Saturday, May 1, 2010

சிறைக்குள் தியானம் செய்ய நித்யானந்தாவுக்கு அனுமதி; சிறப்பு பூஜைகளும் நடத்தினார்

பாலியல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நித்யானந்தா சாமியாரை கர்நாடக போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். அவரை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து 8 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். நேற்று விசாரணை முடிந்தது.
நேற்று மாலை நித்யானந்தா மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். ராம்நகர் மாவட்ட நீதிபதி அவரை வரும் 13-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நித்யானந்தா ராம்நகர் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது அறையில் அவரது சீடர்களில் ஒருவரான நித்ய பக்தானந்தாவும் அடைக்கப்பட்டுள்ளார். சிறை அறைக்குள் தான் தியானம் செய்ய அனுமதி தர வேண்டும் என்று கோர்ட்டில் நித்யானந்தா கேட்டார். அதை ஏற்று மாஜிஸ் திரேட்டு அனுமதி வழங்கினார்.
இதனால் இன்று காலை நீண்டநேரம் சிறை அறைக்குள் நித்யானந்தா தியானத்தில் ஈடுபட்டார்.
அறைக்குள் சிறப்பு பூஜைகள் நடத்தவும் நித்யானந்தாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பூஜை பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஜெயிலில் எல்லோருக்கும் கொடுப்பது போன்ற உணவு வேண்டாம் என்று நித்யானந்தா மறுத்தார். காரம் இல்லாத சாதாரண உணவு மட்டுமே வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு ஏற்ப அவருக்கு உணவு கொடுக்கப்பட்டதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நித்யானந்தா தன்னை ஜாமீனில் விடக்கோரி மனு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது அன்று தெரியவரும்.
இதற்கிடையே போலீஸ் விசாரணைக்கு நித்யானந்தா நன்கு ஒத்துழைத்தது தெரிய வந்துள்ளது. போலீசார் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளாராம். சில சிக்கலான கேள்விகளுக்கு மட்டும் அவர் எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாகி விட்டதாக கூறப்படுகிறது.
நித்யானந்தாவிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் அனைவரும், நித்யானந்தா மிக மிக புத்திசாலியாக உள்ளார். அவரது சில பதில்கள் சிந்திக்க வைத்தன என்றனர்.
இவ்வளவு புத்திசாலியான நீங்கள் ஏன் புகார்கள் கூறப்பட்டதும் தலைமறைவாக இருந்தீர்கள்? என்று ஒரு போலீஸ் அதிகாரி கேட்டாராம். அதற்கு நித்யானந்தா கூறுகையில், பத்திரிகை நிருபர்களை நினைத்து பயந்து விட்டேன். அவர்கள் கேட்கும் ஏடாகூடமான கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது என்பது புரியாததால்தான் தலை மறைவாக இருந்தேன் என்றார்.

No comments:

Post a Comment