Monday, May 31, 2010

காங்கிரஸ் மந்திரி சபையில் சிரஞ்சீவி கட்சி சேருகிறது !!!!!!!

ஆந்திராவில் ரோசய்யா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

கடப்பா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், மறைந்த முதல்-மந்திரி ராஜசேகரரெட்டியின் மகனுமான ஜெகன்மோகன் ரெட்டி செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்து வருவது காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெகன்மோகன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடவும், அதே சமயத்தில் விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற மேல்-சபை தேர்தலுக்கு ஆந்திராவில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க் களை சுலபமாக தேர்வு செய்யவும் நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியை காங்கிரஸ் நாடியுள்ளது. பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு ஆந்திரா சட்டசபையில் 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இவர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் மிக, மிக எளிதாக தேர்வாக முடியும். டெல்லியில் சோனியாவை சந்தித்து பேசிய பிறகு காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்க சிரஞ்சீவி சம்மதம் தெரிவித்தார்.

ஆந்திராவில் 2014ம் ஆண்டு தான் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் காங்கிரசுடன் சிரஞ்சீவி கட்சி ஐக்கியமாகி விடும் என்று ஒரு பேச்சு நிலவுகிறது. ஆந்திர அரசியலில் இது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் மந்திரி சபையில் சேர சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்கள் சிரஞ்சீவியை வற்புறுத்தத்தொடங்கி உள்ளனர். மந்திரி பதவியில் இருந்தால் தான் கட்சியை வளர்க்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் கூறு கையில், தொகுதி மக்கள் எங்களை இப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாதிரி தான் பார்க்கிறார்கள். எனவே ரோசய்யா மந்திரி சபையில் சேருவதில் எந்த தவறும் இல்லை என்றார்.

பிரஜா ராஜ்ஜியம் எம்.எல். ஏ.க்களிடம் ஏற்பட்டுள்ள மந்திரி பதவி ஆசையை பயன்படுத்திக் கொள்ள ரோசய்யாவும் தீர்மானித் துள்ளார். பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு 4 மந்திரி பதவிகளை தருவதாக அவர் கூறியுள்ளார்.

ராஜசேகரரெட்டி மந்திரி சபை அமைத்த போது, தங்கள் கூட்டணியில் 26 எம்.எல்.ஏ.க்களுடன் இருந்த தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு 6 மந்திரி பதவிகளை கொடுத்தார். தெலுங்கானா மாநில கோரிக்கைக்காக அவர்கள் பிறகு பதவி விலகினார்கள்.


எனவே சிரஞ்சீவி கட்சிக்கு மந்திரி பதவி கொடுக்க எந்த இடையூறும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மந்திரி சபையில் சேருவது பற்றி நடிகர் சிரஞ்சீவி இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை.

No comments:

Post a Comment