Friday, May 28, 2010

இந்தியாவிலேயே முதலிடம் சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வு சென்னை மண்டலத்தில் 96 சதவீதம் பேர் தேர்ச்சி

சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. சென்னை மண்டலத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கோவா, புதுச்சேரி, மராட்டியம், அந்தமான், டையூ-டாமன் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இவற்றில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 927 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 465 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4461 பேர் தேர்ச்சி பெறவில்லை. இது 96.18 சதவீதம் தேர்ச்சி ஆகும். நாட்டில் உள்ள 5 மண்டலங்களில் சென்னை மண்டலம்தான் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் 9 லட்சத்து 2 ஆயிரத்து 749 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 89.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்களில் 88.30 சதவீதம் பேரும், பெண்களில் 90.68 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

சென்னை மண்டலத்தில் உள்ள மாநிலங்களில் புதுச்சேரி 99.50 சதவீதம் பேர் வெற்றி பெற்று மண்டலத்தில் முதலிடம் பிடித்து உள்ளது. 99.15 சதவீதம் தேர்ச்சியுடன் கேரளா 2-வது இடம் பிடித்துள்ளது.

தேர்வு முடிவுகளை வெளியிட்டு மண்டல தேர்வு அதிகாரி நாகராஜ் கூறியதாவது:-

சென்னை மண்டலத்தில் மொத்தம் 1827 பள்ளிகள் உள்ளன. இவற்றை சேர்த்து 1 லட்சத்து 16 ஆயிரத்து 927 பேர் 573 மையங்களில் தேர்வு எழுதினார்கள். தமிழ்நாட்டில் 193 பள்ளிகள் உள்ளன. இவற்றை சேர்ந்த 17,423 மாணவ- மாணவிகள் 70 மையங்களில் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 17 ஆயிரத்து 245 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.98 சதவீதமாகும்.

சி.பி.எஸ்.சி. தேர்வில் முதன் முறையாக 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு முறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்குகள் வழங்கப்படவில்லை.

கிரேடு அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற வைக்கப்பட்டு உள்ளனர். 91 முதல் 100 மார்க் எடுத்தவர்களுக்கு ஏ-1 கிரேடு வழங்கப்பட்டு 10 புள்ளிகள் கொடுக்கப்பட்டன.

81 முதல் 90 மார்க் எடுத்தவர்களுக்கு ஏ-2 கிரேடு வழங்கப்பட்டு 9 புள்ளிகளும், 71 முதல் 80 மார்க் எடுத்தவர்களுக்கு பி-1 கிரேடு கொடுக்கப்பட்டு 8 புள்ளிகளும், 61 முதல் 70 மார்க் எடுத்தவர்களுக்கு பி-2 கிரேடுடன் 7 புள்ளிகளும் வழங்கப்பட்டு உள்ளன.

51 முதல் 60 மார்க் எடுத்தவர்களுக்கு சி-1 கிரேடுடன் 6 புள்ளிகளும், 41 முதல் 50 மார்க் எடுத்தவர்களுக்கு சி-2 கிரேடுடன் 5 புள்ளிகளும், 31 முதல் 40 மார்க் எடுத்தவர்களுக்கு டி கிரேடுடன் 4 புள்ளிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 31-க்கு கீழ் மார்க் எடுத்தவர்களுக்கு இ-1, இ-2 கிரேடு வழங்கப்பட்டது. இவர்கள் தேர்ச்சி பெறாதவர்களாக கருதப்படுவார்கள்.

அவர்கள் மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் கிரேடுகளை மறு ஆய்வு செய்ய விரும்புபவர்கள் 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment