Sunday, May 9, 2010

கல்வி கட்டணத்தை உயர்த்தாவிட்டால் பள்ளிகளை திருமண மண்டபம் ஆக்குவோம்: தனியார் பள்ளி நிர்வாகிகள் மிரட்டல்

தனியார் பள்ளிகளுக்கு அரசு கல்வி கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இதற்கு தனியார் பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஒன்றுகூடி ஆலோசித்தனர். நேற்று நடந்த கூட்டத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட பள்ளி தாளாளர்களும் கலந்து கொண்டனர்.

நீண்ட நேரம் ஆலோசனைக்கு பிறகு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர், பொதுச்செயலாளர் விஜயன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை வைத்து பள்ளியை நடத்த முடியாது. இது மிக குறைவாக உள்ளது. ஆசிரியர்களுக்கு முறையான சம்பளம் கொடுக்க முடியாது. பள்ளியை நடத்துவதில் எந்த லாபமும் இருக்காது.

இந்த நிலை நீடித்தால் பள்ளியை மூடிவிட்டு கல்யாண மண்டபங்களாக மாற்றுவது தவிர வேறு வழி இல்லை. தயவு செய்து கட்டணத்தை உயர்த்தி கொடுங்கள். அப்படி இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும்.

ஏற்கனவே அனைத்து பள்ளிகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும்பட்சத்தில் நீதிபதி கோவிந்தராஜ் தலைமையிலான குழு கட்டண விகிதங்களை அறிவித்தது தவறு.

இந்த வழக்கு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது. தீர்ப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலை இருக்கும்போது இந்த கட்டணம்தான் வாங்கவேண்டும் என்று நிர்பந்திப்பது எந்த விதத்தில் நியாயம்.

அதனால் நாங்கள் முதல்- அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிப்பது என முடிவு செய்துள்ளோம். மேலும் கோவிந்தராஜ் கமிட்டியிடமும் கட்டணத்தை உயர்த்தி தரவேண்டும் என மேல் முறையீடு செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment