Wednesday, May 12, 2010

13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிமாற்றம்: இங்கிலாந்து புதிய பிரதமர் டேவிட் கேமரூன்

இங்கிலாந்தில் 70 ஆண்டுகளில் முதன் முதலாக ஏற்படும் கூட்டணி ஆட்சியின் புதிய பிரதமாக டேவிட் கேமரூன் பதவி ஏற்கிறார். சமீபத்தில் இங்கிலாநந்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கன்சர் வேடிவ்கட்சி தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

13 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தொழிலாளர் கட்சி 2-வது இடத்தை பிடித்தது. இதற்கு அடுத்தப்படியாக லிபரல் ஜனநாயக கட்சி 3-வது இடத்தை பெற்றது.

எனவே, தனிப்பெரும் கட்சியாக திகழும் கன்சர் வேடிவ் கட்சி, லிபரல் ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. எனவே இக்கட்சிகளின் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சி தலைவர் டேவிட் கேமரூன், லிபரல் ஜனநாயக கட்சி தலைவர் நிக் கிளெக் ஆகியோரும் டெலிபோன் மூலமும், நேரிலும் சந்தித்து பேசினார்கள். இதற்கிடையே, தொழிலாளர் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தது.

அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான கார்டன் பிரவுன், லிபரல் ஜனநாயக கட்சி தலைவர் நிக்கிளெக்குடன் மறைமுகமாக பேச்சு நடத்தினார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை.

கன்சர்வேடிவ் கட்சிக்கும், லிபரல் ஜனநாயக கட்சிக்கும் இடையே ஆட்சி அமைப்பது குறித்து உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இக்கட்சி களின் கூட்டணி ஆட்சி அமைகிறது.

கூட்டணி ஆட்சியின் புதிய பிரதமாக டேவிட் கேமரூன் தேர்வு செய்யப்பட்டார். துணை பிரதமர் பதவி நிக்கிளெக்குக்கு வழங்கப்பட உள்ளது.

புதிய காபினெட் மந்திரிகளை இரு கட்சி தலைவர் களும் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

எனவே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய கார்டன் பிரவுன் முடிவு செய்தார். டவுனிங் தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு பக்கிங் காம் அரண்மனைக்கு சென்றார். ராணி எலிசபெத்தை சந்தித்து தனது ராஜினாமா கடித்தை கொடுத்தார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து இங்கிலாந்தில் 13 ஆண்டு கால தொழிலாளர் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து புதிய பிரதமராக பதவி ஏற்க டேவிட் கேமரூனுக்கு ராணி எலிசபெத் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று அவரை கேமரூன் சந்தித்தார். அப்போது அவருக்கு ராணி எலிசபெத் வாழ்த்து தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து புதிய பிரதமாக பதவி ஏற்க உள்ள டேவிட் கேமரூன் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, பெரிய அளவிலான பற்றாக்குறை பட்ஜெட்டை சமாளிக்க கூடிய சூழ்நிலையில் இருப்பதாகவும், பொருளா தாரத்தை சீரமைக்க வேண் டிய நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

இது ஒரு கடுமையான பணி என்றும், கூட்டணி அரசின் துணை கொண்டு அதை சமாளிப்பேன் என்றும் தெரிவித்தார். இங்கிலாந்து மக்களுக்கு நிலையான, பலம் வாய்ந்த அரசை வழங்குவேன் என்றும் உறுதி அளித்தார்.

அப்போது அவரது கர்ப்பிணி மனைவி சமந்தாவுடன் இருந்தார். இங்கிலாந்தில் கடந்த 1945-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 65 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி அமைகிறது.

200 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் பதவி ஏற்கும் இளம் வயது பிரதமர் என்ற பெருமையை டேவிட் கேமரூன் பெறுகிறார். தற்போது இவரது வயது 43.

பிரதமராக பதவி ஏற்க உள்ள டேவிட் கேமரூனுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெக்கெல், பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஷி ஆகியோர் டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment