Monday, May 31, 2010

ஜெயலலிதா வெற்றி பெற்று பழைய சட்ட மன்றத்திலே ஆட்சி அமைப்போம் என்ற கேள்விக்கு "சிரித்த" முதல்வர்!!!!!!!!!!!!!!

கேள்வி:- தி.மு.க. சார்பாக மாநிலங்களவை தேர்தலில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை எப்போது அறிவிப்பீர்கள்?


பதில்:- இப்போதேகூட அறிவிக்கலாம். மூன்று பேர் கழகத்தின் சார்பில் போட்டியிடுகிறார்கள். இன்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் பொதுச் செயலாளர் பேராசிரியர், கழகத்தின் சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்களை, கழகத் தலைவர் அறிவிக்க உயர்நிலை செயல் திட்டக்குழு அதிகாரம் அளிக்கின்றது என்ற தீர்மானத்தை முன்மொழிந்து அதை உயர்நிலை செயல் திட்டக்குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்படி பொதுச்செயலாளர் பேராசிரியரை கலந்து கொண்டு அறிவிக்கின்ற பெயர்கள்

17-6-2010 அன்று நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு கழகத்தின் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றவர்கள் -

1. கே.பி.ராமலிங்கம்,
2. ச.தங்கவேல்,
3. டி.எம்.செல்வகணபதி
காங்கிரஸ் ஒரு இடத்தில்...

கேள்வி:- மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடம்?
பதில்:- அவர்களுக்குள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் ஒரு இடத்தில் அவர்களே நின்று வெற்றி பெறுவார்கள்.

கேள்வி:- உயர்நிலை செயல்திட்டக் குழுவில் ராஜதந்திரமான ஒரு முடிவை பா.ம.க. உறவு குறித்து தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறீர்கள். இதை பா.ம.க. ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறீர்களா?

பதில்:- எனக்குத் தெரியாது. நாங்கள் நல்ல எண்ணத்தோடு எடுத்த முடிவு இது. இதிலே ராஜதந்திரம் ஒன்றும் கிடையாது.

கேள்வி:- தீர்மானத்தைப் பார்க்கும்போது பா.ம.க. இந்த கூட்டணியில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யும் வகையில் முடிவு செய்திருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்:- ஆமாம்.

கேள்வி:- பா.ம.க.வின் "லாயல்டியை'' சோதனை செய்வது போன்ற முடிவா?
பதில்:- உங்களுடைய கற்பனைக்கெல்லாம் நான் ஆள் அல்ல. என்னுடைய கற்பனையாக நிறைய எழுத முடியும். சொல்ல முடியும். ஆனால் இந்தக் கற்பனைக்கெல்லாம் நான் ஆள் அல்ல.

கேள்வி:- பா.ம.க. உங்கள் கூட்டணியில் சேருவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- ஒப்புக் கொள்ள வைப்பதற்கு முயற்சிப்பேன்.

கேள்வி:- பா.ம.க. சில நாட்களுக்கு முன்பு வரை உங்களை தரக்குறைவாகப் பேசினார்கள். திடீரென்று அவர்களுடன் கூட்டணிக்கு என்ன காரணம்?

பதில்:- உங்களைப் போன்ற சில செய்தியாளர்கள் பேசாததையா அவர்கள் பேசிவிட்டார்கள்? யார் யார் உண்மையாக என்னை வாழ்த்துவார்கள், யார் யார் தரக் குறைவாக பேசுவார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும்.

கேள்வி:- தி.மு.க., பா.ம.க. கூட்டணி என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் டாக்டர் ராமதாஸ் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தைப் புறக்கணிப்போம் என்று சொல்லியிருக்கிறார். அந்த கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்:- நான் அவரைப் பற்றியும், அவருடைய தலைமையிலே உள்ள கட்சியைப் பற்றியும் தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக் குழுவிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் விளக்கிச் சொல்லியிருக்கிறேன். இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு நான் பதில் சொல்லி, அவரை நீங்கள் பதில் சொல்ல வைத்து ஒரு "சிண்டு முடிகிற'' வேலையை தயவு செய்து செய்ய வேண்டாம்.

கேள்வி:- ஈரோட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி தி.மு.க.வில் சேரப் போவதாக கடந்த மூன்று நாட்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே?

பதில்:- தி.மு.க.வில் சேருவதைப் பற்றி முத்துசாமி இன்னும் எங்களிடம் பேசவில்லை.

கேள்வி:- முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி தி.மு.க.வில் இணைந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்:- ஏற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

கேள்வி:- இலங்கை தமிழர் பிரச்சினை குறித்த தீர்மானத்தில் இனியாவது ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியென்றால் இதுவரை அவர்கள் செய்ததில் உங்களுக்கு திருப்தி இல்லை என்று சொல்லலாமா?

பதில்:- திருப்தியே இல்லை என்று சொல்லமுடியாது. போதுமான அளவிற்கு மனநிறைவு இல்லை.

கேள்வி:- இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:- அனுப்பப்பட்ட பொருள்களை இன்னும் சரிவர அவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று புகார் இருக்கின்றது. அது உண்மையாக இருந்தால், அதை மத்திய அரசு உடனடியாக சரி செய்ய வேண்டுமென்பது எங்களுடைய வேண்டுகோள்.

கேள்வி:- கோவை செம்மொழி மாநாட்டுக்காக உங்களைப் பாராட்டுகிறோம். ஆனால் மாநாட்டு இலச்சினையில் தமிழ் பிராமி எழுத்துக்கள் ஒன்று கூட இடம் பெறவில்லையே? சிந்து சமவெளி நாகரிகம் தான் அதிலே இடம்பெற்றுள்ளது.

பதில்:- திராவிட நாகரிகத்தினுடைய ஆதி சிந்து நாகரிகம்.

கேள்வி:- மாநாட்டு இலச்சினையைத் திருத்தி தமிழ் பிராமி எழுத்துக்களை இடம்பெறச் செய்வீர்களா?

பதில்:- அந்த இலச்சினையை மீண்டும் வரைய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் திருத்தம் சரியென்றால் ஏற்றுக் கொள்வோம்.

கேள்வி:- ஜெயலலிதா வெற்றி பெற்று பழைய சட்ட மன்றத்திலே ஆட்சி அமைப்போம் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்:- (சிரிப்பு)

கேள்வி:- சிறுதாவூர் நில பிரச்சினைக்காக தி.மு.க. எப்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்போகிறது?

பதில்:- காஞ்சீபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் அந்த போராட்டத்தை நடத்துவதற்கு எங்களிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள். நாங்கள் அதற்கு அனுமதி கொடுப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார்.

No comments:

Post a Comment