Saturday, May 1, 2010

`தாதா' தொழில் அதிபர்- வக்கீல் கொடூர கொலை

பூந்தமல்லி கோர்ட்டுக்கு வந்தபோது மர்ம கும்பல் தாக்குதல்: `தாதா' தொழில் அதிபர்- வக்கீல் கொடூர கொலை

சினிமாவில் வருவது போன்ற பரபரப்பான திகில் நிறைந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை பேசின் பிரிட்ஜ் நரசிம்ம நகர் 13-வது தெருவைச் சேர்ந்தவர் சின்னா என்ற சின்னகேசவலு (வயது 41). ரவுடிகள் உலகத்தில் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியது. சாதாரணமாக கூலித்தொழிலாளியாக வாழ்ந்த இவர் பின்னர் ரவுடியாக மாறி தாதாவாக வளர்ந்து அதன் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் புகுந்து பெரிய தொழில் அதிபர் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. கடந்த 2001-ம் ஆண்டு சென்னை தியாகராயநகர் பனகல் பார்க் அருகே நடந்த குண்டு வீச்சு சம்பவத்தில் மாம்பலம் போலீசார் இவரை முக்கிய குற்றவாளியாக சேர்த்தனர். இவரோடு இவரது நண்பர்கள் அப்பு, ஜெர்மன் ரவி, காதுகுத்து ரவி, மாட்டு சேகர் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
பூந்தமல்லி பொடா கோர்ட்டில் நடந்த இவர்கள் மீதான வெடிகுண்டு வழக்கில் நேற்று தீர்ப்பு சொல்லப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். தீர்ப்பை கேட்பதற்காக சின்னகேசவலு தனது கூட்டாளிகள் அப்பு, ஜெர்மன் ரவி, காதுகுத்து ரவி, மாட்டு சேகர் ஆகியோரோடு பூந்தமல்லி கோர்ட்டில் நேற்று காலை ஆஜர் ஆனார். தீர்ப்பு மாலையில் தெரிவிக்கப்படும் என்று நீதிபதி கூறி விட்டார். இதனால் சாப்பிட்டு விட்டு வரலாம் என்று அனைவரும் கோர்ட்டை விட்டு வெளியில் வந்தனர்.
சின்னகேசவலு தனது வக்கீல்கள் சியாமளா, பகத்சிங் ஆகியோருடன் காரில் ஏறி அருகில் உள்ள குமணன் சாவடிக்கு வந்தனர். அங்கு ரோட்டு ஓரமாக உள்ள சந்தில் காரை நிறுத்தினார்கள். சின்னகேசவலுக்கு அவரது வீட்டில் இருந்து வந்த சாப்பாட்டை சின்னகேசவலு, வக்கீல் சியாமளா, இன்னொரு வக்கீல் பகத்சிங் ஆகிய 3 பேரும் காரில் உட்கார்ந்து சாப்பிட்டனர். காரின் பின்பக்க சீட்டில் வக்கீல் சியாமளா உட்கார்ந்திருந்தார். முன்பக்க சீட்டில் சின்னகேசவலு அமர்ந்திருந்தார். வக்கீல் பகத்சிங் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது பிற்பகல் 2 மணி இருக்கும்.
இந்த நேரத்தில் வேகமாக கார் ஒன்று அவர்கள் அருகில் வந்து நின்றது. அதில் 10-க்கும் மேற்பட்ட மர்ம ஆசாமிகள் இருந்தனர். கீழே இறங்கிய அவர்கள் மின்னல் வேகத்தில் வந்து காரில் இருந்த சின்னகேசவலுவை சரமாரியாக வெட்டினார்கள். அவர் ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே பிணமானார். பின் சீட்டில் இருந்த வக்கீல் சியாமளா இந்த கொடூர தாக்குதலை பார்த்து எதுவும் பேச முடியாமல் அதிர்ச்சியில் உட்கார்ந்திருந்தார். வெளியில் நின்றிருந்த வக்கீல் பகத்சிங் கொலைவெறி கும்பலைச் சேர்ந்த கும்பலை பிடிக்க முற்பட்டார்.
இதனால் கொலைவெறி கும்பல் வக்கீல் பகத்சிங்கையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. அவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார். மின்னல் வேகத்தில் கொலையாளிகள் அனைவரும் அவர்கள் வந்த காரில் மீண்டும் ஏறி தப்பி சென்று விட்டனர். பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்ததால் குமணன் சாவடி மற்றும் பூந்தமல்லி பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டு விட்டது. வக்கீல் சியாமளா மயிரிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
சின்னகேசவலுவின் பிணம் கார் கதவில் தொங்கியபடி இருந்தது. வக்கீல் பகத்சிங் உயிர் பிழைக்க மாட்டார் என்ற நிலையில் சுருண்டு கிடந்தார். அவரது தலை உள்பட அனைத்து இடங்களிலும் வெட்டு பலமாக இருந்தது. அவரை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் அங்கு அவர் பரிதாபமாக இறந்துபோனார்.
தகவல் கிடைத்து புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட், அம்பத்தூர் துணை கமிஷனர் சமுத்திரபாண்டி, உதவி கமிஷனர்கள் ஜ×டு துரைப்பாண்டியன், ஜெயராஜ், குமாரவேல், இன்ஸ்பெக்டர்கள் சங்கர் சித்தார்த்ததாஸ், அழகு, அருள்சந்தோஷமுத்து மற்றும் போலீஸ் படையினர் விரைந்து வந்தனர்.
தொழில் அதிபர் சின்னகேசவலுவின் பிணம் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள சவக்கிடங்கில் பிணம் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் பெண் வக்கீல் சியாமளா ஆகியோரிடம் கமிஷனர் ஜாங்கிட் விசாரணை நடத்தினார்.
சின்னகேசவலுவின் பரம விரோதிகள் யாராவது அவரை தீர்த்துக்கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொலைக்கான காரணம், கொலையாளிகள் யார் என்பது பற்றிய முழுமையான விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை. போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து கொலை நடந்த காரில் கைரேகையை பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் தெரிவித்தார்.

No comments:

Post a Comment