Friday, May 21, 2010

தமிழக மேல்-சபை: தேர்தல் பணி தொடங்கியது- நரேஷ்குப்தா பேட்டி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதன் விபரம் வருமாறு:-

தமிழ்நாட்டில் மேல்- சபை அமைப்பதற்கான உத்தரவில் கடந்த 18-ந்தேதி ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து மேல்- சபை அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

மேல்- சபையில் மொத்தம் 78 பேர் உறுப்பினர்களாக (எம்.எல்.சி.) இடம் பெறுவார்கள். இதில் 3-ல் ஒரு பகுதி அதாவது 26 பேர் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். 26 பேர் சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் மூலம் தேர்வாவார்கள்.

பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தலா 7 பேர் வீதம் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். மீதம் உள்ள 12 பேர் கவர்னரால் நியமனம் செய்யப்படுவார்கள்.

இந்த 12 பேரும் கலை, இலக்கியம், மருத்துவம் போன்ற துறைகளில் முக்கியத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் மேல்- சபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதை அறிவதற்காக தமிழக தேர்தல் துறை கூடுதல் செயலாளர் சந்தானகிருஷ்ணன் சமீபத்தில் ஆந்திரா சென்று வந்தார். அவர் அங்கு ஓய்வு பெற்ற மூத்த தேர்தல் அதிகாரி பர்மன் என்பவரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று வந்துள்ளார்.

மேல்- சபை தேர்தலை நடத்த பல்வேறு விதமான பணிகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு யார், யார் ஓட்டுப்போடலாம் என்பது பற்றிய கணக்கெடுப்பு, அது தொடர்பான புள்ளி விவரங்கள், பல்கலைக்கழகங்கள், கலெக்டர்கள் மூலம் சேகரிக்கப்படுகின்றன.

ஆந்திராவில் திறந்த வெளி பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்றவர்களும், பட்டதாரிகளை தேர்ந்தெடுக்க ஓட்டுப்போடலாம் என்ற விதி உள்ளது. தமிழ்நாட்டில் அது போன்று அனுமதிக்க முடியுமா? என்பது பற்றி தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.

தமிழ்நாட்டில் மேல்- சபை தேர்தலை நடத்துவது புதியது. இதுவரை அனுபவம் இல்லை. எனவே அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி கொடுக்க வேண்டியது உள்ளது.

தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டிய துள்ளது. இவை பற்றியெல்லாம் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்ய வேண்டும்.

மேல்-சபை தேர்தலுக்கான அடுத்தக் கட்ட பணிகளை தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி நிறைவேற்றுவோம்.

ஆந்திராவில் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி புதிய மேல்-சபை அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கி 2007 மார்ச் மாதம்தான் நிறைவு பெற்றுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் எப்போது இந்த தேர்தல் நடக்கும் என்று இப்போதே சொல்ல முடியாது. ஆனாலும் ஆரம்பக் கட்ட தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டது.

இவ்வாறு தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.

No comments:

Post a Comment