Monday, April 26, 2010

"இந்திரா காந்தியை தோற்கடிப்பேன்" சபதத்தை நிறைவேற்றிய ஜெயப்பிரகாசர்
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்டவர், மகாத்மாகாந்தியிடமும், பண்டித நேருவிடமும் பற்றும் பாசமும் கொண்டவர். அப்படியிருந்தும் இந்திராகாந்தி "நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தார். பொங்கி எழுந்தார். 30 ஆண்டு காலம் டெல்லியில் தொடர்ந்து ஆட்சி நடத்திய காங்கிரசைப் பதவியை விட்டு அகற்றி, எதிர்க்கட்சியினரை ஆட்சியில் அமர்த்தினார். அவர் தான் ஜெயப்பிரகாஷ் நாராயணன்.
உத்தரபிரதேசம் _ பீகார் எல்லையில் உள்ள பலார்லானி என்ற கிராமத்தில் 1902 அக்டோபர் 11_ந்தேதி ஜெயப்பிரகாசர் பிறந்தார். தந்தை பெயர் ஹப்சுத்பால், தாயார் பெயர் புல்ராணி. இளமையில் மிகவும் சாதுவானவராக ஜெயப்பிரகாசர் விளங்கினார். பள்ளியில் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். பள்ளி இறுதித் தேர்வில் முதல் மாணவராகத் தேறியதால், உபகாரச்சம்பளம் கிடைத்தது. கல்லூரியில் சேர்ந்தார். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும்போது, காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் எழுதிய கட்டுரைகளையும் படித்தார். அவை அவரைக் கவர்ந்தன.
ஜெயப்பிரகாசருக்கு 18 வயது ஆனபோது, அவருக்குத் திருமணம் நடந்தது. மனைவி பெயர் பிரபாவதிதேவி. பின்னர் பிரபாவதியின் தங்கைக்கும், காங்கிரசின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான ராஜேந்திர பிரசாத்தின் மகனுக் கும் திருமணம் நடந்தது.
ராஜேந்திரபிரசாத்தின் உறவு காரணமாக, ஜெயப்பிரகாசரின் அரசியல் ஆர்வம் மேலும் வளர்ந்தது.
ஜெயப்பிரகாசருக்கு திருமணமாகி ஓராண்டு ஆகியிருந்தது. காந்தியடிகள் "ஒத்துழையாமை" இயக்கத்தை தொடங்கினார். அதனால் அவர் கல்லூரியை விட்டு விலகினார். பின்னர் இந்திய முறையில் கல்வி கற்பிக்கும் பீகார் வித்யா பீடத்தில் சேர்ந்து படித்து "இண்டர் மீடியட்" பரீட்சையில் தேறினார்.
இந்தச் சமயத்தில் அமெரிக்கா பற்றிய சில புத்தகங்களைப் படித்தார். அங்கு பல மாணவர்கள் வேலை செய்து கொண்டே மேல்படிப்பு படிப்பதாக அறிந்தார். அதனால் அமெரிக்காவுக்குச் சென்று உயர் கல்வி கற்க விரும்பினார்.
இதற்கு அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை. எனினும், பெற்றோருக்கும், மனைவிக்கும் கூடத் தெரியாதபடி, "பாஸ்போர்ட்", "விசா" வாங்கினார். அமெரிக்கா செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, மனைவியிடம் மட்டும் விஷயத்தைச் சொன்னார்.
கல்வி கற்பதில் கணவருக்கு உள்ள ஆர்வத்தைக்கண்ட பிரபாவதி மறுப்பு ஏதும் சொல்லவில்லை. "நீங்கள் அமெரிக்கா போய் வாருங்கள். நீங்கள் திரும்பி வரும் வரை, நான் காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருக்கிறேன்" என்றார்.
1922_ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 16_ந்தேதி கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு பயணமானார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை அடைந்தார். அங்கு இந்திய மாணவர்களுடன் தங்கினார். பழத்தோட்டங்களில் வேலை பார்த்தார். இரவும் பகலுமாக உழைத்தார். தேவையான பணம் சேர்ந்தது. கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.
"பி.ஏ." பட்டம் பெற்றபின், உதவிப் பேராசிரியர் வேலை கிடைத்தது. வேலை பார்த்துக்கொண்டே "எம்.ஏ." படித்துப் பட்டம் பெற்றார்.
"டாக்டர்" பட்டம் பெறுவதற்கு படிக்க விரும்பினார். இந்த நிலையில் அவர் தாயார் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கடிதம் வந்தது. எனவே, மேற்கொண்டு படிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு இந்தியா திரும்பினார்.
பெற்றோரையும், மனைவியையும் 7 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்தார், ஜெயப்பிரகாசர். குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ந்தனர். காந்திஜியைச் சந்திக்க விரும்பிய ஜெயப்பிரகாசர், மனைவியுடன் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றார்.
காந்தியின் அன்பில் மனம் நெகிழ்ந்து ஜெயப்பிரகாசர் ஆசிரமத்திலேயே தங்கிவிட்டார். இந்தச் சமயத்தில், லாகூரில் காங்கிரஸ் மாநாடு நேரு தலைமையில் நடந்தது. அப்போது நேருவிடம் ஜெயப்பிரகாசரைக் காந்தி அறிமுகம் செய்து வைத்தார். நேருவும், ஜெயப்பிரகாசரும் நண்பர்கள் ஆனார்கள்.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேசத்துக்கு உழைக்க விரும்புவதாக நேருவிடம் ஜெயப்பிரகாசர் தெரிவித்தார். நேரு மகிழ்ச்சி அடைந்தார். காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவின் செயலாளராக அவரை நியமித்தார்.
காங்கிரஸ் நடத்திய பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்ற ஜெயப்பிரகாசர் சோசலிசக் கருத்துக்களில் ஈர்க்கப்பட்டார். 1933_ம் ஆண்டு சிறையில் இருந்து வெளிவந்த பின், காங்கிரஸ் கட்சியின் உட்பிரிவாக "காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி" என்ற அமைப்பை நிறுவினார்.
மூன்று ஆண்டுகள், சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, சோசலிசக் கருத்துக்களைப் பரப்பினார். 1940_ம் ஆண்டு பிப்ரவரியில், அரசுக்கு எதிராகப் பேசியதாக குற்றம் சாட்டி ஜெயப்பிரகாசரைப் பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. பல மாதங்கள் கழித்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட ஜெயப்பிரகாசர், "இனி போலீஸ் கையில் சிக்காமல் மாறு வேடத்தில் சுற்றுப்பயணம் செய்யவேண்டும். மக்களை புரட்சிக்குத் தூண்டவேண்டும்" என்று தீர் மானித்தார். அதன்படியே பல ஊர்களுக்கு மாறுவேடத்தில் சென்றார். ஆனால் போலீசார் அவரைக் கண்காணித்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1942_ல் "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தை காந்தியடிகள் தொடங்கினார். காந்தியும், மற்ற தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயப்பிரகாசர் உள்ளம் துடித்தது. சிறையில் இருந்து தப்பி, மக்களைப் புரட்சிக்குத் தயார் செய்ய "கொரில்லாப்படை" அமைக்கத் தீர்மானித்தார். அதன்படி, அவரும் மற்றும் 5 பேரும் சிறையில் இருந்து தப்பிச் சென்றார்கள். ஜெயப்பிரகாசர் நேபாள நாட்டுக்குச் சென்றார். வெள்ளையர்களை எதிர்த்துப் போராட காங்கிரஸ் தொண்டர்களுக்கு போர்ப் பயிற்சி அளித்தார்.
ஜெயப்பிரகாசரைப் பிடிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. முடியவில்லை. இதனால், ஜெயப்பிரகாசரை உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைத்தால், ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தது.
ஜெயப்பிரகாசரின் புகைப்படங்களை நேபாள போலீசுக்கு பிரிட்டிஷ் அரசு அனுப்பி, அவரைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு கூறியது. படங்களின் உதவியால் ஜெயப்பிரகாசரை நேபாள போலீசார் கைது செய்து, காவலில் வைத்தனர்.
ஜெயப்பிரகாசரிடம் போர்ப் பயிற்சி பெற்ற தொண்டர்கள், சிறைக்காவலாளிகளைத் தாக்கி, ஜெயப்பிரகாசரை விடுவித்தனர். ஜெயப்பிரகாசரும், மற்றவர்களும் காடுகளையும், மலைகளையும், ஆறுகளையும் தாண்டி, வங்காளத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அதன் பிறகும் ஜெயப்பிரகாசர் ஓயவில்லை. மாறு வேடத்தில் பல இடங்களுக்குச் சென்று, மக்களைப் புரட்சிக்குத் தூண்டினார். இந்நிலையில், அவர் டெல்லியிலிருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு மாறுவேடத்தில் சென்றபோது, போலீசார் அவரை அடையாளம் கண்டுகொண்டு கைது செய்தனர். அவரைக் கால வரம்பு இன்றி சிறை வைக்கும்படி பிரிட் டிஷ் அரசு உத்தரவிட்டது.
1945_ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தொழில் கட்சி பதவிக்கு வந்தபின், இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பது பற்றிக் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதைத்தொடர்ந்து ஜெயப்பிரகாசர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தான் அமைக்கவேண்டும் என்ற ஜின்னாவின் கோரிக்கையை, ஜெயப்பிரகாசர் எதிர்த்தார். முடிவில், பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவித்த போது, ஜெயப்பிரகாசரின் "காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி", காங்கிரசை விட்டு விலகியது. கட்சியின் பெயரையும் "சோசலிஸ்ட் கட்சி" என்று ஜெயப்பிரகாசர் மாற்றினார்.
சோசலிசக் கொள்கையை பரப்பி வந்த ஜெயப்பிரகாசர், 1951_ல் வினோபா தொடங்கிய பூமிதான இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். 1954_ம் ஆண்டு ஏப்ரல் 14_ந்தேதி சர்வோதய மாநாடு வினோபா தலைமையில், கயாவில் போதி மரத்தடியில் நடந்தது. மாநாட்டுக்கு நேரு, ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், கிருபளானி ஆகிய தலைவர்களும் வந்திருந்தனர்.
இந்த மாநாட்டில் ஜெயப்பிரகாசர், தான் அரசியலில் இருந்து விலகி, பூமிதான இயக்கத்திற்காக வாழ்நாளை அர்ப்பணிக்க முடிவு செய்து இருப்பதாக அறிவித்தார்.
1973_ம் ஆண்டு ஏப்ரல் 15_ந்தேதி ஜெயப்பிரகாசரின் மனைவி பிரபாவதி காலமானார். மனைவியை இழந்த ஜெயப்பிரகாசர் சோகமே உருவானார். அவர் உடல் நிலை சீர்கேடு அடைந்தது.

இந்தச் சமயத்தில் இந்திய வரலாற்றிலும், ஜெயப்பிரகாசர் வாழ்க்கையிலும் பெரும் திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி, பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று, 1975_ம் ஆண்டு ஜுன் 12_ந்தேதி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இந்தத் தீர்ப்பை ஏற்று, இந்திராகாந்தி பதவி விலக வேண்டும் என்று ஜெயப்பிரகாசர் கூறினார். ஜுன் 25_ந்தேதி டெல்லியில் ஜனதா அணியின் சார்பில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரகாசர் பேசுகையில், "இந்திரா காந்தி இன்னும் பதவி விலகாமல் இருக்கிறார். அவர் தலைமையில் உள்ள அரசு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. அந்த அரசை மக்கள் புறக்கணிக்க வேண்டும். வரி கொடுக்கக்கூடாது. இந்திரா காந்தி விலகவேண்டும் என்று இந்தியா முழுவதும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும்" என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து ஜெயப்பிரகாசர், மொரார்ஜி தேசாய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மறுநாள் (ஜுன் 26_ந்தேதி) இந்தியா முழுவதும் "நெருக்கடி நிலை" பிரகடனம் செய்யப்பட்டது. ஜெயப்பிரகாசர் உடல் நிலை ஏற்கனவே சீர்கெட்டிருந்தது. அதனால் அவர் சண்டிகார் ஆஸ்பத்திரியில் சிறை வைக்கப்பட்டார். அவரைச் சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
அவர் உடல் நிலை மேலும் மோசம் அடைந்ததால், பம்பாய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டதாக அறிவித்தனர். அது முதல் ஜெயப்பிரகாசர் அவ்வப்போது "டயாலிசிஸ்" முறை மூலம் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி கொண்டு உயிர் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.
"விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்" என்று இந்திரா காந்தி அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஜெயப்பிரகாசரும் மற்ற தலைவர்களும் 19 மாத சிறை வாசத்துக்குப்பின் விடுதலை செய்யப்பட்டனர்.
"வருகிற தேர்தலில், இந்திராகாந்தியையும், காங்கிரசையும் தோற்கடிப்பேன்" என்று சபதம் செய்தார், ஜெயப்பிரகாசர். ëஅவர் தெரிவித்த யோசனையின் பேரில், எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்தன. "ஜனதா கட்சி" என்ற புதிய கட்சி உதயமாயிற்று.
உடல் நலம் குன்றியிருந்த போதிலும், ஜெயப்பிரகாசர் காங்கிரசை எதிர்த்துப் பல கூட்டங்களில் பேசினார். ஜெயப்பிரகாசரின் அயராத முயற்சி வெற்றி பெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
மத்தியில் 30 ஆண்டுகள் நடைபெற்று வந்த காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்து, ஜனதாகட்சி ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். தன் சபதத்தை நிறைவேற்றிய பெருமிதத்துடன், 1979 அக்டோபர் 8_ந்தேதி "லோக்நாயக்" ஜெயப்பிரகாசர் காலமானார்.

No comments:

Post a Comment