Sunday, May 9, 2010

ரூபாய் மதிப்பு குறைக்கப்பட்டது; காமராஜர் கடும் எதிர்ப்பு
ரூபாய் மதிப்பை குறைக்க, மத்திய அரசு திடீரென்று முடிவு எடுத்தது. இதற்கு காமராஜர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய மந்திரிசபை அவசர சட்டம் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் 5/6/1966 அன்று நடைபெற்றது. ரூபாயின் மதிப்பை குறைக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மறுநாள் முதல், ரூபாய் குறைப்பு அமுலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை நிதி மந்திரி சச்சீந்திர சவுத்திரி ரேடியோ மூலம் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

"நமது பொருளாதார முன்னேற்றத்திற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
சர்வதேச மார்க்கெட்டில் 100 ரூபாய்க்கு 18 கிராம் தங்கம் சமமானது என்று இதுவரை மதிப்பிடப்பட்டது. இனி 100 ரூபாய்க்கு 11 கிராம் தங்கம் என்று மதிப்பிடப்படும். பொருளாதார நிலையை சீர்படுத்த வேறு சில முடிவுகளும் எடுக்கப்பட்டு உள்ளன. அவற்றை பிறகு அறிவிப்பேன்."
மேற்கண்டவாறு சச்சீந்திர சவுத்திரி கூறினார்.

2_ம் உலகப் போருக்கு பிறகு 1949_ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைக்கப்பட்டது. அதன் பிறகு 2_வது முறையாக 1966_ல் குறைக்கப்பட்டது. ரூபாய் குறைப்பு பற்றிய அறிவிப்பில் மேலும் கூறப்பட்டிருந்ததாவது:-

இதுவரை அமெரிக்காவில் இருந்து வரவழைக்கும் பொருள்களுக்கு டாலர் ஒன்றுக்கு 4 ரூபாய் வீதம் பணம் கொடுக்கப்பட்டது. இனி 7 ரூபாய் கொடுக்க வேண்டும்.

இங்கிலாந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்படும் பொருள்களுக்கு பவுண்ட் ஒன்றுக்கு 13 ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டு வந்தது. இனி 21 ரூபாய் கொடுக்கவேண்டும்.

அதாவது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இப்போது கொடுக்கப்படுவதை விட இனி அரை மடங்கு அதிக விலை கொடுக்க நேரிடும்.

இதன் விளைவாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கெடிகாரம், போட்டோ காமிரா, துணி, சினிமா பிலிம், பெட்ரோல் இயந்திரங்கள், மோட்டார் கார்கள், உணவுப் பண்டங்கள், மோட்டார் பாகங்கள், பத்திரிகை காகிதம், குளிர் காற்று வசதி (ஏர்கண்டிஷன்) இயந்திரங்கள் ஆகியவற்றின் விலை, இப்போது உள்ளதைவிட அரை மடங்கு அதிகரிக்கும்.

ரூபாய் மதிப்பு குறைக்கப்பட்டதன் காரணமாக சணல் பொருட்கள், தேயிலை, காபிக்கொட்டை, புகையிலை, கச்சா பருத்தி ஆகியவை உள்பட பல பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது.
ஏற்றுமதி வளர்ச்சிக்காக கொடுக்கப்பட்டு இருந்த சலுகை திட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த ரூபாய் குறைப்பு பற்றிய திடீர் அறிவிப்பு இந்தியா முழுவதும் திகைப்பை அளித்தது. வெளிநாட்டு பொருட்களின் விலை 37 சதவீதம் உயரும் என்று கணக்கிடப்பட்டது. வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களின் செலவு அதிகமாவதால் அவர்களுக்கு கடன் உதவி தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

இந்த ரூபாய் குறைப்பின் விளைவாக இந்திரா காந்தியின் மந்திரிசபையில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவானது. மந்திரிசபை கூட்டத்தில் சி.சுப்பிரமணியமும், அசோக் மேத்தாவும் ரூபாய் மதிப்பை குறைக்கவேண்டும் என்று பலமாக வற்புறுத்தினார்கள். மற்றவர்கள் எதிர்த்தார்கள்.

ரூபாய் மதிப்பை குறைக்கலாமா, வேண்டாமா என்று மந்திரிகள் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடந்தது. "இதுபற்றி ஓட்டெடுப்பு நடத்தவேண்டும்" என்று சிலர் வற்புறுத்தினார்கள்.

ஆனால் இந்திரா காந்தி குறுக்கிட்டு, "ரூபாய் மதிப்பை குறைப்பதை நான்
ஆதரிக்கிறேன்" என்று கூறினார். எனவே ஓட்டெடுப்பு எதுவும் நடைபெறா மலேயே ரூபாய் மதிப்பை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு இந்திரா காந்தி, காமராஜரை போய் சந்தித்தார்.

ரூபாய் மதிப்பை குறைக்க முடிவு செய்திருப்பதாக இந்திரா காந்தி கூறியதும் அதற்கு காமராஜர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்திரா காந்தி 2 முறை காமராஜரை சந்தித்து தன் கருத்தை தெரிவித்தார். "ரூபாய் மதிப்பை குறைத்தால் விலைவாசி 1 மடங்காக உயரும்.

இதனால் காங்கிரசுக்கு ஆதரவு குறையும்" என்று காமராஜர் சுட்டிக்காட்டினார். அப்படி இருந்தும் ரூபாய் மதிப்பு குறைக்கப்பட்டது.
சர்வதேச நாணய செலாவணி நிறுவனத்திடம் இருந்து சில நாட்களுக்கு முன் மத்திய அரசுக்கு ஒரு தந்தி வந்தது.

"இந்தியா நாணய மதிப்பை குறைத்துக் கொள்ளாவிடில் அமெரிக்கா முதலிய மேல் நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு உதவி கிடைக்காது" என்று அதில் திட்டவட்டமாக கூறப்பட்டு இருந்தது. எனவேதான் ரூபாய் மதிப்பை குறைப்பது என்று மத்திய அரசு தீர்மானித்தது.

ரூபாய் மதிப்பை குறைத்ததற்கு மத்திய மந்திரியாக இருந்த ஆர்.வெங்கட்ராமன் எதிர்ப்பு தெரிவித்தார். சில மந்திரிகள் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.
அதே நேரத்தில் தமிழ்நாடு முதல்_அமைச்சர் பக்தவச்சலம் உள்பட பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.

ரூபாய் மதிப்பை குறைப்பதற்கு தீவிரமாக ஆதரவு தெரிவித்த மந்திரி சுப்பிரமணியம், காமராஜரை சந்தித்தார். ரூபாய் மதிப்பை குறைப்பதை தான் ஆதரித்ததற்கு காரணம் என்ன என்பதை, காமராஜரிடம் அவர் விளக்கினார்.
ரூபாய் மதிப்பை குறைத்தது சரியல்ல என்று, சுப்பிரமணியத்திடம் காமராஜர் கூறினார்.

ரூபாய் மதிப்பு குறைப்புக்கு முன்பு தங்கம் விலை பவுனுக்கு ரூ.118 ஆக இருந்தது. ரூபாய் மதிப்பு குறைப்பு அமுலுக்கு வந்த ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.130 ஆக உயர்ந்தது.
இதேபோல, வெள்ளி உள்பட எல்லாப் பொருட்களின் விலைகளும் உயர்ந்தன.

No comments:

Post a Comment