Sunday, May 16, 2010

தலையாங்கம்போலிசுக்கு அட்சதை


தாதாக்கள் மீது கூட அனுதாபம் காட்டும் சமுதாயம் இது. என்கவுன்டரில் போட்டுத் தள்ளினால் சடலத்தை உரிமை கொண்டாடி ஒரு கூட்டமே வருகிறது. விசாரணை கமிஷன் கேட்டு மனித உரிமை அமைப்புகள் பேரணி நடத்துகின்றன. போலீஸ்காரர்களுக்கு மட்டும் அந்த அதிர்ஷ்டம் இல்லை. டூட்டியில் இருக்கும்போது அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்படும்போதுகூட மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படுவதில்லை. அந்த அளவுக்கு ஒரு கடினமான இமேஜ் மனதில் பதிவாகி இருக்கிறது.


நிஜம் அப்படி இல்லை. அவர்களும் மற்ற பிரிவினரை போல் பலதரப்பட்ட சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். சொல்லப்போனால், மற்றவர்களுக்கு கிடைக்கும் வாராந்தர விடுமுறையும், ஓய்வும், விடுப்பும் போலீஸ்காரர்களுக்கு கிடைப்பதில்லை. நேரம் காலம் பாராமல் வேலை செய்ய நேர்வதால் ஏற்படும் மன அழுத்தம் அவர்களை சீக்கிரமே நோயாளியாக்கி விடுகிறது. அதனால்தான், வருடத்தில் 15 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு, கு டும்பத்தோடு எங்காவது சென்று ஜாலியாக இருந்துவிட்டு வாருங்கள் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சொன்னார். நடைமுறையில் அது சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை.


நவி மும்பையில் பல போலீஸ்காரர்களுக்கு வெவ்வேறு தேதிகளில் கல்யாணம் நிச்சயமானது. லீவு எடுக்கவும் ஒப்புதல் கிடைத்தது. உள்ளாட்சி தேர்தல், பயங்கரவாத பீதி, ஐ.பி.எல் போட்டி, கசாப் வழக்கு என்று அடுத்தடுத்து பிரச்னைகள் வந்ததால் கடைசி நேரத்தில் லீவு கேன்சல் ஆனது. பெண் போலீஸ் உட்பட 19 பேரின் திருமணம் தொடர்ந்து தடைபட்டது. இனியும் அவர்களை வேகவிடுவது பாவம் என்று கமிஷனருக்கு தோன்றி யிருக்கிறது. இன்று அட்சய திருதியை நாளில் அவர்களுக்கு தன் கையால் தாலி எடுத்துக் கொடுத்து ஒரே மேடையில் மணமுடித்து வைக்கிறார்.


ஒரு ஜோடி வெவ்வேறு மதத்தினர்; மூன்று கலப்பு திருமணங்கள். எதிலும் வரதட்சணை கிடையாது. மணமக்கள் சார்பில் செலவும் இல்லை. போலீஸ் நல நிதியில் இருந்து சிக்கனமாக முடிக்கின்றனர். போலீஸ் தலைமை அலுவலகத்தில் திருமண விழா நடக்கிறது. காதல் ஜோடிகளுக்கு ஸ்டேஷனில் திருமணம் செய்து வைப்பது நமது போலீஸ் வழக்கமாக இருந்தது. அதற்கு தடை வந்துவிட்டதால் மும்பை ஸ்டைலில் போலீஸ் கூட்டு திருமண விழாக்கள் ஏற்பாடு செய்து, 15 நாள் தேனிலவு லீவு கொடுத்து அனுப்பலாம்.

No comments:

Post a Comment