Thursday, April 29, 2010

அஜீத்தின் தொப்பையும், அடங்காத கோபமும

சினிமாவுல மனுஷன பார்க்குறதே கஷ்டம். மனுசனாவும் இருந்துகிட்டு, நடிகனாவும் வாழ்ந்துகிட்டு இருக்கிற ஒரு ஆள பற்றி எழுதினா, படிக்கிற நடிகருங்களுக்கு 'பந்தா' பண்ணுற பழக்கம் விடுமே? அதுக்காகதான் இந்த அல்டிமேட் பதிவுகள்! ஊரு ஒலகத்துக்கெல்லாம் இவரு 'தல'யா இருந்தாலும், ஓராயிரம் பேருக்கு தல(£)ய்லாமா! கர்...புர்...னு சைட்லே கேட்கிற சவுண்டுக்கெல்லாம் நாங்க மசியறதா இல்லை மக்களே...

எலக்ஷன் அன்னைக்கு காலையிலே ஏழரை மணிக்கெல்லாம் வந்து க்யூவிலே நின்று ஓட்டு போட்டார் அஜீத். ஸ்டில்லை பார்த்தாலே தெரிஞ்சுருக்கும். கொஞ்சம் நீளமான க்யூதான். அங்கே நின்னவங்க "நீங்க நேரா போயி வோட்டு போடுங்க சார். எதுக்கு க்யூவிலே நிக்கிறீங்கன்னு கேட்ட பிறகும் பரவாயில்லே"ன்னு சொன்னாராம். அவரு அப்படிதான்!

நிஜத்தை ஏத்துக்கிற பொறுமையும், நெருப்பை தாங்கிக்கிற வலிமையும் உள்ளவரு. இப்போதான் அவரு ஸ்மார்ட்! நாலைஞ்சு படங்களுக்கு முன்னாடி, கட்டி வைச்ச மெத்த மாதிரி 'கனம்ம்ம்மா' இருந்த நேரம். அவரு தொப்பைய கிண்டல் அடிச்சு ஒரு ஹீரோ தனது படத்திலே ஒரு ஆட்டத்தையே வைச்சிருந்தாரு. இவருகிட்டே பேட்டின்னு போனவங்க எல்லாரும், "தொப்பைய கொறக்கலாமே?"ங்கிறதை தொடர் கேள்வியா கேட்டிருப்பாங்க போலிருக்கு. நான் போயிருந்த நேரமும் அப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டு அடக்கமா உட்காந்திருந்தாரு ஒரு நிருபர். நான் கொஞ்சம் லேட்டா போனதால அவரு எனக்கு முன்னாடி என்ன கேட்டார்னே தெரியாம, "போன படத்தை விட இந்த படத்திலே கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்கீங்க"ன்னு சொன்னேன்.

மழை பெஞ்சது தெரியாம, "தண்ணி லாரி புட்டுகிச்சா? ஒரே ஈரமா இருக்கே"ன்னு கேட்டா எப்படி பார்ப்பீங்க? அப்படி பார்த்தாரு அஜீத். கிண்டல் பண்றானோங்கிற கோபமும் இருந்திச்சு அந்த பார்வையிலே. "இப்போதான் இவரு தொப்பைய குறைங்கன்னாரு. பின்னாடியே நீங்க வந்து ஸ்மார்டுங்கிறீங்க"ன்னு சொல்லிட்டு என் கண்ணுக்குள்ளே பூந்து மனச நோண்ட ஆரம்பிச்சாரு.

"இவர விடுங்க. நீங்க இந்த படத்திலே அழகுதான்" என்றேன் விடாப்பிடியாக. இப்போ லேசா முகத்திலே சந்தோஷம் மின்ன, "இல்லே சார். எனக்கு மட்டும் ஆசையா, இப்படியிருக்கனும்னு? என்னோட முதுகு வலிக்காக ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுறேன். தினமும் மூணு. ஸ்டீராய்டு சாப்பிட்டா உடம்பு வெயிட் போடும். அதை குறைக்கணும்னா எக்சர்சைஸ் பண்ணனும். என் முதுகு தண்டு பிரச்சனையினாலே அது முடியாது. தயவு செஞ்சு என்பிரச்சனைய புரிஞ்சுக்கோங்க" என்றார். நான் மீண்டும் விடாப்பிடியாக "இப்போ உங்களை அழகில்லேன்னு யாரு சார் சொன்னா? கொஞ்சம் தொப்பையை குறைங்கன்னு சொல்றதுக்கும், அழகில்லைன்னு சொல்றதுக்கும் நிறைய டிபரன்ஸ் இருக்கே? இப்பவும் சொல்றேன். இந்த படத்திலே நீங்க அழகுதான்"னு சொன்னேன். இந்த வார்த்தைகள் அவருக்கு குளுக்கோஸ் ஏத்தியிருக்கணும். "அப்பிடியா, தேங்ஸ்"ன்னாரு. இத சொல்லும்போது அவரு இன்னும் அழகா இருந்தாரு.

அந்த மீட்டிங் என்ன பண்ணுச்சோ, சில படங்களுக்கு பிறகு அவரை பார்க்கும்போது, மிஸ்டர் ஸ்மார்ட்டாக மாறியிருந்தாரு அஜீத். பார்த்தீங்களா, இப்படிதான் ட்ராக் மாறி எங்கெங்கோ போயி..., க்யூவிலே வெயிட் பண்ணிய விஷயத்துக்கு வர்றேன்.

நார்த் மெட்ராஸ்சை இப்போ நாத்த மெட்ராஸ்சுன்னு மாத்திரலாமான்னு கேட்டா, அங்கே உள்ள ஜனங்களே "பேர் பொருத்தம் பெஸ்ட்"டுன்னு சொல்லுவாங்க. அந்தளவுக்கு அழுக்கும், அலங்கோலமுமாக கிடக்கிற அந்த ஏரியாவுக்கு போயிருந்தார் அஜீத். பில்லா ரிலீசுக்கு முன்னாடின்னு நினைக்கிறேன். (தகவல் உபயம் நான் சொன்னேனே, நிழலு நிழலுன்னு ஒருத்தரு. அவரேதான்)

போனது ஒரு சாவு வீட்டுக்கு. நண்பரோட பழைய கார்லே இவரு போயி இறங்க, இந்த காருக்குள்ளே இவரான்னு ஆச்சர்யப்பட்ட ஜனங்க, ஆஹா, ஓஹோன்னு வாயாலேயே எஸ்எம்எஸ் அனுப்பி, அந்த ஏரியா முழுசும் கட்டுக்கடங்காத கூட்டம். எழவு வீட்லே உழவு மாட்ட விலை கேட்ட கதையா, ஆட்டோகிராஃப் கேட்டு பாதி பேரு, அடுத்த படம் என்னான்னு கேட்டு மீதி பேரு... ஒரே இம்சை. ஆனாலும் நிஜமான கவலையோடு உட்கார்ந்திருந்தாரு அஜீத்.

சம்பந்தப்பட்ட வீட்டு ஆளுங்களே, "சார் நீங்க போயிருங்க. இல்லேன்னா இவங்க இம்சை பண்ணுவாங்க"ன்னு சொன்னாங்க. என்ன செஞ்சாரு அஜீத்?

அடுத்த பதிவிலே சொல்றேனே? முக்கியமா அவரு நான் கடவுளுக்காக முடி வளர்த்ததையும், அதை எடுக்கறதுக்கு முன்னாடி நடந்த எமோஷனல் சம்பவத்தையும் சொல்லுறேன்... ப்ளீஸ் வெயிட்!

No comments:

Post a Comment