Sunday, May 16, 2010

தலையங்கம்:வாய்க்கு வந்தது...

நாக்கிலே சனி என்பார்கள். அது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு நிறையவே இருக்கிறது. தன் பேச்சால் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த சசி தரூர் பதவி விலகிவிட்டாரே, இனி பரபரப்பே இருக்காதே என்று நினைக்குமுன்பே குரல் கொடுத்துவிட்டார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். இப்படிப் பேசுவது இவருக்கும் புதியதொன்றுமல்ல!அமைச்சரவை கூட்டுப்பொறுப்பு என்பது ஒவ்வோர் அமைச்சரும் ஏனைய அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் தார்மிக ரீதியாகக் கட்டுப்பட்டவர்கள் என்பதைத்தான் குறிக்கிறது.


பொறுப்பான பதவியிலிருப்பவர்கள் அதிலும் குறிப்பாக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் வாய்க்கு வந்தது கோதைக்கு பாட்டு என்கிற விதத்தில் சிந்திக்காமல் பேசிவிட முடியாது.இரு நாடுகளின் நட்புறவை மேம்படுத்தும் பயணங்களில் ஈடுபடும்போது,


அந்நாட்டுக்கும் நமது நாட்டுக்கும் இடையிலான உறவை எந்த விதத்தில் பலப்படுத்த முடியும் என்பதையும், இதில் உள்ள பிரச்னைகளை எப்படிப் போக்குவது என்பது குறித்தும் பேசுவதும், சில முரண்கள் இருந்தாலும் அதை அரசு அளவிலேயே நிறுத்திக் கொண்டு, பத்திரிகைகளுக்குத் தீனி போடாமல், அமைதியாக நாடு திரும்புவதும்தான் நல்ல அமைச்சருக்கு அடையாளம். ஆனால், சீனாவுக்குச் சென்றுள்ள அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்களுடன் மட்டும் தன் பேச்சு மற்றும் பேட்டிகளை நிறுத்திக் கொள்ளாமல், உள்துறை அமைச்சகத்தைக் குறை கூறும் வகையில் பேட்டி அளித்தது தேவையில்லாதது. வரம்பு மீறியதும்கூட!


தற்போது, சீனா எல்லைக்குள் உள்ள பிரம்மபுத்திரா நதியில், இந்திய எல்லைக்குள் இந்நதி நுழைவதற்குச் சில கிலோமீட்டர் தூரத்தில், 540 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான அணை கட்ட சீனா முடிவெடுத்திருக்கிறது. இதற்கு இந்தியாவின் எதிர்ப்பை அமைச்சர் ரமேஷ் பதிவு செய்ததுடன் நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.சீனா இந்த அணையைக் கட்டுவது மறுக்க முடியாத உண்மை.


இந்த அணை வெறும் புனல்மின்நிலையம் மட்டுமே அல்ல என்பதும், தேக்கப்படும் நீர் சீனாவின் தென்மேற்குப் பகுதியில் விவசாயத்துக்குத் திருப்பிவிடப்படும் திட்டங்களும் அந்நாட்டு அரசிடம் இருக்கிறது என்பதும்தான் இந்தியாவின் கவலை. இத்திட்டம் அரசியல் ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் இந்தியாவுக்கு ஏற்புடையதல்ல என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியிருப்பது அவருக்கும் அவர் பொறுப்பேற்றுள்ள அமைச்சகத்துக்கும் அழகு சேர்க்கிறது.


இந்தியாவைவிட 6 மடங்கு அதிகமாக புவிவெப்ப வாயுக்களை வெளியேற்றும் சீனாவுடன் இந்தியா ஏன் சுற்றுச்சூழல் தொடர்பான ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்ற விமர்சனங்களுக்குப் பதில் அளித்தபோதும், தனது அமைச்சர் பதவிக்கு மரியாதை ஏற்படும் வகையில், இரு நாடுகளும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க மேற்கொண்டுள்ள முதல்கட்ட நடவடிக்கை என்று அவர் சொன்னதும்கூட நல்ல பதில்தான். அவர் அத்தோடு நின்றிருக்கலாம்.


தனக்குத் தொடர்பே இல்லாத உள்துறை அமைச்சகம் குறித்து விமர்சிக்கும் வகையில், அவர்கள் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் தேவையே இல்லாமல் மிகவும் அச்சப்படுகிறார்கள் என்று கூறியதுதான், நாவடக்கம் இல்லாத விதமாக அமைந்துவிட்டது.இந்திய சீனா ராஜீய உறவுகள் 1950-ல் ஏற்பட்டாலும், நேரு-சூ என் லாய் காலத்தில் பஞ்சசீல கொள்கை அமைந்தாலும்கூட, 1962-ல் இந்தியாவை சற்றும் எதிர்பாராமல் சீனா ஆக்கிரமித்ததுமுதல் இந்திய சீன உறவில் விரிசல் தொடர்ந்து அதிகரித்து வந்தது என்பதுதான் உண்மை. 1988-ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் சீன விஜயத்திற்குப் பிறகுதான் வர்த்தக உறவுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டன. கடந்த இரு மாதங்களில் மட்டும் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதற்கு இணையாக சீன நாட்டிலிருந்து இறக்குமதியும் செய்துகொண்டிருக்கிறோம். இதையெல்லாம் மனதில் இருத்தி, அவர் பேசியிருக்க வேண்டும்.தீவிரவாதிகள் எல்லாத் தொழில்நுட்பத்தையும் எளிதாகப் பயன்படுத்துகின்றனர்.


அண்மைக்காலம்வரை, ஒவ்வொரு செல்போனிலும் 14 இலக்கங்கள் கொண்ட ரகசிய எண் இல்லாதவை லட்சக்கணக்கில் இருந்தன. அத்தகைய செல்போன்களில் 90 சதவீதம் சீனா தயாரிப்பு. இந்தச் சூழ்நிலையில், தகவல்தொடர்பு சார்ந்த சீனாவின் வர்த்தக உறவுகளில் சற்று எச்சரிக்கையுடன் இந்திய உள்துறை அமைச்சகம் இருக்கும் என்றால் அதன் காரணங்கள் யாருக்கும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் அமைச்சர் ரமேஷுக்கு மட்டுமே எப்படி புரியாமல் போனது.


அல்லது, சீனாவை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்வோம் என்று சொல்லி வைத்தாரா? அமைச்சர் ரமேஷ் சில மாதங்களுக்கு முன்பு மரபீனி மாற்று கத்தரிக்காய் விவகாரத்தில் விவசாயிகளிடம் நடந்துகொண்ட விதமும், போபால் நகரில் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிகழ்ச்சியில், கார்பைடு நிறுவன கழிவுகளால் தற்போது பாதிப்பே இல்லை என்று பேசியதும் ஏற்படுத்திய உள்நாட்டு பரபரப்புகளைவிட, அவர் வெளிநாட்டிலும் இப்படித்தான் பரபரப்பை ஏற்படுத்துவார் என்றால் அது அந்தப் பொறுப்புக்குரியவராக நடந்துகொள்ளத் தவறிவிட்டார் என்றுதான் பொருள். இந்த விவகாரத்தில் மற்ற துறைகள் பற்றி அமைச்சர்கள் பேச வேண்டாம் என்று ஒரு நிபந்தனை போன்ற அறிவுரையை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டு, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றிருக்கிறார். அமைச்சர் ரமேஷ் கூறிய குற்றச்சாட்டில் நியாயமில்லை என்பதையும், இந்தியா எந்த அளவுக்கு இணக்கமான சீன உறவைக் கொண்டுள்ளது என்பதையும், அமைச்சர் குறிப்பிடும் தகவல்தொடர்பு நிறுவன முதலீட்டில் இந்தியா மிகவும் எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கியிருந்தால்,


இந்திய உள்துறை அமைச்சகத்தின் மீதும் அரசின் மீதும் மக்களுக்கு மேலதிகமான நம்பிக்கை ஏற்பட உதவியிருக்கும். ஒரு வரி கண்டிப்பும், அதற்கு அமைச்சர் ரமேஷ் தனது மன்னிப்பை பிரதமரிடமும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடமும் தெரிவித்துக் கொண்டதோடு பிரச்னை முடிந்துபோனால் போதுமா? சரியா?இத்தகைய அமைச்சரவைச் செயல்பாடுகள் பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் அமைச்சர்கள் இல்லை என்பதைத்தான் காட்டுகின்றன.


கட்சித் தலைமை காரணமாக அவர்கள் பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கிறார்களா அல்லது பிரதமரும் கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டு வாளாவிருக்கிறாரா என்பதுதான் புரியவில்லை.

No comments:

Post a Comment