Sunday, May 9, 2010

நள்ளிரவில் பரபரப்பு: மெரினா கடற்கரையில் சிறுமியை கடத்த முயற்சி; 2 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்


ராயபுரம் தொப்பை தெருவை சேர்ந்தவர் காதர் மொய்தீன். இவர் நேற்று மாலை தனது மனைவி சமோ, மகள் ரஹிமானி (10) ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்தார். இவர்களுடன் உறவினர்கள் 10 பேரும் வந்திருந்தனர். கடற்கரையை சுற்றிப் பார்த்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக, காதர் மொய்தீன் மற்றும் அவருடன் வந்திருந்த அனைவரும் உழைப்பாளர் சிலை அருகில் ஒன்று கூடினர். ஆட்டோவுக்காக காத்திருந்தனர். சிறுமி ரஹிமானி விளையாடிக்கொண்டிருந்தாள்.


அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் திடீரென ரஹிமானியின் கையை பிடித்து இழுத்து கடத்த முயன்றார். ரஹிமானி கூச்சல் போட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்களும், பொது மக்களும் அங்கு திரண்டனர்.

கூட்டம் கூடியதால் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பொதுமக்கள் அந்த வாலிபரை விரட்டிச் சென்று பிடித்து அடித்து உதைத்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இதனை தட்டிக் கேட்டார். அவரையும் ரஹிமானியாவின் உறவினர்கள் மடக்கி பிடித்தனர். இருவரும் அண்ணா சதுக்கம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ரஹிமானியை கடத்த முயன்ற வாலிபரின் பெயர் ஜெயகண்ணன் என்பது தெரிய வந்தது. தேனி மாவட்டம் அபிபட்டியை சேர்ந்த இவர் பாண்டி பஜாரில் உள்ள பிரபல ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வருகிறார்.

நேற்று மாலை இவர் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு கடற்கரைக்கு வந்துள்ளார். போதை மயக்கத்தில் நிலை தடுமாறிய அவர் சிறுமியை கடத்திச் செல்ல முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து போலீசில் சிக்கிய வாலிபரின் பெயர் குரு (32). இவர் அரக்கோணம் அருகே உள்ள ஆயர்பாடியை சேர்ந்தவர்.
மெரினாவை சுற்றிப்பார்க்க வந்த இவரும் கடத்தல் முயற்சி வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2 பேர் மீதும் 363 ஐ.பி.சி. (கடத்த முயற்சி) மற்றும் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்தை நேற்று இரவு முற்றுகையிட்டனர். நள்ளி ரவு 2 மணி வரை இந்த போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் திருவல்லிக் கேணி துணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தற்போது கோடைவிடு முறை என்பதால் மெரினா கடற்கரையில் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று இரவும் மெரினா கடற்கரை, மக்கள் வெள்ளத்தால் மிதந்தது. பொது மக்கள் மத்தியில் சிறுமியை கடத்த முயன்ற சம்பவம் மெரினாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment