Thursday, May 27, 2010

தலையங்கம்: தேவை துணிவு...

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு இருக்கிறது. அரசு நிர்ணயித்த கட்டணங்களை 90 சதவீதம் பள்ளிகள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. இந்த அரசால் என்ன செய்துவிட முடியும் என்கிற துணிச்சல்! அசைக்க முடியாத நம்பிக்கை!! அரசு எனும் வெள்ளையானையை அடிபணிய வைக்கும் அங்குசம் தன்னிடம் இருப்பதாகச் சொல்லித் திரியும் ஆணவம்!!! இவைதான் இந்தத் தனியார் பள்ளிகளை அரசுக்கு அடங்காதவையாக நிமிர்ந்து நிற்கச் செய்துள்ளன.


இந்தப் பள்ளிகளின் முறைகேட்டுக்குத் துணை போவதாக உள்ளது பள்ளிக் கல்வித் துறையின் நடவடிக்கை. ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரங்களை அந்தந்தப் பள்ளியின் வாசலில் அறிக்கையாக எழுதி வைக்கும்படி செய்யும் ஆற்றல் இவர்களுக்கு இல்லை.


இந்தக் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று சொன்னதைச் செய்யவும் தெம்பில்லை.பெரும்பாலான பள்ளிகள் அரசின் கல்விக் கட்டணத்தைப் பற்றியே கண்டுகொள்ளாமல், சென்ற ஆண்டின் கட்டணத்தைவிடக் கூடுதலாக 20 சதவீதம் வசூலிக்கின்றன என்று செய்திகள் வந்த பிறகும்கூட, பள்ளிக் கல்வித்துறை மெத்தனமாக இருக்குமேயானால், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இவர்கள் உடந்தை என்று சொல்வதா அல்லது இவர்களுக்கு அவர்களைக் கட்டுப்படுத்த திராணியில்லை என்று சொல்வதா?


ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழுவிடம் பல பள்ளிகள் முறையீடு செய்துள்ளதால், இந்தக் கட்டணத்தில் மாற்றம் வரலாம் என்று கருதி, இணையதளத்தில் இன்னும் விவரங்களை வெளியிடவில்லை என்று கல்வித் துறையே கூறும் என்றால், அதைவிட மோசமான, தனியார் பள்ளிகளுக்கு ஆதரவான பதில் வேறு ஏதும் இருக்க முடியாது.


தமிழ்நாட்டில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில், மே 20-ம் தேதி வரை, 1200 பள்ளிகள் மட்டுமே கல்விக் கட்டணத்துக்காக மேல் முறையீடு செய்துள்ளன. முதல்வர் அறிக்கைப்படி 2000 பள்ளிகள் என்றே வைத்துக் கொண்டாலும், மீதமுள்ள 8000 பள்ளிகளின் கல்விக் கட்டணத்தைப் பகிரங்கமாக வெளியிடவும், இணையதளத்தில் வெளியிடவும் அரசுக்கு என்ன தயக்கம்?


அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வங்கிகள் மூலம் செலுத்தவும், பள்ளிகளில் தனிப்பட்ட முறையில் வசூலிக்கக்கூடாது என்றும் சொல்லவும் பள்ளிக் கல்வித் துறைக்கு ஏன் தைரியம் இல்லை?பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி, அவர்கள் வசூலிக்கும் கட்டணம், ஆசிரியர் சம்பளம், மாணவர் எண்ணிக்கை ஆகியவை குறித்து, இந்தப் பள்ளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பள்ளிகள் நியாயமானவை என்றால்-கல்விச் சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவை என்றால், கணக்கை முறையாக, வெள்ளையாகவே காட்டியிருக்க வேண்டாமா? தமிழக அரசுக்கு எதிராகத் தனியார் பள்ளிகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றமே தள்ளுபடி செய்த பின்னரும்கூட, சங்கத்தின் கூட்டத்தைக் கூட்டி அரசின் ஆணைக்குக் கட்டுப்பட மாட்டோம் என்று சொல்லும் துணிச்சலை தனிநபர் சுதந்திரம் என்று எடுத்துக் கொள்வதா, நீதிமன்ற அவமதிப்பு என்று எடுத்துக் கொள்வதா அல்லது அரசைக் கேலி செய்வோரின் எக்காளம் என்று எடுத்துக் கொள்வதா? புரியவில்லை.


"பிளஸ் 2 தேர்வில் உங்கள் பிள்ளைகளை அதிக மதிப்பெண் பெறச்செய்வோம்' என்று மார்தட்டும் சில நூறு தனியார் பள்ளிகளின் அடாவடித்தனத்தால்தான் இன்று தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளும் அதே பாணியைப் பின்பற்றி நடக்கின்றன. அரசு முதலில் அடக்க வேண்டியது இத்தகைய சில நூறு தனியார் கல்வி நிறுவனங்களைத்தான். இத்தகைய அடாவடி கல்வி நிறுவனங்கள், மேல்முறையீடு செய்ததுடன் தற்போது புதிய கட்டண உத்திகளையும் தொடங்கிவிட்டன.


கோவிந்தராஜன் குழு அளித்த இரண்டு ஓட்டைக்குள் தலையை நுழைத்துக்கொண்டு பூத முகத்தைக் காட்டுகின்றன.அதாவது, பள்ளிப் பேருந்து மற்றும் விடுதிக் கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கோவிந்தராஜன் குழு அறிவித்திருந்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு, இந்தக் கல்வி அதிபர்கள் (அதுதான் தொழில்- கல்வியாகிவிட்டதே!) எல்லா குழந்தைகளையும் விடுதியில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.


"விடுதியில் சேர்த்தால் பள்ளியில் சேர்த்துக் கொள்வோம், இல்லையானால் இடமில்லை' என்று அடாவடி செய்கிறார்கள்."பக்கத்துத் தெருவில் வீடு இருந்தாலும் பரவாயில்லை. விடுதியில் தங்குவதும் தங்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் விடுதிக் கட்டணத்தைச் செலுத்தி விடுங்கள்'. ஆண்டுக்கு ரூ. 50,000-ல் தொடங்கி, குளிர்சாதன அறை என்றால் ரூ.1 லட்சம் வரை கட்டணம். வெகுஅருகில் வீடு இருந்தாலும், பள்ளிப் பேருந்து கட்டாயம் என்கிறார்கள். திட்டம் போட்டுத் திருடுகிற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கிறது; ஆனால் சட்டம் போட்டுத் தடுக்க முடிந்தும், அரசு வேடிக்கை பார்க்கிறது.


லஞ்சப் பேர்வழி குறித்து மேடைகளில் ஒரு கதை சொல்வார் முதல்வர் கருணாநிதி. எந்த இடத்தில் பணியமர்த்தினாலும் லஞ்சம் வாங்கும் ஊழியனைக் கொண்டுபோய் கடல் அலைகளை எண்ணும் பணிக்கு அமர்த்தினார் அரசர். அவனோ, கடலுக்குள் மீனவர்கள் சென்றால் அலைகளின் எண்ணிக்கை பாதிக்கும் என்று தடுத்தான். வேறு வழி? மீனவர்கள் லஞ்சம் கொடுத்து கடலுக்குச் செல்ல வேண்டியதாயிற்று என்பது கதை.


இப்போது இதே கதையை முதல்வர் திருத்திச் சொல்லலாம்; "அந்த ஊழியனை அரசர் சிறையில் அடைக்காமல், குறைந்த தண்டனையாக பணிநீக்கம் செய்தார். அவன் கல்விஅதிபராக மாறினான்'.ஒரு நூறு கல்விஅதிபர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும்போதும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தனியார் பள்ளி நிர்வாகங்களும் ஒரே நாளில் ஒழுங்குக்கு வந்துவிடும். இதைச் செய்யும் துணிச்சல் அரசுக்கு உண்டெனில், அனைவருக்கும் தரமான கல்வி உண்டு. பெற்றோரின் வாழ்த்தும் அரசுக்கு உண்டு.

No comments:

Post a Comment