Friday, May 21, 2010

கூடுதல் கட்டணம் கொடுக்க விரும்புவதாக பெற்றோர்களிடம் கட்டாய கடிதம் வாங்கும் தனியார் பள்ளிகள்

எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான கமிட்டி கல்வி கட்டணத்தை
நிர்ண யித்துள்ளது.

தொடக்கப்பள்ளிவரை படிக்கும் குழந்தைகளிடம் அதிகபட்சமாக ரூ.5000 வரையிலும், நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.7000 மும் உயர் நிலைப்பள்ளி (9-10 வகுப்பு) மாணவர்களுக்கு ரூ.9000மும், மேல்நிலைப்பள்ளி (பிளஸ்-1, பிளஸ்-2) மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.11,000மும் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணம் குறைவாக உளளதாகவும் அதைவிட கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் திருப்தி அளிக்காத பட்சத்தில் மேல் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதையொட்டி தமிழ்நாடு முழுவதும் 1200 பள்ளி நிர்வாகிகள் மேல் முறையீடு செய்துள்ளனர்.

இந்தநிலையில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் நிர்ணயித்து அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே கூடுதலாக கட்டணம் வசூலித்துவிட்டனர். சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் கூடுதலாக கட்டணம் வசூலித்துள்ளனர். பெறப்பட்ட கட்டணத்துக்கு சிலர் ரசீதும் வழங்கியுள்ளனர். சில பள்ளிகள் வாய்மொழியாக கட்டணத்தை கூறி பெற்றுக்கொண்டனர்.

கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிகளுக்கும் அதன் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் கூடுதலாக பெற்றோர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி கொடுப்பார்களா என்று எதிர்பார்க்கின்றனர். பள்ளிகளில் கூடுதல் கட்டணத்தை திருப்பி கேட்டால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை. கட்டணத்தை திருப்பி தர முடியாது என திட்டவட்டமாக மறுக்கின்றனர்.

சில பள்ளி நிர்வாகம் நாங்கள் மேல் முறையீடு செய்துள்ளோம். இதனால் கட்டணம் மேலும் உயரும், காத்திருங்கள்” என்று தெரிவிக்கின்றனர்.

ஆனால் சில தனியார் பள்ளிகள் இதற்கெல்லாம் மேலாக பெற்றோர்களிடம் கட்டாயப்படுத்தி கடிதம் வாங்கி வருகிறார்கள்.

நாங்கள் விரும்பியே கூடுதல் கட்டணத்தை செலுத்தியுள்ளோம். குழந்தைகளின் படிப்புத்தான் முக்கியம். அதனால் கட்டணத்தை திரும்ப கேட்கமாட்டோம், என பெற்றோர்களிடம் கட்டாய கடிதம் வாங்கியுள்ளனர். சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளும் இந்த புதிய யுக்தியை கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்.

பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களிடம் வாங்கிய கடிதத்தை குறிப்பிட்டு மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். மாணவர்கள் நலனுக்காக அரசு எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகளும் பதிலடி கொடுக்கும் வகையில் புதிய அணுகுமுறைகளை கையாள்கிறார்கள்.

No comments:

Post a Comment