Monday, May 10, 2010

இந்தியாவில் நாசவேலைக்கு சதி: தீவிரவாதிகள் நடத்தும் 40 பயிற்சி முகாம்கள் ரஷிய உளவுத்துறை எச்சரிக்கை
புதுடெல்லி, மே. 10-
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் லஷ் கர்-இ-தொய்பா, அல்- கொய்தா தீவிரவாதிகள் ஏராளமான பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறார்கள். அந்த முகாம்களில் தற்கொலை தீவிரவாதி களுக்கு பல்வேறு ஆயுதப் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.
இந்தியாவில் மீண்டும் மும்பை தாக்குதல் பாணியில் தாக்குதல் நடத்த திட்ட மிட்டுள்ள லஷ்கர்-இ- தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம் மது, அல்-கொய்தா தீவிரவாதிகள் ஒருங்கிணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயிற்சி முகாம்களை மூடி தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா எச்சரித்தது.
இதனால் கண் துடைப்புக்கு சில முகாம்களை பாகிஸ்தான் மூட செய்தது. தீவிரவாதிகளும் முகாம்களை வேறு பெயர்களில் நடத்தி வருகிறார்கள். இந்த ரகசிய முகாம்கள் எங்கெங்கு எப்படி இயங்குகின்றன என்பது கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.
இந்த நிலையில் காஷ்மீர் எல்லை அருகில் சுமார் 40 பயிற்சி முகாம்களை தீவிர வாதிகள் நடத்தி வருவதாக இந்தியாவிடம் ரஷியா தெரிவித்து எச்சரித்துள்ளது. இது தொடர்பாக இந்தியா வுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர்-எம் கடகின் கூறியதாவது:-
காஷ்மீர் அருகில் பாகிஸ்தானுக்குள் சுமார் 40 தீவிரவாத பயிற்சி முகாம்கள் இருப்பதை எங்களது உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. எந்தெந்த இடங்களில் அவை இயங்குகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது. எங்களது உளவு சாடிலைட்டும் இதை உறுதி செய்துள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தற்கொலை தீவிரவாதிகள் பயிற்சி பெறும் காட்சிகளை எங்கள் சாடிலைட் படமாக்கி உள் ளன. முகாம்களின் முன்பு பச்சை நிறத்தில் போர்டு வைத்திருந்தனர். தற்போது இந்த போர்டுகளை அகற்றி விட்டு வேறு பெயர்களில் பயிற்சி எடுக்கிறார்கள்.
இந்த முகாம்களில் பயிற்சி பெறும் தீவிரவாதிகள் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு சென்று நாசவேலை செய்கிறார்கள். பாகிஸ்தானுக்கும் இது தெரியும். என்றாலும் அந்த நாட்டு அரசு தீவிரவாதிகளை கண்டும் காணாததுமாக உள்ளது.
இந்தியாவும்-ரஷியாவும் சோவியத் காலத்தை விட இப்போது நல்ல உறவில் உள்ளன. ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்தி கட்டுமான பணிகளை மேற்கொள்வதில் இந்தியாவும், ரஷியாவும் சிறப்பான பங்கு வகிக்கின்றன.
பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவும் ரஷியாவும் தொடர்ந்து தகவல்களை பரிமாறிக் கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment