Saturday, May 15, 2010

போலீஸ்காரர் சுட்டுக்கொலை : ஐதராபாத் நகரில் தீவிரவாதிகள் ஊடுருவல் நாசவேலைக்கு சதி திட்டம்





ஆந்திரா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள மிகப் பழமையான மெக்கா மஸ்ஜித் மசூதியில் கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது.


இதனால் ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இது ஐதராபாத்தில் உள்ள சிமி இயக்கத்தினரிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.


மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தினம் வரும்போதெல்லாம் தீவிரவாதிகள் போலீசார் மீதும், பொது இடங்களிலும் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த ஆண்டு மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பின் 2-வது ஆண்டு தினத்தையொட்டி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். நேற்றும் அதே பாணியில் ஐதராபாத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.


மெக்கா மஸ்ஜித்தின் 3-வது ஆண்டு குண்டு வெடிப்பு தினத்தையொட்டி தெக்ரிக் கல்பா-இ-இஸ்லாம் (டிஜிஐ) என்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதையடுத்து ஐதராபாத் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. என்றாலும் தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தி ஒரு போலீஸ்காரரை கொன்று விட்டனர்.


தீவிரவாதிகள் மிரட்டலை தொடர்ந்து ஐதராபாத் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். புகழ்பெற்ற சார்மினார் கட்டிடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகலி பண்டா என்ற பகுதியில் 3 போலீசார் பணியில் இருந்தனர். மாலை 4.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.


வல்கா ஓட்டல் எதிரே ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த போலீஸ்காரரிடம் சென்று உங்கள் பெயர் என்ன என்றனர். அந்த போலீஸ்காரர் பதில் சொன்ன மறு வினாடி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டனர்.


மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் அந்த போலீஸ்காரர் அருகில் நின்ற ஆட்டோவுக்கு பின்னால் ஓடிச்சென்று ஒளிந்தார். என்றாலும் தீவிரவாதிகள் அவரை விரட்டிச் சென்று மேலும் 2 ரவுண்டு சுட்டனர்.


3 குண்டுகள் துளைத்ததால் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 போலீஸ்காரர்கள் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்கள். 3 போலீஸ்காரர்களும் ஆயுதம் எதுவும் இல்லாமல் இருந்ததால், எதிர்த்து பதிலடி கொடுக்க முடியாமல் போய்விட்டது.


கொல்லப்பட்ட போலீஸ்காரரின் பெயர் ரமேஷ். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவியும் போலீஸ்காரர்தான்.


பலத்த பாதுகாப்பையும் மீறி துணிச்சலாக தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தாங்கள் வந்த அதே மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். போவதற்கு முன்பு சி.டி. ஒன்றை அவர்கள் வீசி விட்டு கொன்றனர். அந்த சி.டி.யில், மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை இத்தகைய தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ளனர்.


இதன் மூலம் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் தெக்ரிக் கல்பா-இ-இஸ்லாம் என்னும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது.


தீவிர விசாரணையில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் விகர் அகமது, முகம்மது சுலேமன், நஜிபுல்லா என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு போலீஸ்காரர் கொல்லப்பட்டபோதும், அது விகர் அகமது கைவரிசை என்று கருதப்பட்டது. இந்த ஆண்டு அவன் சதி செயல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.


அவனுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நஜியுல்லா என்பவன் பாகிஸ்தான் உளவுப்பிரிவின் கைக்கூலி ஆவான். உமர் அலி என்ற தீவிரவாதி மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் பலர் ஐதராபாத்தில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.


ஐதராபாத்தில் உள்ள தீவிரவாதிகளுக்கு சிமி இயக்கத்தினர் பல வகைகளில் உதவிகள் செய்வது தெரிய வந்துள்ளது. அவர்கள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.


இதையடுத்து ஐதராபாத்தில் போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment