Saturday, May 22, 2010

ஏதாகிலும் ஒன்று தேவை

தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் பி..​ படிப்புகளில் சேருவதற்கு பொதுப் பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் 55 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனையைத் தளர்த்தி,​​ 50 சதவீதம் போதுமானது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.​ இந்தத் தளர்வு மற்ற பிரிவினருக்கும் உண்டு.​ அதாவது,​​ பிற்படுத்தப்பட்டவர்கள் 45 சதவீதம்,​​ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 40 சதவீதம்,​​ தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்பதுதான் தற்போது அரசு அறிவித்துள்ள புதிய நடைமுறை.


இந்தப் புதிய நடைமுறைக்கான காரணத்தை உயர்கல்வி அமைச்சர் .​ பொன்முடி விளக்கியிருக்கிறார்.​ தமிழ்நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களைப் போன்று,​​ "பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்' என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால்,​​ அரசு இந்த முடிவை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.


தனியார் பல்கலைக்கழகங்களில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்,​​ பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்பது உண்மையே.​ ஆனால் அங்கே நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.​ அது பெயரளவில் நடத்தப்படுகிறதா அல்லது உண்மையாகவே நடத்துகிறார்களா என்பது வேறுவிஷயம்.​ என்றாலும்,​​ நுழைவுத்தேர்வு என்கின்ற வரைமுறையை அவர்கள் வைத்துள்ளனர்.


அதேபோன்று,​​ அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு மூலம் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேரும்போதும்கூட,​​ குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளது.​ ஆனாலும்,​​ நுழைவுத் தேர்வில் அவர்கள் பெறும் தரவரிசை ​(ரேங்க்)​ அடிப்படையில்தான் மாணவர்கள் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.​ ​


நுழைவுத் தேர்வின் தரவரிசை மட்டுமே போதுமானது என்று நிபந்தனை வைத்தால்,​​ நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்;​ நுழைவுத் தேர்வு எழுதும் பயிற்சி அல்லது நகரங்களில் இதற்காக நடத்தும் தனிவகுப்புகள் இல்லாதது ஆகிய காரணத்தால் கிராமப்புறத்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றும்கூட,​​ நுழைவுத் தேர்வில் தரவரிசையில் இடம்பெற முடிவதில்லை என்கிற நிலைமை இருந்தது.​ இதனால்,​​ அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு கட்-ஆப்மற்றும் மதிப்பெண் அடிப்படையிலான கட்-ஆப் இரண்டையும் சேர்த்தே கணக்கிட்டு தரவரிசைப்படுத்தினார்கள்.​ ​


அதன்பிறகும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர முன்வராததாலும்,​​ இந்த மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வையும் உடன் எழுதி,​​ பிற மாநில ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துச் சென்றுவிடுவதும் பரவலாகக் காணப்பட்டபோது,​​ நுழைவுத் தேர்வு எழுதும் வழக்கத்தையே ஒழித்துவிட வேண்டும் என்று தனியார் கல்லூரிகள் முடிவு செய்தன.​ அதன்படியே நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.​ தமிழக மாணவர்களும் அகில இந்திய நுழைவுத் தேர்வு ஒன்று இருக்கிறது என்பதையே மறந்துபோனார்கள்.​ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட வேளையில்,​​ குறைந்தபட்ச தகுதி 60 சதவீதமாக இருந்தது.​ ​


இப்போது நுழைவுத் தேர்வும் கிடையாது.​ தகுதியும் 50 சதவீதமாகக் குறைப்பு என்றால்,​​ இதன் மூலம் பொறியியல் மோகத்தை மையமாக வைத்து தனியார் கல்லூரிகளுக்கு லாபம் கிடைக்குமே தவிர,​​ தமிழகத்தின் உயர் கல்வி வளர்ச்சிக்கோ,​​ இதில் சேரும் மாணவர்களுக்கோ எந்தப் பயனையும் தராது என்பது உறுதி.


பொறியியல் படிப்பு என்கிற மோகத்தினால் சேரும்,​​ அல்லது பெரும்பாலும் பெற்றோர்களால் சேர்க்கப்படும் மாணவர்கள்,​​ பொறியியல் படிப்பை நான்கு ஆண்டுகளில் முடிக்க முடியாமல்,​​ தேர்வுகளில் பலமுறை தோல்வியுற்று,​​ ஆறு,​​ ஏழு ஆண்டுகளாக எழுதி,​​ விடைத்தாளை விரட்டிப்போய் பட்டம் பெற்று,​​ வேலையும் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள் என்பதுதான் தமிழகத்தின் இன்றைய பொறியியல் பட்டதாரிகளில் 50 சதவீதத்தினரின் நிலைமை.​ ​


ஒவ்வொரு பருவத் தேர்விலும் எல்லாத் தாள்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர் விகிதப் பட்டியலைப் பார்த்தால் முதல்நிலை வகிக்கும் கல்லூரிகளில் கூட 10 சதவீதம் பேர் தோல்வியடைந்திருப்பதைக் காண முடிகிறது.​ இந்தப் பட்டியலில் வெறும் 50 கல்லூரிகள் மட்டுமே 75 சதவீதம் வரை மாணவர் தேர்ச்சியைக் காட்டுகின்றன.​ மற்ற கல்லூரிகள் மிகவும் பின்தங்கியிருக்கின்றன.​ இதற்குக் காரணம்,​​ கல்லூரிகள் தரம் இல்லாதவை என்பது மட்டுமல்ல,​​ மாணவர்களாலும் உயர் கணிதத்தை பயில முடியவில்லை என்பதுதான் உண்மை.


பள்ளிகளில் சொல்லித் தருவதைப்போல கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை.​ அங்கே புரிதல் உள்ள மாணவர்களை முன்னிறுத்தியே வகுப்புகள் எடுக்கிறார்கள்.​ மாணவர்களுக்கு வழியைக் காட்டுவதோடு சரி.​ புத்தகங்களைத் தேடிப் படித்து அறிவைப் பெருக்கி தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது கல்லூரி மாணவர்களின் வேலையாக இருக்கிறது.​ இதனை மேற்கொள்ள,​​ ஒரு மாணவனுக்குத் தன் பாடத்தில் ஆர்வமும்,​​ இயல்பூக்கமும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.​ ஒரு மாணவனுக்கு ஒரு பாடத்தில் உள்ள தனிப்பட்ட ஆர்வம்,​​ புரிதல் ஆகியவற்றின் அடையாளம்தான் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அல்லது நுழைவுத் தேர்வில் கிடைக்கும் தரவரிசை.


தமிழ்நாட்டில்,​​ தனியார் பல்கலைக்கழகங்களுக்கு இணையாகத் தகுதி மதிப்பெண்ணை குறைப்பார்கள் என்றால்,​​ பொறியியல் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்.​ நுழைவுத் தேர்வு வேண்டாம் என்றால் தகுதி மதிப்பெண் 60 சதவீதமாக இருப்பதுதான் தமிழகத்தின் பொறியியல் படிப்புக்கு மதிப்புடையதாக இருக்கும்.


தகுதி மதிப்பெண்ணையும் குறைத்து,​​ நுழைவுத் தேர்வையும் ரத்து செய்துவிட்டு மாணவர் சேர்க்கையை நடத்தினால்,​​ எல்லா தனியார் கல்லூரிகளுக்கும் ஆள் சேரும்.​ ஆனால்,​​ நாளைய தமிழகத்தின் பொறியாளர்களுக்கு வெளிமாநிலங்களில் மதிப்பே இருக்காது.​ தமிழ்நாட்டு நிறுவனங்களும்கூட,​​ இந்த பொறியாளர்களைப் பணியமர்த்த ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும்.​ தனியார் பொறியியல் கல்லூரிகளைத் தூக்கிவிடுவதற்காக தமிழகத்தின் பொறியியல் கல்வியைத் தரம் தாழ்த்தலாமா?

No comments:

Post a Comment