Sunday, May 16, 2010

சாலை மறியலால் பாதிப்பு: மணிப்பூரில் 1 கிலோ அரிசி 100 ரூபாய்; கியாஸ் விலை ரூ.1200


வட கிழக்கு மாநிலமான மணிப்பூர், நாகலாந்து மாநிலத்தை ஒட்டி உள்ளது. நாகலாந்தில் செயல்படும் நாகாகவுன்சில் என்ற அமைப்பு மணிப்பூரில் நாகா மக்கள் வாழும் பகுதியையும் நாகலாந்துடன் இணைத்து அகண்ட் நாகலாந்து மாநிலம் அமைக்க வேண்டும் என்று போராடி வருகிறது. இதற்கு மணிப்பூர் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் நாகா கவுன்சில் பொதுச் செயலாளர் முல்வா மணிப்பூரில் உள்ள பழங்கால நாகா கிராமத்துக்கு செல்வதாக அறிவித்து இருந்தார். ஆனால் அவர் அங்கு செல்ல மணிப்பூர் அரசு தடைவிதித்தது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது மணிப்பூர் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் மரணம் அடைந்தனர்.

இதனால் மணிப்பூர் அரசுக்கு எதிராக நாகா மக்கள் கவுன்சில் அமைப்பு போராட்டத்தில் குதித்தது. மணிப்பூருக்கு நாகலாந்து மாநிலம் வழியாக செல்லும் என்.எச்.39 தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் செல்ல வேண்டும். இந்த சாலையில் அவர்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் 1 வாரத்துக்கு மேலாக மணிப்பூர் மாநிலத்துக்கு எந்த அத்தியாவசிய பொருட்களும் செல்லவில்லை. அவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே விலைவாசி மிகவும் உயர்ந்து விட்டது.

1 கிலோ அரிசி ரூ.100-க்கு விற்கிறது. 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.150, கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1200.

இவ்வாறு அனைத்து பொருட்களுமே பல மடங்கு விலை உயர்ந்துவிட்டன. இதனால் மாநிலமே ஸ்தம்பித்துவிட்டது. மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் தெருவில் இறங்கி போராடலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment