Friday, May 14, 2010

தினமணி தலையங்கம்: எங்கே தவறு?

வங்க தேசத்தில்தான் முதன்முதலாக கிராமிய வங்கி மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தியாவிலும் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. சுயஉதவிக் குழுக்கள் கிராமப் பொருளாதாரத்துக்கு மிகச் சிறந்த அமைப்பாக இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.


தமிழ்நாட்டில் மேலவை அமைக்கப்படும்போது சுயஉதவிக் குழுக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படும் அளவுக்கு, தமிழகத்தில் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடும், எண்ணிக்கையும் அதிகமாக உள்ளன. தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிடும்போது, தமிழ்நாட்டில் நாள்தோறும் ரூ.4.36 கோடி சுய உதவிக் குழுக்களுக்கு கடனாகத் தரப்படுகிறது என்று தெரிவித்தார்.இந்த சுயஉதவிக் குழுக்களில் சில மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.


திருவண்ணாமலை அருகே ஒரு கிராமத்தில் அஞ்சல் நிலையம் மூடப்படும் நிலை உருவானபோது, அக்கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழு இந்த அஞ்சல் நிலையத்தைத் தானே பொறுப்பேற்று நடத்த முன்வந்தது. அதைச் சிறப்பாகச் செய்தும் வருகின்றது. ஏலகிரி மலையில், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் ஒரு வீட்டை விடுதியாகப் பராமரித்து லாபம் ஈட்டிய சுயஉதவிக் குழுவுக்கு, அரசின் விருதும், அதன் 13 உறுப்பினர்களுக்கும் தலா ரூ.5000 ஈவுத்தொகையும் அளிக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற மிகச் சிறப்பாகச் செயல்படும் சுயஉதவிக் குழுக்கள் பல இருக்கின்றன என்றாலும், சில சுயஉதவிக் குழுக்கள் குறித்து வெளியாகும் செய்திகள்,


இத்திட்டம் பாதை விலகிப் போவதையும், இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால், இந்த நல்லதொரு திட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என்கிற ஆபத்து இருக்கிறது என்பதையும் அரசு உணர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.வங்கிக் கடன் பெறுவதற்காக மட்டுமே சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்படுவதும், பெற்ற கடனை திரும்பச் செலுத்தாமல் இருக்கும் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கை அதிகமாகிவருவதும் கவலையளிப்பதாக இருக்கும் அதே நேரத்தில், சுயஉதவிக் குழுக்களை வங்கி அலுவலர்கள் ஏமாற்றுவதும் நடைபெறத் தொடங்கியிருக்கிறது.


சுய உதவிக் குழுக்களுக்கு அவர்கள் தொடங்கும் தொழிலுக்கேற்ப கடனுதவி நிர்ணயிக்கப்படுகிறது. அதில் 25-40 விழுக்காடு (தொழில்களுக்கு ஏற்ப விழுக்காடு மானியத்தின் அளவு மாறுகிறது) மானியம் அளிக்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றால், அவர்களுக்கு ரூ.25,000 மானியம் அரசு வழங்குகிறது. சுயஉதவிக் குழுக்கள் ரூ. 75,000 செலுத்தினாலே போதும். ஆனாலும், சில சுய உதவிக் குழுக்கள் மாதத் தவணையைச் சரியாக செலுத்தாத காரணத்தால் வங்கிகள் இந்த மானியத் தொகையை அவர்கள் கணக்கில் செலுத்தாமல் காலம்தாழ்த்தும் உத்தியைக் கையாளுகின்றன. காரணம், அவர்கள் பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், குறைந்தபட்சம் மானியத்தைக் கொண்டாகிலும் வரவு வைத்து ஓரளவு சரி செய்யலாமே என்ற எண்ணம்தான்.


அரசியல் நிர்பந்தங்களால் கடன் தர நேரிடும்போது, வங்கி மேற்கொள்ளும் இத்தகைய நடைமுறையை வங்கி அலுவலர்கள் தவறாகப் பயன்படுத்திக்கொள்வது ஆங்காங்கே நடந்து வருகிறது. அண்மையில் வேலூரில் ஒரு வங்கியில் ஒரே ஆண்டில் ரூ.25 லட்சம் மானியத் தொகையை வங்கி ஊழியர்களே மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஒவ்வொரு சுயஉதவிக் குழுவுக்கும் அரசு அளிக்கும் மானியத் தொகையை அவர்கள் கணக்கில் சேர்க்காமல், தங்கள் உறவினர் கணக்கில் வரவு வைத்து, கையாடல் செய்தது தெரியவந்தது. எந்தெந்த சுயஉதவிக் குழுக்களுக்கு சேர வேண்டிய பணம் கையாடப்பட்டுள்ளது என்ற விவரத்தைக்கூட வங்கி இதுவரை வெளியிடாமல் ரகசியம் காக்கிறது என்பதும், இதில் மாநில அதிகாரிகளும் தலையிட முடியாமல் இருப்பதுவும் இன்னொரு சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.


இதற்கு அடிப்படைக் காரணம், இந்த மானியம் அளிக்கப்பட்ட விவரத்தை அரசு அதிகாரிகள் அந்தந்த சுயஉதவிக் குழுக்களுக்கு முறையாகத் தெரிவிப்பதில்லை என்பதோடு, இந்த மானியத் தொகையை வங்கியிடம் கேட்டுப் பெறும் விழிப்புணர்வு இந்தக் குழுத் தலைவர் அல்லது தலைவியிடம் இல்லை. பல இடங்களில் இந்த சுயஉதவிக் குழுக்கள் ஏதோ ஒரு தன்னார்வ அமைப்பின் கீழ் செயல்பட வேண்டியுள்ளது. இந்தத் தன்னார்வ அமைப்புகள் இந்த சுய உதவிக் குழுக்களுக்கு அரசு தரும் மானியத்தின் அளவைச் சொல்வதே இல்லை, அல்லது குறைத்துச் சொல்கின்றன.


இத்தகைய மோசடியான தன்னார்வ அமைப்புகள், வங்கி அலுவலர்களுடன் சேர்ந்து இந்த மானியத் தொகையை முறைகேடாக எடுத்துக் கொள்வது அண்மைக் காலமாக அதிகரித்துவருகிறது என்றுசுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களே வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.சுயஉதவிக் குழுக்கள் பணத்தைத் திரும்பச் செலுத்தாமல் போனால், மானியத்தை ஒரளவு ஈடுகட்டலாம் என்ற மனப்பான்மை, வங்கியைப் பொருத்தவரை புத்திசாலித்தனமாக இருக்கலாம். ஆனால், சுயஉதவிக் குழுக்களைப் பொருத்தவரை கணிசமான முதலீடு முடக்கப்பட்டுவிடுகிறது என்பதுதான் உண்மை.


மானியத்தை அந்தந்த சுயஉதவிக் குழுக்களுக்கே நேரடியாக காசோலையாக அளித்தால் என்ன? தன்னார்வ அமைப்புகளின் கீழ் செயல்படும் சுயஉதவிக் குழுத் தலைவர், தலைவிக்கு அவர்களுக்கான மானியத்தை ஏன் அரசு அதிகாரிகள் வெளிப்படையாகச் சொல்வதில்லை? எங்கோ, தெரிந்தே சில தவறுகள் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. இதை இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால், ஒரு நல்ல திட்டம், நலிந்துபோகும். மதிப்பிழந்து போகும்.

No comments:

Post a Comment