்பிருந்தே தென்னிந்திய பிராந்தியத்தில் வாழ்ந்து வரும் கருநிற மேனியைக் கொண்ட மக்களைக் குறிக்க, இனிமை என்ற சொல் சிறந்த வரைவிலக்கணம். தமிழர்கள் எவ்வளவு நேர்மையானவர்கள், அன்பானவர்கள் என்று வாய் நிறைய சொல்லிக் கொண்டிருந்தார். நெற்றியில் வந்து விழும் அடர்ந்த சுருளான முடிகளுக்குள், கண்கள் பளிச்சிடுகின்றன. அவர் தன்னை வின்சென்ட் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
"அது ஒரு கிறிஸ்தவப் பெயர் அல்லவா?"
"ஆமாம், நீங்கள் ஒரு கிறிஸ்தவ நாட்டில் இருந்து வருகிறீர்கள் அல்லவா?"
நிறைய அர்த்தங்களுடன் கண் சிமிட்டுகிறார்.
நாம் கிறிஸ்தவர்கள் இல்லை, எனக் கூறிய போது துணுக்குற்றார். நாம் கடவுளை நம்பவில்லை என்று சொன்னதும் பொறி பறந்தது. நாம் சொன்னதை அந்த இளைஞர் தனக்கு அருகில் இருப்பவர்களுக்கு மொழி பெயர்த்து கூறிய பின்னர், அவர்களும் நம்ப மறுத்து எம்மை உற்று நோக்கினார்கள்.

வின்சென்ட் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் இருந்து மகாபலிபுரத்திற்கு வந்திருந்தார். கொடைக்கானல் கிறிஸ்தவ கேரளாவின் எல்லை அருகில் உள்ளது. "தமிழர்கள் இனிமையானவர்கள். ஆனால் மலையாளிகள் வேறு விதமானவர்கள்." விரலால் சைகை காட்டியபடி தொடர்கிறார். "மலையாளிகளை நம்ப முடியாது. ஆனால் அவர்கள் கெட்டவர்கள் அல்ல." வின்சென்ட் ஒரு டாக்சி சாரதி. பல இடங்களைப் பார்த்திருக்கிறார். நாம் பாறையில் தாவும் போது, வின்சென்ட் தமிழர்களைப் பற்றிய இன்னொரு கருத்தை உதிர்க்கிறார். "இன்றைய காலம் தமிழர்களின் பாலியல் வேட்கை அதிகரித்து வருகின்றது. நிறைய ஆபாசப்படங்களைப் பார்க்கிறார்கள். 'வின்சென்ட் அப்படி இல்லை.' நாம் கேட்காமலே, அவர் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் மேற்கொண்டு சொல்ல முடியாத படி, பாதையில் ஒரு பெண் பக்தைகளின் குழு எதிர்ப்படுகின்றது. அவர்கள் தமது தலைமுடிகளை கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டு, மொட்டந்தலையில் மஞ்சள் சந்தனம் தடவி இருந்தார்கள்.

"அங்கே பாருங்கள்!" வின்சென்ட் சுட்டிக்காட்டிய இடத்தில் 'இன்டியானா ஜோன்ஸ்' சுவரொட்டிகள் காணப்பட்டன. "விறுவிறுப்பான நல்ல படம். பார்த்தீர்களா?" "ஆனால் இப்போதெல்லாம் ஆபாசப்படங்களைப் பார்க்க கூட்டம் அலைமோதுகிறது." தலையை ஆட்டுகின்றார். "இப்போதெல்லாம் நிறையப்பேர் புகைக்கிறார்கள். கெட்ட பழக்கம். பெண்களும் புகைக்க ஆரம்பித்திருப்பது இன்னும் மோசமானது." - ஒரு 'கப்' பாலைக் குடித்துக் கொண்டே விரிவுரையாற்றுகிறார். "ஏன், அப்படி?" என்ற எமது கேள்விக்கு, "பெண்கள் தீய பழக்கங்களைப் பழகக் கூடாது. பெண்கள் கண்ணாடியைப் போன்றவர்கள். அது உடைந்தால் அதற்கு எந்தப் பெறுமதியும் இல்லை. ஒரு பெண் எப்போதும் நல்ல விஷயங்களைத் தான் செய்ய வேண்டும். வேற்று ஆண்களைப் பார்க்கக் கூடாது. தரையைப் பார்த்து நடக்க வேண்டும்."

இன்னொரு தடவை தபால் கந்தோர் சென்றிருந்தோம். கல்லாவில் இருந்த இளைஞன் முன்னால் நிற்கிறோம். "ஆஹா! நெதர்லாந்திற்கு அனுப்புகிறீர்களா?" நாம் கொடுத்த தபாலில் இருந்த முகவரியைப் பார்த்து விட்டு கூறுகிறார். பின்னர் குரலை சற்றுத் தாழ்த்தி கேட்கிறார். "நெதர்லாந்து. அங்கே யார் வேண்டுமானாலும் யார் கூடவும் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம். அப்படியல்லவா? உங்கள் நாட்டில் அப்படி நடப்பதாக இங்குள்ள பத்திரிகைகள் எழுதுகின்றன." பத்திரிகையில் வரும் எல்லாவற்றையும் நம்ப வேண்டாம் என நாம் அந்த இளைஞனை எச்சரிக்கிறோம். இளம் இந்தியர்கள் மனதில் மேலைதேசத்தவர்களின் பாலியல் பழக்கவழக்கம் பற்றிய தகவல்கள் சற்று தூக்கலாகவே இருக்கின்றன. ஆனால், எப்படி தபால் அலுவலக பணியாளர் அதைப்பற்றி பேசமுடியும்? அல்லது வின்சென்ட் போன்றவர்களை எடுத்துக் கொள்வோம். "தமிழர்களின் பாலியல் வேட்கை" பற்றி முறையிடுகிறார்கள். மகாபலிபுரத்தில் நடந்து கொண்டிருக்கும் போது, தமிழ்நாட்டில் கவர்ச்சி அலை வீசுவதை உணர்கிறோம். நட்பாகப் பழகும், மென்மையான இந்த மனிதர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், என்று எம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம்.

எமது விடுதியில் ஒவ்வொரு காலையும் அந்தப் பணியாளர் தேநீருடன் வந்து எம்மை எழுப்புவார். ஆண்-பெண் உறவு பற்றி என்ன நினைக்கிறார் என்று, அந்த முதிய பணியாளரைக் கேட்கிறோம்.
"மேற்கத்திய பெண்கள், தெரியாத ஆண்களோடு பேச்சுக் கொடுப்பார்கள். எமது சமூகத்தில் அது ஏற்புடையதல்ல."
"மேற்கத்திய பெண்கள் இந்தியர்களைப் போல அடக்கமாக உடை உடுப்பதில்லை."
"ஒரு இந்தியப் பெண், உடல் பாகங்களை காட்டும் படி உடை உடுத்தியிருந்தால், அத்தோடு புகை பிடிக்கவும் குடிக்கவும் செய்தால், அந்தப் பெண் விற்பனைக்கு கிடைப்பாள், என்று அர்த்தம்."
நாம் குறுக்கிட்டு, "இந்தியப் பெண்கள் வயிறும், முதுகும் தெரியும் படி சேலை உடுக்கிறார்களே?" எனக் கேட்டோம்.
"அது அந்தப் பெண்ணின் கணவன் ஒழுங்காக சாப்பாடு போடுகிறானா, என்று பார்ப்பதற்கு." சொல்லி விட்டுச் சிரிக்கிறார். "ஆனால் தோள், தொடை, மார்பைக் காட்டிக் கொண்டு ஆடை அணிவது தவிர்க்கப்பட்டுள்ளது."
"இந்தியாவில் ஆணும், பெண்ணும் கையேடு கை கோர்த்து நடப்பதில்லை. வீதியில் முத்தமிடுவதில்லை. ஒரு இந்திய ஆண் ஒரு போதும் ஒரு பெண்ணின் அருகில் அமருவதில்லை. விருந்தினராக ஒரு நண்பனின் வீட்டிற்கு செல்லும் ஒரு இந்திய ஆண், அந்த வீட்டுப் பெண்களுடன் பேசுவதில்லை. வெளிநாட்டினருக்கு இந்த பழக்கவழக்கங்கள் தெரியாது. இதனால் சில விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன." சிரிப்புடன் சிறிய இடைவெளி விட்டு தொடர்கிறார். "உங்களது நாட்டில் விருந்துபசரிக்கும் வீட்டு பெண்களுடன் பேசாமல் விடுவது அநாகரீகம் எனக் கேள்விப்பட்டேன்."

அடுத்த நாள் டாக்சியில் சென்னை செல்லும் வழியில் "Womens Club" என்ற செக்ஸ் படத்திற்கான போஸ்டர்களைப் பார்த்தேன். போஸ்டரின் மேலே ஒரு அறிவிப்பு. "அளவுக்கு மிஞ்சிய பாலியல் உங்கள் உடல்நலத்திற்கு கேடாகலாம்." என்ற சுகாதார அமைச்சின் அறிவித்தல். தமிழர்களின் பாலியல் வேட்கை அதிகரித்து வருவது அரசாங்கத்திற்கும் தெரிந்து விட்டது.

1 comment: