Saturday, May 15, 2010

தலையங்கம்: ஒரு நகர்வு தேவை...

சாதா​ர​ண​மாக கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்தாலோ, வேறு யாராவது விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தாலோ, இந்தியாவிலும் ஏன் தமிழகத்திலும் பட்டாசுகள் கொளுத்தி, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்படுகிறது.


ஆனால் செஸ் விளையாட்டில் நான்காவது முறையாக உலக சாம்பியன் பட்டம் பெற்றிருக்கும் விஸ்வநாதன் ஆனந்த், இந்தியர். தமிழ்நாட்டவர். இருப்பினும் பெரும் மகிழ்ச்சிக்குரல்கள் கேட்கவில்லை. அவரது வெற்றி வெறும் செய்தியாக வெளியானதே தவிர, பெருந்திரள் உணர்வின் கொண்டாட்டமாக மாறவில்லை.


முந்தைய உலக சாம்பியன் பட்டம் பெற்றபோது விளையாடியதைக் காட்டிலும் சற்று சிரமத்துடனும், எங்கே தோற்றுவிடுவாரோ என்று அவரைச் சார்ந்த நண்பர்களும் பார்வையாளர்களும் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த வெற்றியை அவர் பெற்றுள்ளார். இதற்காக உலகம் முழுவதும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளது. தினமணியும் பாராட்டுகிறது.


அயர்லாந்து எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தூசிப் படலத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஸ்பெயினிலிருந்து பல்கேரியாவுக்கு சுமார் 40 மணி நேரம் சாலை வழியாகப் பயணம் செய்து, போட்டி நடைபெறும் சோஃபியா நகரைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், தனது முதல் ஆட்டத்தை எதிர்ஆட்டக்காரர் டெபலோவிடம் இழந்தார். இந்தச் சோர்வுத் தோல்வி அவரை வீழ்த்திவிடும் என்று நினைக்கப்பட்ட நேரத்தில், இந்தப் பயணத்தை அவர் தவிர்த்துவிட்டு போட்டியை வேறு தேதிக்கு மாற்றியிருக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்த வேளையில், 11 வது ஆட்டத்தின் முடிவு வரை இருவரும் சமமான புள்ளிகள் எடுத்திருந்த நிலையில், 12 வது ஆட்டத்தில் வெற்றி பெற்று தனது உலக சாம்பியன் பட்டத்தை நிலை நிறுத்திக் கொண்டதைப் போன்ற பரபரப்பு, எந்தவொரு விளையாட்டுக்கும் குறைவில்லாதது.


இருப்பினும்கூட, ஆனந்த் அடைந்த வெற்றி செய்தியானதே தவிர, மக்களின் கொண்டாட்டமாக மாறவில்லை. இதற்குக் காரணம், ஊடகங்கள் இந்த விளையாட்டுக்கு ஒரு செய்திக்கான முக்கியத்துவம் மட்டுமே அளிக்கின்றன என்பதும், கிரிக்கெட் ஆட்டத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தொலைக்காட்சி நிறுவனங்களோ அல்லது விளம்பர நிறுவனங்களோ செஸ் போட்டிக்கு அளிப்பதே இல்லை என்பதுதான். செஸ் போட்டியில் சர்வதேச அளவில் விளையாடும்போது நிறைய பரிசுப் பணமும் பாராட்டும் கிடைத்தாலும், மாநில அளவில் விளையாடும்போது இதே அளவுக்குப் பரிசுப்பணம் அதிகம் கிடைப்பதில்லை.


இதனால், இந்த விளையாட்டில் இளைய தலைமுறை ஆர்வம் இழந்தது. தமிழகத்தின் பட்டி தொட்டிகளில்கூட ஆடுபுலி ஆட்டம் ஆடுவதற்கான கட்டங்கள் அரச மரத்தடிக் கற்பலகைகளில் இருக்கும்போது, அதை ஆடுவதற்குத்தான் ஆள் இல்லை. அதைப் போலவே, நகரப் பகுதிகளிலும் செஸ் விளையாட்டுக்கு அதிக


முக்கியத்துவம் இல்லாமல் போனது.


செஸ் விளையாட்டுக்கு அதிக செலவு இல்லை. பள்ளிகளில் செஸ் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. கற்றுக் கொண்டால், பல புதிர்களுக்குத் தீர்வு காணும் நகர்வுகளை தானே ஒருவர் தனித்து விளையாடவும் முடியும். பெரிய மைதானமும் தேவை இல்லை. ஆனாலும் பள்ளிகள் இதுபற்றி அக்கறை கொள்வதில்லை.


எல்லா மாவட்டங்களிலும் செஸ் அசோசியேஷன்கள் உள்ளன. அவர்களும் மாவட்ட அளவிலான போட்டிகளை, பள்ளிகளின் பருவ விடுமுறைக் காலங்களில் நடத்துகின்றனர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றால் அதற்கு விளையாட்டுக்கான மதிப்பெண் உண்டா இல்லையா, வெறுமனே நடத்தப்படும் போட்டியா என்றுகூட விசாரிக்காமல், பெற்றோர் தங்கள் குழந்தைகளை இப்போட்டிகளில் பங்கேற்கச் செய்கின்றனர். குழந்தைகளும் நிறைய எண்ணிக்கையில் பங்குகொள்கின்றனர். இதன் காரணமாகவே, தொழில்போட்டி ஏற்பட்டு, பல செஸ் சங்கங்கள் உருவாகி, ஆளாளுக்கு செஸ் போட்டிகள் நடத்தும் நிலைமையும் தமிழ்நாட்டில் இருக்கிறது.


விஸ்வநாதன் ஆனந்த் தமிழ்நாட்டுக்காரர். தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்று, தமிழகத்தில் விளையாடத் தொடங்கி, அகில இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்து, இப்போது உலக அளவில் நான்கு முறை சாம்பியன் பட்டத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.


அவர் இந்தியாவுக்கு என்று இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக செஸ் விளையாடும் குழந்தைகளுக்கு உரிய பயிற்சியும் போட்டியில் அங்கீகாரமும் கிடைக்கும் வகையில் அவருடைய பங்களிப்பைத் தர வேண்டும். அப்போதுதான் அவர் பெருமைக்குரியவர் என்பதைக் காட்டிலும், விளையாட்டு ரசிகர்களால் கொண்டாடப்படும் மனிதராக மாறுவார்.


விஸ்வநாதன் ஆனந்த் இந்தியக் குடிமகனா அல்லது ஸ்பெயின் குடிமகனா என்கிற குழப்பம் ஏற்படும் நிலைமைக்குக் காரணம், அவர் மனைவி அருணாவுடன் ஸ்பெயின் நாட்டில் உள்ள கொலடோ மெடியானோ நகரத்திலேயே ஆண்டில் பல மாதங்கள் வசிப்பதுதான். அவருக்கு ஸ்பெயின் நாட்டு அரசு, "ஜாமியோ டூ ஆரோ' என்கிற விருதினை (வெளிநாட்டவருக்கு ஸ்பெயின் அரசு அளிக்கும் உயரிய விருது) அளித்து கெளரவப்படுத்தியுள்ளது. அந்த அளவுக்கு அவர் ஸ்பெயின் நாட்டோடு ஒன்றிவிட்டார். ஸ்பெயின் நாட்டுச் சூழ்நிலை அவர் மனநிலையை செஸ் விளையாட்டுக்கு ஏற்புடையதாக தக்க வைக்க உதவுகிறது என்று அவர் சொல்கிறார்.


இந்த மண்ணில் -மயிலாடுதுறையில்- பிறந்து, இந்த மண் அளித்த மனத்திட்பத்தால் இன்று 64 கருப்பு வெள்ளைக் கட்டங்களுக்கு உலக ராஜாவாக தொடர்ந்து நீடிக்கிறார் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. தமிழ்நாட்டுக் குழந்தைகளை சதுரங்க ஆட்டத்துக்கு ஆர்வத்துடன் இட்டுச் செல்லும் கடமை அவருக்கு உள்ளது. தமிழ்நாட்டிற்கு அவருடைய ஒரு நகர்வு (மூவ்) தேவையாக இருக்கிறது.

2 comments:

  1. இதில் அரசையோ ஆனந்தையோ குறை சொல்வது தவறு.

    என் போன்ற பாமரர்களுக்கு கிரிக்கெட் பார்க்கும் போது உள்ள மகிழ்ச்சி, ஆனந்தம் செஸ், கால் pandhu , haakki vilayaattukkal பார்க்கும் poluthu erpaduvadhu illai enbadhe nidarsanam.

    ReplyDelete
  2. இல்லை நன்பரே உங்கள் கருத்து எனக்கு எற்புடையதாக இல்லை.. நமக்கு கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என்பது போல் ஊடகங்களும், அரசியல் வாதிக
    ளும் நம் மனதில் பதிய வைத்து விட்டனர், உன்மையை சொல்லுங்கல் இன்று மத்த விளையாட்டுக்குள்ள நிலமை கிரிக்கெட்டுக்கு இருந்திருந்தால் நீங்கள் கிரிக்கெட் ரசிகனாக இருந்து இருப்பீர்களா...

    ReplyDelete