Sunday, April 25, 2010

‘புத்தபிட்சு’ சத்யராஜ்!




‘பேய் புடிச்சமாதிரி ஆட்டற பரபரப்பு வாழ்க்கையில..வாய்விட்டு சிரிக்கறதுக்கு வாய்ப்பில்லாம போச்சே‘னு நான் நினைக்கற நேரமெல்லாம் ‘கெக்கெக்கே‘னு சிரிக்கவைக்கற சம்பவங்கள் எக்கச்சக்கமா இருக்கு! அதுல அதிமுக்கியமானது ‘சத்யராஜும் மணிவண்ணனும் கைகோத்து நடத்துன காமெடி கூத்து‘!

மணிவண்ணனின் ‘நூறாவது நாள்’ படத்தை மறக்கமுடியுமா? அதுல சத்யராஜ்தானே வில்லன்! அப்போ அவருக்கு தலையில கொஞ்சம் அடர்த்தியா முடி இருந்த காலம். ஆனா மணிவண்ணனோ ‘‘தலைவா..உங்களைப் பாத்தா வில்லன் மாதிரியே தெரியலை. ஒரு சேஞ்சுக்கு மொட்டை அடிச்சுட்டு வாங்க‘ன்னுருக்காரு.

நம்மாளுதான் ‘பிறவி நடிகராச்சே‘! ‘சரி‘ன்னு சொல்லிட்டு ‘பலூன் விடற‘ சந்தோஷத்தோட சலூன் போயிருக்காரு. ‘பளபள‘ன்னு மொட்டைய போட்டு..
‘பளீர்‘னு வந்து மணிவண்ணன் எதிர்ல நின்னுருக்காரு. சத்யராஜை மேலையும் கீழையுமா
பாத்த மணிவண்ணன் ‘‘என்ன தலைவரே! ஒரு டெர்ரர் லுக்கே உங்ககிட்ட இல்லையே! அசப்புல பாத்தா ஒரு புத்தபிட்சு மாதிரியில்ல இருக்கீங்க!‘‘ன்னு ‘சின்னவயசுல பாத்த
‘கோத்தபய‘ மாதிரினு நெனைச்சு‘ நக்கலா சிரிச்சுருக்காரு!

‘சும்மா இருந்தவனை சூடேத்தி மொட்டை போட வெச்சு..
இப்போ அதுல ஆம்லெட் வேற போடறாரே‘னு கடுப்பாயிட்டாரு சத்யராஜ். எக்கச்சக்க
கோவத்தோட பககத்திலிருந்த மேக்கப் ரூமுக்கு போனவரு..அங்கிருந்த ‘செக்கச்செவேர்‘
சாயத்தை எடுத்து தன்னோட மூஞ்சியில தெளிச்சுகிட்டாரு. ஒரு ‘முட்டை ஃப்ரேம்‘
கண்ணாடியை எடுத்து மாட்டிகிட்டாரு.

முகத்துலயும், மூக்குக்கண்ணாடியிலயும் ‘ரத்தம்‘ சொட்டச்சொட்ட மணிவண்ணன் முன்னாடி போயி ‘தடால்‘னு நிக்கறாரு. லேசா ஆடிப்போன மணி ‘‘ஆஹா தலைவரே! பிறவி வில்லன் மாதிரி பிரமாதமா இருக்கு இந்த கெட்டப்பு!’’னு பிரமிக்கறாரு. சத்யராஜ் ‘கொலைகார மொட்டையா‘ கொண்டாடப்பட்ட கதை இப்படித்தான் ஆரம்பமாச்சு.

இதே மணிவண்ணன் டைரக்ஷன்ல ‘முதல் வசந்தம்‘ படத்துல
‘குங்குமப்பொட்டு கவுண்டர்’ கேரக்டர்ல ‘நம்ம வயிறு சிரிச்சு புண்ணாகற அளவுக்கு‘
சத்யராஜ் காமெடியில பிரிச்சு மேஞ்சிருப்பாரு! ஆனா இதுல நிஜ காமெடி என்னன்னா..
அந்தப் படத்தோட முதல் ஷாட் எடுக்கறவரைக்கும் சத்யராஜ் கேரக்டருக்கு இப்படியொரு பேரே கிடையாது!

சென்னை ஒய்.எம்.சி.ஏ. கிரவுண்டுல முதல் ஷாட் எடுக்கறாரு மணிவண்ணன். தான் ஆசையா வளக்கற ஒரு குதிரைக்கு சத்யராஜ் குங்குமப்பொட்டு வெக்கிற மாதிரி சீன்! அப்போ பாத்து சத்யராஜுக்கு ‘பளிச்னு ஒரு ஐடியா வந்துருச்சு.
உடனே மணிவண்ணனைப் பாத்து ‘‘தலைவரே! குதிரைக்கு பொட்டு வெச்ச கையோட எனக்கும் ஒரு பொட்டு வெச்சுக்கறேன். அப்படியே நம்ம கேரக்டருக்கும் ‘குங்குமப்பொட்டு கவுண்டர்’னு ஒரு பேரையும் வெச்சுக்கலாமே!’’னு ‘பொட்டுல‘ அடிச்ச மாதிரி சொல்றாரு!

மயிர்கூச்செரிய ‘அடேங்கப்பா‘னு ஆச்சரியமா சத்யராஜை ஒரு
பார்வை பாத்த மணிவண்ணன் ‘‘ஏந்தலைவரே! அதென்ன குங்குமப்பொட்டு கவுண்டரு? இப்படியொரு பேரா?’’னு கேட்டாரு. ‘‘ஆமா தலைவரே! எங்க ஊர்ல ‘மில்லு கவுண்டரு, கொள்ளு கவுண்டரு, பேரிக்கா கவுண்டரு, அமெரிக்கா கவுண்டரு‘ன்னெல்லாம் ‘காரணப் பேருக’ நெறையா இருக்கு’’ன்னு மத்தாப்பு சிரிப்போட கித்தாப்பா சொல்லியிருக்காரு
சத்யராஜ்.

‘அப்படியா சேதி‘ன்னு ‘டபுள் ஓகே‘ பண்ணிட்டாரு மணி! இதே
ஜோர்ல ‘முதல் வசந்தம்‘ படத்துல அப்பப்போ சத்யராஜ் தன்னோட ‘சொந்த நக்கலையும்‘ சொருகி கைதட்டல் வாங்குனது தனி! ஒரு சீன்ல சத்யராஜ், தான் வளர்க்கற குதிரையை
பாத்து ‘‘என்னம்மா கல்யாணி..சௌக்கியமா?‘‘னு கேப்பாரு! உடனே அவர் பக்கத்திலிருக்கற வேலைக்காரர் ‘‘ஏனுங்க கவுண்டரே! ஆம்பளை குதிரைக்குப்போயி பொம்பளை பேரை வெச்சு கூப்பிடறீங்களே?’’ம்பாரு!

அதுக்கு உடனே சத்யராஜ் பதிலடியா ‘‘அப்பத்தான்டா நீங்கள்லாம் இந்த குதிரைய நல்ல்ல்லா தேச்சு குளிப்பாட்டுவீங்க!’’ன்னு ‘சரக்‘குன்னு தன்னோட ‘சொந்த சரக்கையும்‘ அள்ளிவீச..அந்த லொள்ளுக்கு தியேட்டரே ‘கொல்‘லுன்னு சிரிச்சுச்சுல்ல!

‘ரெட்டைக்குழல் டுப்பாக்கியா‘ சத்யராஜும் மணிவண்ணனும் இப்படி அலப்பறை பண்றப்போ..மூணாவது ‘பீரங்கியா‘ பட்டை கிளப்பற
கவுண்டமணியும் இவங்களோட சேந்தா..கட்டைகூட ‘கட்டையில போறவரைக்கும்‘
சிரிச்சுதானே ஆகணும்!

சில சமயங்கள்ல மணிவண்ணன் கொஞ்சம் வில்லங்கமான பார்ட்டி! ஷூட்டிங்கை ஸ்டார்ட் பண்ணிட்டு திடீர்னு சத்யராஜை பாத்து ‘‘தலைவரே! முகத்துல
ஆவேசம் கொப்பளிக்க ஓடுங்க!’’ம்பாரு சீரியஸா! டைரக்டர் சொல்லிட்டாரேன்னு
சத்யராஜும் வேகாத வெயில்ல வெறிகொண்ட மட்டும் ‘மாங்கு மாங்கு’ன்னு
தெருத்தெருவா ஓடிக்கிட்டே இருப்பாரு!

கேமராவும் துரத்திக்கிட்டு வந்து ஷூட் பண்ணிகிட்டே இருக்கும்! ஆனா மணிவண்ணன் மட்டும் ‘ஜில்‘லுன்னு நிழல்ல நின்னுகிட்டு ‘குப்குப்‘புன்னு
தம்மடிச்சுகிட்டே இருப்பாரு! இதைப்பாத்த சத்யராஜுக்கு ‘எங்கியோ தப்பு‘ன்னு பட்சி
சொல்லுது! அதை ரொம்பநாள் ஆராய்ஞ்ச கவுண்டர்தான் பிச்சி பீறாய்ஞ்சுட்டாரு!

எடுக்கப்போற சீனுக்கான டயலாக் ஏதும் ‘க்ளிக்’ ஆகலேன்னா..
உடனே மணிவண்ணன் சத்யராஜை ‘ஓடுறா ராமா‘ ரேஞ்சுல விரட்டிவிட்டுட்டு..ஓரமா
நின்னு டயலாக்கை யோசிச்சுகிட்டிருப்பாராம்!

அடிக்கடி மணி இப்படி பண்றதைப் பாத்த கவுண்டமணி
சைலன்ட்டா ஒருநாள் சத்யராஜ்கிட்ட ‘‘ஆஹா! பார்ட்டி இப்பதான் தூண்டிலை
போட்டிருக்காப்ல! இனி மீன் புடிச்சு, அறுத்து கொழம்பு வெச்சு படைக்கறதுக்குள்ள ஓடி ஓடி உங்க நாக்கு அந்துபோகும்..எங் கொடலு வெந்துபோகும்!‘‘னு நொந்துபோய் சொல்ல.. அந்த லந்துக்கு யூனிட்டோட சந்துபொந்தெல்லாம் சிரிச்சதாம்!
........................................................நன்றி அந்தனன்.....................................

No comments:

Post a Comment