Thursday, May 20, 2010

"டெஸ்ட்" கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த சுனில் கவாஸ்கர்

கிரிக்கெட் உலகத்தால் "தி லிட்டில் மாஸ்டர்" என்று செல்லமாக புகழப்பட்டவர் சுனில் கவாஸ்கர் (கவாஸ்கரின் உயரம் 5 அடி. 5 அங்குலத்திற்கு அங்குலம் குறைவு). அதனாலேயே அப்படி அவரை கருதியோர் உண்டு.


ஆனால் "பேட்டிங்"கில் அவர் உயர்ந்து நின்றார். அவர் (கவாஸ்கர்) ஆடிய காலத்தில் உலகின் தலைசிறந்த "பேட்ஸ் மென்" என்று கருதப்பட்டார். "டெஸ்ட்" கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளை படைத்து இந்திய அணிக்கு பெருமை சேர்த்தார்.

இத்தகைய பெருமைக்குரிய கவாஸ்கரின் முழுப்பெயர் சுனில் மனோகர் கவாஸ்கர். 1949_ம் ஆண்டு ஜுலை மாதம் 10_ந்தேதி மராட்டிய மாநிலம் பம்பாயில் (தற்போதைய மும்பை) பிறந்தார்.

1966_ல் தொடக்க ஆட்டமே அவருக்கு முதல் வெற்றி படியாக அமைந்தது. முதலில் மும்பை அணியில் இடம் பெற்று ஆடிவந்தார் கவாஸ்கர்.

22_வது வயதில் அவரது `டெஸ்ட்' அரங்கேற்றம் வெஸ்ட் இண்டீசில் 1971 மார்ச் மாதம் தொடங்கியது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற 2_வது டெஸ்டில் கவாஸ்கர் மொத்தம் எடுத்தது 774 ரன்கள் (சராசரி 154.80). அத்தொடரை இந்தியா 1_0 என வென்றது. அந்த போட்டியில் இருந்தே அவரது சாதனை தொடங்கியது.

அதிலும் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி பந்துகளை விளாசி தள்ளினார். எக்கோணத்தில் இருந்து வரும் பந்துகளையும் சாதூரியமாக சந்தித்து ஆடக்கூடிய திறமை மிக்க "பேட்ஸ்_மென்" என்ற பெருமையை பெற்றார். அந்த காலத்தில் ஆண்டி ராபெர்ட்ஸ், மைக்கேல் ஹோல் டிங், ஜெப் தாம்சன், டென்னஸ் லில்லி, இம்ரான்கான் போன்ற வேகபந்து வீச்சாளர்களை சமாளித்த கவாஸ்கர் உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரராக விளங்கினார்.

மொத்தம் 17 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் இந்திய அணி வீரராக வலம் வந்த கவாஸ்கர், சாதனைக்கு மேல் சாதனை படைத்தார்.

`பேட்டிங்' மாமேதை என்று கருதப்பட்ட டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) 52 டெஸ்ட்டுகளில் 6,996 ரன்கள் (சராசரி 99.94) எடுத்து 29 சதம் (செஞ்சுரி) அடித்தது உலக சாதனையாக இருந்தது. அதனை கவாஸ்கர் 1983 டிசம்பர் மாதம் 28_ந்தேதி சென்னையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் முறியடித்தார். அன்று கவாஸ்கர் அடித்தது 30_வது "செஞ்சுரி" ஆகும்.

அவர் "செஞ்சுரி" அடித்து சாதனை புரிவதை பார்க்க ஆவலுடன் காத்திருந்த 45 ஆயிரம் ரசிகர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். ஸ்டேடியமே அதிரும் வண்ணம் ரசிகர்களின் கரவொலியும், ஆனந்தக் கொண்டாட்டமும் அடங்க சில நிமிடங்கள் பிடித்தன. கவாஸ்கர் தனது "பேட்"டை உயர்த்தி ரசிகர்களின் பாராட்டை ஏற்றுக்கொண்டார். மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த ரவிசாஸ்திரி ஓடிவந்து கவாஸ்கரை கை குலுக்கி பாராட்டினார்.

சென்னை கிரிக்கெட் போட்டி கவாஸ்கரின் சரித்திர புகழ் படைக்கும் போட்டியாக அமைந்தது. அந்த ஆட்டத்தில்
236 ரன்களை குவித்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்தார். அதன் மூலம் சென்னை மண்ணில் கவாஸ்கர் 2 புதிய சாதனைகளை படைத்தார். போட்டியின் சிறந்த வீரராக (மேன் ஆப் தி மேட்ச்) அறிவிக்கப்பட்டு பரிசுகள் குவிந்தன.

"தம்ஸ் அப்" குளிர்பான நிறுவனம் கவாஸ்கருக்கு "மாருதி கார்" பரிசளித்தது. சென்னை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஏ.சிதம்பரம் ரூ.10 ஆயிரம் வழங்கினார். கிரிக்கெட் ரசிகரான தமிழக அமைச்சர் ராகவானந்தம் தனது சொந்த பொறுப்பில் கவாஸ்கருக்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசளித்தார்.

அதுமட்டுமல்ல `டெஸ்ட்' கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் கவாஸ்கர் நிகழ்த்தினார். அவர் மொத்தம் 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10,122 ரன்களை (சராசரி 51.12) குவிந்தார். (34 சதம், 45 அரை சதம் இதில் அடங்கும்) 106 டெஸ்ட் தொடர்களில் இடைவிடாது ஆடி இருக்கிறார். 4 முறை இரட்டை சதம் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதி அதிகபட்சமாக 236 ரன் எடுத்துள்ளார். கவாஸ்கர் அடித்த 34 செஞ்சுரிகளில் கிட்டத்தட்ட பாதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டங்களில் எடுத் தவை. (மீதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8, பாகிஸ்தானுக்கு எதிராக 5, இங்கிலாந்துக்கு எதிராக 4, நிïசிலாந்து, இலங்கைக்கு எதிராக தலா 2 சதம் அடித்துள்ளார்.)


இலங்கைக்கு எதிராக 1986 டிசம்பரில் கான்பூரில் எடுத்த 176 ரன்தான் கவாஸ்கர் எடுத்த கடைசி சதம் ஆகும்.

இந்திய அணியை 47 `டெஸ்ட்' ஆட்டங்களில் கேப்டனாக இருந்து வழி நடத்தி இருக்கிறார். இதில் 9 போட்டிகளில் வெற்றி, 8 போட்டியில் தோல்வி, 30 போட்டிகள் `டிரா'வில் முடிந்தன.

கேப்டன் பதவியை துறந்த பிறகும் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடினார். `டெஸ்ட்' போட்டியை போல ஒரு நாள் போட்டியில் அவரால் அதிகமாக ஜொலிக்க முடியவில்லை. 108 ஆட்டங்களில் விளையாடி மொத்தம் 3,092 ரன் குவித்தார் (இதில் ஒரு சதம், 27 அரை சதம் அடங்கும்).

தனது 38_வது வயதில் கவாஸ்கர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
1987_ம் ஆண்டு லண்டனில் சிறப்பு கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றது. இங்கிலாந்து நாட்டில் கிரிக்கெட் கிளப் தோன்றி 200 ஆண்டுகள் ஆனதையொட்டி இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் இங்கிலாந்து அணியும், உலக அணியும் மோதின. உலக அணியில் பல்வேறு நாட்டு முன்னணி வீரர்கள் இடம் பெற்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார்களான கவாஸ்கரும், கபில்தேவும் பங்கேற்றார்கள். இந்த போட்டியில் கவாஸ்கர் 80 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அங்குதான் தனது ஓய்வு பெறும் முடிவை கவாஸ்கர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

"லண்டனில் நடைபெறும் இந்த 5 நாள் போட்டிதான் நான் கடைசியாக கலந்து கொள்ளும் டெஸ்ட் ஆகும். இந்தியா _ பாகிஸ்தான் இணைந்து நடத்தும் ரிலையன்ஸ் உலக கோப்பை ஒருநாள் போட்டியில் விளையாடுவேன். அதன் பிறகு கிரிக்கெட் ஆடமாட்டேன்.

எனக்கிருந்த கிரிக்கெட் பசி இப்போது அடங்கிவிட்டது. ஏன் ஓய்வு பெறவில்லை என்று யாரும் கேட்பதற்கு முன்பே விலகிவிடவேண்டும். ஏன் ஓய்வு பெறவில்லை என்று கேட்கும் வரை காத்திருக்க கூடாது."

இவ்வாறு கவாஸ்கர் கூறினார். என்றாலும் கவாஸ்கர் சில ஆண்டு காலம் கிரிக்கெட் ஆடுவார் என்று எதிர்பார்த்தார் கள். ஆனால் 1987 நவம்பர் 9_ந்தேதி கிரிக்கெட் போர்டு தலைவர் ஸ்ரீராமனுக்கு தனது விலகல் கடிதத்தை கவாஸ்கர் அனுப்பி வைத்தார். இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான வாடேகர், பெடி, பட்டோடி நவாப் போன்றவர்கள் கவாஸ்கருக்கு புகழாரம் சூட்டி அவரது முடிவை வரவேற்றார்கள். "நான் பார்த்த கிரிக்கெட் வீரர்களில் இவர் (கவாஸ்கர்) தான் தலைசிறந்த வீரர்" என்று கிரிக்கெட் வீரர் தேர்வு குழு தலைவர் பாபுநட்கர்னி தெரிவித்தார்.

ஓய்வுக்குப்பிறகு சிறிது காலம் கவாஸ்கர் கிரிக்கெட் நடுவராகவும் (ரெப்ரி), பிறகு வர்ணனையாளராகவும் இருந்தார். தனது வாழ்க்கை சுயசரிதையையும், கிரிக்கெட் சம்பந்தமாக பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

கவாஸ்கரின் சாதனைகளை பாராட்டி மத்திய அரசு 1977_ம் ஆண்டு "அர்ஜுனா" விருதும், 1979_ம் ஆண்டு "பத்மபூஷன்" விருதும் வழங்கி கவுரவித்தது.


2 comments:

  1. கவாஸ்கர் குறித்த அற்புதமான இடுகை. பயனுள்ள பல தகவல்கள். நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி ஸ்ரீ ............

    ReplyDelete