Wednesday, May 12, 2010

கொழும்பு தனியார் விடுதியில் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை: உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தகவல்

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வருகிறார். இலங்கையில் இருந்து மலேசியா சென்ற அவரால் தன் மகன் மற்றும் மகளுடன் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் அவர் இலங்கை திரும்பினார்.


பார்வதி அம்மாள் வல்வெட்டித் துறையில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதாக நேற்று ஒரு தகவல் வெளியானது. ஆனால் அவர் கொழும்பில் உள்ள தனியார் விடுதியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் அவரை பராமரித்து வருகிறார்.
இது தொடர்பாக சிவாஜி லிங்கம் கூறியதாவது:-


பார்வதி அம்மாளுக்கு கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பக்கவாத நோய் உள்ளது. அவரை பராமரிக்கும் முழு பொறுப்பையும் அவரது குடும்பத்தினர் என்னிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களது ஆலோசனைப்படி நான் பார்வதி அம்மாளுக்கு தேவையானதை செய்து கொடுத்து வருகிறேன்.


பார்வதி அம்மாள் உடல்நிலை மேலும் மோசமடைந்தபடி உள்ளது. அவரால் தன்னிச்சையாக செயல் பட முடியாது. நடமாடும் சக்தியையும் இழந்து விட்டார்.
படுத்த படுக்கையாக கிடக்கும் அவரால் பேச முடிய வில்லை. அவரை இந்தியா அழைத்து சென்று சிகிச்சை கொடுப்பது பற்றி நாங்கள் இன்னும் தீர்மானிக்க வில்லை.


அவரது மகள் என்ன சொல்கிறாரோ அதன்படிதான் செயல்பட முடியும்.
இந்தியாவில் சிகிச்சை பெற்றுக் கொள்ள விசா கொடுக்கப்பட்டுள்ளதை பார்வதி அம்மாள் நிராகரித்து விட்டார் என்று வெளியான தகவல்களில் உண்மை இல்லை. அவருக்கு சிகிச்சை கொடுக்கும் நடவடிக்கைகளில் சில தடங்கல்கள்தான் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு சிவாஜிலிங்கம் கூறினார்.

No comments:

Post a Comment