Sunday, May 30, 2010

எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ப்பு: சதிகாரர்கள் 2 பேர் அடையாளம் தெரிந்தது; ரெயில் ஊழியரை பயன்படுத்தி நாசவேலை!!!!!!!!!!!

மேற்கு வங்காள மாநிலம் மிட்னாபூரில் நேற்று முன்தினம் தண்டவாளத்தில் நாசவேலை செய்து எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்க்கப்பட்டது. அந்த ரெயில் மீது பக்கத்து தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.


ரெயில் கவிழ்ப்புக்கு மாவோயிஸ்டுகள்தான் காரணம் என்று கருதப்பட்டது. ஆனால் மாவோயிஸ்டுகள் நாங்கள் காரணம் அல்ல என்று கூறினார்கள். இது தொடர்பாக மேற்கு வங்க போலீசார் விசாரித்து வந்தனர். அதில் ரெயிலை கவிழ்த்தவர்கள் யார்? என்று கண்டுபிடித்து உள்ளனர்.


மேற்கு வங்காளத்தில் “போலீஸ் அடக்கு முறைக்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்கள்தான் தண்டவாளத்தில் நாசவேலை செய்து ரெயிலை கவிழ்த்து உள்ளனர்.


இந்த இயக்கம் மாவோயிஸ்டு ஆதரவுடன்தான் செயல்படுகிறது. ஆனாலும் மாவோயிஸ்டுகளுக்கு தெரிவிக்காமல் தன்னிச்சையாக இவர்களே நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர். இந்த இயக்கத்தின் தலைவர்கள் உமாகந்த மகதோ, பாபி மகதோ ஆகியோர் உள்ளூர் தொண்டர்கள் சிலருடன் சேர்ந்து ரெயிலை கவிழ்த்துள்ளனர்.


இதற்காக அந்த பகுதி ரெயில்வே லைன்மேன் தயாராம் மகதோ என்பவரையும் பயன்படுத்தி உள்ளனர். தயாராம் மகதோ அன்று இரவு 9.30 மணியளவில் வீட்டில் இருந்தார். அப்போது உமா கந்தமகதோ, பாபி மகதோ மற்றும் சிலர் ஆயுதங்களுடன் அவரது வீட்டுக்கு வந்தனர்.


அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் குடும்பத்தினர் அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டினார்கள்.


பின்னர் தயாராம் மக தோவை ரெயில் தண்டவாளத்துக்கு அழைத்து சென்றனர். தண்டவாளத்தை சிலிப்பர் கட்டையுடன் இணைத்து இருக்கும் “பான்டரஸ்” கிளிப்பை அகற்றும் படி கூறினார்கள். அதற்கான கருவி மூலம் அவர் இணைப்பை கழற்றினார். இதனால் தண்டவாளம் சிலிப்பர் கட்டையில் இருந்து விலகியது.


அப்போது நள்ளிரவு 1 மணி. அடுத்த 15 நிமிடத்தில் அந்த வழியாக ஞானேசுவரி எக்ஸ்பிரஸ் அந்த வழியாக வரும். இதை எதிர்பார்த்தே தண்டவாளத்தில் நாசவேலை செய்தனர்.


பின்னர் அவர்கள் அந்த இடத்திலேயே காத்து இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தப்படியே 15 நிமிடத்தில் ரெயில் வந்தது. நாச வேலை செய்யப்பட்டு இருந்த இடத்தில் வந்ததும் தண்டவாளத்தை விட்டு விலகி ஓடி கவிழ்ந்தது. அதன் பெட்டிகள் பக்கத்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன.


உடனே பாபிமகதோ பக்கத்தில் உள்ள சர்திகா ரெயில் நிலையத்துக்கு சென்று அந்த வழியாக வந்த சரக்கு ரெயிலை நிறுத்த சென்றார். ஆனால் அவர் செல்வதற்குள், சரக்கு ரெயில் அங்கிருந்து கடந்து வந்து விட்டது. தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் மீது சரக்கு ரெயில் மோதி பெரும் விபத்து நேரிட்டு விட்டது.


போலீசாரிடம் ரெயில்வே ஊழியர் தயாராம் மகதோ நடந்த சம்பவங்கள் அனைத் தையும் கூறியுள்ளார். அவரை தங்கள் பாதுகாப்பில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


உமாகந்த மகதோ, பாபி மகதோ மற்றும் சதிவேலைகளில் ஈடுபட்ட அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடித்தால் சதி பின்னணி குறித்து முழு விவரமும் தெரிய வரும்.

No comments:

Post a Comment