Monday, April 26, 2010

மணி விழாவில் சின்ன அண்ணாமலை மரணம்
மணி விழாவில் சின்ன அண்ணாமலை மரணம் குடம் குடமாக தண்ணீர் ஊற்றியதால் மூச்சு திணறி உயிர் பிரிந்தது
மேடைகளில் சிரிக்க சிரிக்க நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராக விளங்கிய சின்ன அண்ணாமலை, அவருடைய 60_வது பிறந்த நாள் விழாவின்போது ("மணி விழா") அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கும் வகையில் மரணம் அடைந்தார்.
பழம் பெரும் காங்கிரஸ்காரரும், சுதந்திர போராட்ட வீரருமான சின்ன அண்ணாமலை, ராஜாஜியின் சீடர்; நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வலதுகரமாக திகழ்ந்தார். அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தை தொடங்கி, அதன் தலைவராக இருந்தார்.

காங்கிரஸ் மாநாடு ஒன்றில் காமராஜருடன் சின்ன அண்ணாமலை. கவிஞர் கண்ணதாசனும் படத்தில் இருக்கிறார். சின்ன அண்ணாமலை இளம் வயது முதலே காங்கிரஸ் இயக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். சின்ன அண்ணாமலையின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டை. அங்கு 1920_ம் ஆண்டு ஜுன் மாதம் பிறந்தார்.
இளம் வயதில் மலேசியாவில் உள்ள பினாங்கில் ஆங்கிலோ சீனப்பள்ளியில் படித்தார். பின்னர் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்து தேவகோட்டையில் படித்தார்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே இவருக்கு அரசியல் ஈடுபாடு அதிகம். காந்தி, நேரு கொள்கைகளில் தீவிர பற்று கொண்டவர். 1936_ல் நேருவின் மனைவி கமலா மரணம் அடைந்தபோது தேவகோட்டை நகரத்தார் பள்ளிக்கூடத்தில் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுத முடியாமல் "சஸ்பெண்ட்" செய்யப்பட்டார்.
அதனால் இவரை மீண்டும் பினாங்குக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு இந்தியர்களை ஒன்று திரட்டி, ஒரு சங்கம் அமைத்தார். மதுவிலக்கு பிரசாரம் செய்தார். இதனால் சின்ன அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இவரை நாடு கடத்தும்படி பினாங்கு கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி சின்ன அண்ணாமலை மீண்டும் தமிழ் நாட்டுக்கு திரும்பி வந்தார்.
அந்த நேரம் இரண்டாவது உலக மகாயுத்தம் தொடங்கியது. யுத்த எதிர்ப்பு பிரசாரம் செய்ய காந்தி சத்தியாகிரகம் செய்தார். அந்த போராட்டத்தில் சின்ன அண்ணாமலை ஈடுபட்டார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் யுத்த எதிர்ப்பு பிரசாரம் செய்தபோது கைது செய்யப்பட்டார். 6 மாத சிறைத்தண்டனை அடைந்தார்.
1942_ல் ஆகஸ்டு புரட்சி ஏற்பட்டது. புரட்சியை தூண்டியதாக சின்ன அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இவர் திருவாடானை சப்_ஜெயிலில் அடைக்கப்பட்டபோது அதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சிறைச்சாலை பூட்டை உடைத்து இவரை மக்கள் விடுதலை செய்தார்கள்.
புரட்சி செய்த மக்கள் மீது அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் 65 பேர் கொல்லப்பட்டார்கள். சின்ன அண்ணாமலை கையில் குண்டு பாய்ந்தது. காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.
இவரை உயிருடனோ அல்லது பிணத்துடனோ கொண்டு வந்து ஒப்படைப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசாங்கம் அறிவித்தது. அதனால் அவர் தலைமறைவாக காசி சென்று தங்கி இருந்தார். இவர் தந்தையை போலீசார் பிடித்து சென்று விட்டதால் சின்ன அண்ணாமலை திரும்பி வந்து போலீசில் ஆஜரானார்.
இவர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளில் இவருக்கு 41 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ராஜாஜி தலையிட்டு இந்த வழக்குகளில் அப்பீல் செய்தார். பெரிய கோர்ட்டில் வழக்கை உடைத்து 6 மாதத்தில் இவரை விடுதலை செய்ய வைத்தார்.
1943_ம் ஆண்டு சென்னை தியாகராயநகரில் "தமிழ்ப் பண்ணை" என்ற பதிப்பகத்தை சின்ன அண்ணாமலை தொடங்கினார். ராஜாஜி, "ரசிகமணி" டி.கே.சி., கலில், டி.எஸ்.சொக்க லிங்கம், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டார். "சங்கப் பலகை" என்ற வாரப்பத்திரிகை நடத்தினார்.
1944_ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார். இந்த விழாவில்தான் இவரை ராஜாஜி "சின்ன அண்ணாமலை" என்று முதன் முதலில் அழைத்தார். பின்னர் அந்த பெயர் பிரபலமானது.
சுதந்திரம் அடைந்த பிறகு ம.பொ.சிவஞானத்துடன் சேர்ந்தார். ம.பொ.சி. தலைமையில் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்தினார். பிரசாரம் செய்தார். திருத்தணி மீட்பு போராட்டத்தில் குதித்து 2 முறை கைதானார்.
1967 தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததும், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஊழியர்களுக்கு உற்சாகமூட்டினார். இளைஞர்களை காங்கிரசில் இழுப்பதற்காக அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தை தொடங்கி அதன் தலைவராக இருந்தார். 7 ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடித்தார்.
சின்ன அண்ணாமலை சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டார். "தர்ம ராஜா", "ஜெனரல் சக்கரவர்த்தி", "மனிதனும் தெய்வமாகலாம்", "நான் யார் தெரியுமா?", `சிரித்த முகம்", "கடவுளும் குழந்தையும்" ஆகிய படங்களை இவர் தயாரித்தார்.
சின்ன அண்ணாமலையின் மனைவி பெயர் உமையாள். அவர் இறந்து விட்டார். கருணாநிதி, ராமையா என்ற மகன்களும், மணிமேகலை என்ற மகளும் இருந்தார்கள்.
சின்ன அண்ணாமலை 60 வயதை எட்டியதால் 18_6_1980 அன்று அவருக்கு "மணி விழா" நடத்த சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் பட்டது. அன்றைய தினம் மாலையில் "பாம்குரோவ்" ஓட்டல் மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்த விழாவில் செட்டிநாடு ராஜா முத்தையா செட்டியார் தலைமையில் தி.மு.கழக தலைவர் கருணாநிதி பொன்னாடை போர்த்துவார் என்றும், மூப்பனார், நாஞ்சில் மனோ கரன் உள்பட அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதற்கு முன்னதாக காலையில் தி.நகர் பனகல்பார்க் அருகில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் வைதீக முறைப்படி "மணி விழா" நடந்தது. புரோகிதர்கள், சின்ன அண்ணாமலையை உட்கார வைத்து ஓமம் வளர்த்து மந்திரம் ஓதினார்கள். 60 தீர்த்த கலசங்கள் (சிறிய குடங்கள்) வைக்கப்பட்டு இருந்தது.
விழாவுக்கு அகில இந்திய இ.காங்கிரஸ் பொதுச்செயலாளர் கருப் பையா மூப்பனார், தமிழ்நாடு இ.காங்கிரஸ் தலைவர் எம்.பி.சுப் பிரமணியம், இளையபெருமாள், முன்னாள் முதல்_மந்திரி பக்தவச் சலம், சிவாஜிகணேசன் ஆகியோர் வந்திருந்தனர். இவர்களுடன் சின்ன அண்ணாமலை சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார்.
நடிகர்கள் மனோகர், சிவகுமார், பி.எஸ்.வீரப்பா, சிவதாணு, முத்து ராமன், டைரக்டர்கள் வி.சீனிவாசன், எஸ்.பி.முத்துராமன், வலம்புரி சோமநாதன், பஞ்சு அருணாசலம், பி.மாதவன், நடிகைகள் கே.ஆர். விஜயா, மனோரமா, பாடகி வாணி ஜெயராம் ஆகியோரும் வந்து இருந்தனர்.
விழாவின் கடைசி நிகழ்ச்சியாக சின்ன அண்ணாமலையை உட்கார வைத்து பூஜையில் வைக்கப்பட்ட குடத்தில் இருந்து தண்ணீரை ஊற்றி குளிப்பாட்டினார்கள்.
மூப்பனாரும், சிவாஜி கணேசனும் முதல் குடங்களில் இருந்த தண்ணீரை ஊற்றி விட்டு இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களின் கூட்டத்துக்கு சென்றுவிட்டனர். பிறகு பிரமுகர்களும், உறவினர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து குடங்களில் இருந்த தண்ணீரை சின்ன அண்ணா மலையின் தலையில் ஊற்றினர்.
10, 15 குடங்களில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருக்கும். பக்தவச்சலம் வந்து ஒரு குடத்தை எடுத்து தண்ணீர் ஊற்ற முயன்றார். அப்போது அவர் கை நடுங்கியது. உடனே சின்ன அண்ணாமலை அந்த குடத்தை வாங்கி தன் தலை மீது ஊற்றிக்கொண்டார்.
அதன்பிறகு சின்ன அண்ணாமலை மீது தொடர்ந்து தண்ணீர் ஊற்றப்பட்டது. அப்போது அவர் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததை, அருகில் நின்று கொண்டிருந்த ஒரு புகைப்படக்காரர் கவனித்தார். "நிறுத்துங்கள், நிறுத்துங்கள்" என்று அவர் கூச்சலிட்டதால் உடனே தண்ணீர் ஊற்றுவது நிறுத்தப்பட்டது.
சின்ன அண்ணாமலை பேச முடியாமல் மயங்கிய நிலையில் இருந்தார். அவர் உடல் வியர்த்துக் கொட்டிக்கொண்டிருந்தது. உடனே அவர் உடலை துண்டினால் துவட்டி, பெஞ்சில் படுக்க வைத்தனர். அருகில் இருந்த சிவாஜி கணேசனின் டாக்டர் பால கிருஷ்ணன் அவர் உடல் நிலையை பரிசோதித்து உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக வேண்டும் என்றார்.
சின்ன அண்ணாமலையை காரில் படுக்க வைத்தனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள எச்.எம். ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு போனார்கள். பட அதிபர் சித்ரமகால் கிருஷ்ணமூர்த்தி, நடிகர் மனோகர் ஆகியோர் கூடவே சென்றனர்.
வழியிலேயே சின்ன அண்ணாமலை மரணம் அடைந்துவிட்டார். காலை 10_15 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு போய் சேர்ந்தபோது, டாக்டர் பி.சி.ரெட்டி அவர் உடலை பரிசோதித்து பார்த்துவிட்டு "உயிர் போய்விட்டது" என்று அறிவித்தார்.
ஆயினும் செயற்கை முறையில் மூச்சு வரச் செய்ய முயன்றனர். பிராண வாயு செலுத்தப்பட்டது. ஆனால் பலன் இல்லை. சின்ன அண்ணாமலைக்கு ஏற்கனவே ரத்தக்கொதிப்பு இருந்தது. தொடர்ந்து தண்ணீர் ஊற்றப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதன் விளைவாக அவர் மரணம் அடைந்து இருக்கலாம் என்று டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.
பின்னர் சின்ன அண்ணாமலை உடல் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, எம்.பி. சுப்பிரமணியம், ம.பொ. சிவஞானம், கண்ணதாசன், முசிறி புத்தன் மற்றும் திரை உலக பிரமுகர்கள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
சிவாஜி கணேசன், சின்ன அண்ணாமலையின் உடலை பார்த்து தேம்பித் தேம்பி அழுதார். சின்ன அண்ணாமலை உடல் மீது காங்கிரஸ் கொடி போர்த்தப் பட்டு இறுதி ஊர்வலம் கொட்டும் மழையில் சென்றது. அந்த இறுதி ஊர்வலத்தில் சிவாஜிகணேசன், தளபதி சண்முகம், சிவாஜியின் அண்ணன் தங்கவேலு, சிவாஜி மகன் தளபதி ராம்குமார், ராஜசேகரன் எம்.எல்.ஏ., புருசோத்தமன் எம். எல்.ஏ. மற்றும் ஏராளமான சிவாஜி ரசிகர்கள் நடந்தே சென்றார்கள். கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில், உடல் தகனம் செய்யப்பட்டது.
அங்கு நடந்த அனுதாப கூட்டத்தில் தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி, அகில இந்திய இ.காங்கிரஸ் பொதுச்செயலாளர் மூப்பனார், நடிகர் சிவாஜி கணேசன், இளையபெருமாள், உமாபதி, எர்னால்டு பால், தளபதி சண்முகம் ஆகியோர் பேசினார்கள்.
சின்ன அண்ணாமலை மறைவுக்கு முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர்., தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் அனுதாப செய்தி வெளி யிட்டு இருந்தார்கள். எம்.ஜி.ஆர். தனது அனுதாப செய்தியில், "சின்ன அண்ணாமலை மறைவின் மூலம் தமிழகம் ஒரு நல்ல தொண்டரை, தலைவரை, சொற்பொழிவாளரை, அரும் திறன்கள் பல கொண்ட ஆற்றல் உள்ளவரை இழந்து விட்டது" என்று கூறியிருந்தார்.
கருணாநிதி தனது இரங்கல் செய்தியில், "அடலேறு போன்ற தோற்றமும், அன்பு உள்ளமும் கொண்ட தியாக வீரராக திகழ்ந்தவர். தன்னுடைய எழுத்தால், பேச்சால் அனைவரையும் மகிழ்வித்தார். அவர் நம்மை அழவைத்து விட்டு போய்விட்டார்.
"சொன்னால் நம்பமாட்டீர்கள்" என்ற புத்தகத்தை அவர் (சின்ன அண்ணாமலை) படைத்தார். அவர் மறைவும் அப்படித்தான் ஆகிவிட்டது" என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment