Sunday, April 25, 2010


'ஜாதி பார்முலா'வுக்கு சிதம்பரம் திடீர் முக்கியத்துவம்:கட்சியினர் மீது பாச மழை; மாற்றியது எது?

Latest indian and world political news information

நக்சல்களின் தொடரும் அட்டகாசத்தால் ப.சிதம்பரத்திற்கு ஒரு பக்கம் தலைவலி இருந்தாலும், உள்ளூர் அரசியலை உன்னிப்பாக கவனிக்க எப்போதும் தவறுவதில்லை. தனது ஆதரவாளர்கள் அழைக்கும் குடும்ப நிகழ்ச்சி, கட்சி விழா, அரசியல் பொதுக்கூட்டங்களில் சிதம்பரம் பங்கேற்று வருகிறார். தன்னால் கலந்து கொள்ள முடியாத பட்சத்தில், தனது அரசியல் வாரிசான கார்த்தி சிதம்பரத்தை அனுப்பி விடுகிறார்.இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில், கார்த்தி சிதம்பரத்திற்கு ழுழு சுதந்திரம் அளித்தார். தேர்தல் குறித்து, தனது ஆலோசனைகளை மகனுக்கு வழங்கியதோடு, தன் பங்குக்கு நிர்வாகிகள் தேர்தலில் சில வெற்றிகளையும் பெற்றுத் தந்தார்.

'கட்சியினரிடம் கலந்தாலோசிக்க மாட்டார், என சிதம்பரம் மீது விமர்சனம் எழுந்த காலமும் உண்டு. அந்த விமர்சனத்தை தனது அணுகுமுறை மாற்றத்தினால் தவிடுபொடியாக்கியுள்ளார். தற்போது, தன்னை தேடி வரும் கட்சியினரை தனக்கு சரி சமமாக அமர வைத்து, அவர்களிடம் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கிறார்.சொந்த தொகுதியான சிவகங்கைக்கு சிதம்பரம் கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களினால், 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தனக்கு மிக எளிதாக வெற்றி கிடைக்கும் என சிதம்பரம் கருதினார். ஆனால், தேர்தலில் அவர், 'பகீரத' முயற்சியில் தான் வெற்றி பெற முடிந்தது.இதற்கு காரணம் குறிப்பிட்ட சில ஜாதி ஓட்டுகள் அவரை அமோக வெற்றியை தரவிடாமல் சதி செய்துள்ளது என தெரியவந்தது. இதனால் அனைத்து ஜாதி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெறுவதற்காக, அச்சமுதாய பிரதிநிதிகளுக்கு அரசு பதவிகள் மற்றும் கட்சி பதவிகளில் இடம்பெற வைக்கும் 'ஜாதி பார்முலா' வை சிதம்பரம் கையாண்டு வருகிறார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் வன்னியர் சமுதாயத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆரணி, ஆவடி பகுதிகளில் வன்னியர் சமுதாயத்தினரால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் பங்கேற்றார். தாழ்த்தப்பட்ட மக்களை ஈர்க்கும் வகையில், கடந்த 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவிலும் ஜோராக கலந்து கொண்டார். அவ்விழாவில், 2004ம் ஆண்டு தான் நிதி அமைச்சராக இருந்த போது தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்புக்கூறு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியதை பட்டியலிட்டார்.யாதவர் சமுதாயத்தின் ஓட்டுக்களை கவருவதற்காக, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த வரதராஜனை சிதம்பரம் அணி நிறுத்தி ஆதரித்தது. இந்தியன் வங்கியின் டைரக்டராக பணியாற்றும் யாதவர் சமுதாயத்தை சேர்ந்த சரத்சந்தரின் இல்லத் திருமண விழா, சமீபத்தில் மயிலாடுதுறையில் நடந்தது.

அதில், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பொன்.கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, 'சுதந்திரம் அடைந்த பின், யாதவர் சமுதாயத்திலிருந்து ஒருவர் கூட எம்.பி.,யாகவில்லை. கடந்த தேர்தலில் யாதவர் சமுதாயத்தை சேர்ந்த அழகிரியை எம்.பி.,யாக்கி டில்லிக்கு அனுப்பிய பெருமை சிதம்பரத்திற்கு உண்டு. நெல்லை மாவட்டத்தில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த வானமாமலைக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இயக்குனர் பதவி வாங்கி கொடுத்தார்' என்றார்.

சிதம்பரம் பேசும்போது, 'யாதவர் சமுதாயம் பெரிய சமுதாயம். அவர்கள் நன்றாக படிக்க வேண்டும். குறிப்பாக யாதவப் பெண்கள் நன்றாக படிக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்' என்றார்.ஆக, மொத்தத்தில் ஜாதி ரீதியாக அனைத்து சமுதாயத்தினரையும் கவரும் வகையில் சிதம்பரத்தின் அரசியல் பயணம் தொடர்கிறது. இந்தப் பயணம், அவரது தொலை நோக்குத் திட்டத்திற்கு வெற்றியை தேடித் தருமா என்பதை காலம் தான் நிர்ணயிக்க வேண்டும்.

No comments:

Post a Comment