Saturday, May 8, 2010

‘தயவு செஞ்சு மார்க் போடுங்க சார்’ 10, 12ம் வகுப்பு விடைத்தாள்களில் ரூபாய் நோட்டு வைத்த மாணவர்கள்



நொய்டா: அதிக மதிப்பெண் போட வலியுறுத்தி விடைத்தாள்களில் ரூபாய் நோட்டுகளை மாணவர்கள் வைத்துள்ளனர். நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் 50க்கும் மேற்பட்ட விடைத்தாள்களில் பணம் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 18ம் தேதி தொடங்கியது. கடந்த 2ம் தேதி வரை திருத்தும் பணி நடந்தது. திருத்தப்பட்ட விடைத்தாள்கள் அலகாபாத்தில் உள்ள உயர்நிலை மற்றும் இன்டர்மீடியேட் கல்வி வாரிய அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன.


நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா மையங்களில் மட்டும் 3 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. அதில், 50க்கும் மேற்பட்ட விடைத்தாள்களில் பணம் இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 10 ரூபாய் முதற்கொண்டு 100 ரூபாய் வரையிலான தொகையை விடைத்தாளுடன் வைத்து, கீழே குறிப்புகளையும் சில மாணவ, மாணவிகள் எழுதி வைத்துள்ளனர்.

நொய்டா மையத்தில் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
நான் இப்போதுதான் முதல் தடவையாக விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்தேன். நான் ஒரு விடைத்தாளை எடுத்து, முதல் பக்கத்தை திருப்பியதும் 50 ரூபாய் நோட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அந்த ரூபாய் நோட்டுடன் ஒரு துண்டுச்சீட்டும் இருந்தது. அதில், ஒரு செல்போன் நம்பர் இருந்தது. ‘இன்னும் நிறைய பணம் வேண்டுமென்றால் இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். நல்லமுறையில் திருத்துங்கள்’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
இவ்வாறு அந்த ஆசிரியர் கூறினார்.

கிரேட்டர் நொய்டா மையத்தில் விடைத்தாள்களை திருத்திய இன்னொரு ஆசிரியர் கூறுகையில், “நான் திருத்திய ஒரு விடைத்தாளில் 20 ரூபாய் இருந்தது” என்றார்.
ஒரு மாணவியின் விடைத்தாளில் உருக்கமான கடிதம் இருந்ததாக மற்றொரு ஆசிரியர் கூறினார். அவர் கூறியதாவது:

நான் திருத்திய ஒரு விடைத்தாளில் ஒரு கடிதம் இருந்தது. அதை ஒரு மாணவி எழுதியிருந்தாள். ‘நான் கடந்த ஒரு மாதமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதனால் பரீட்சைக்கு தயாராக முடியவில்லை. என்னுடைய உடல்நலனை கருத்தில் கொண்டு, பாஸ் மார்க் போடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் மகளாக என்னை நினைத்து ஒரு நல்ல முடிவை எடுங்கள்’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
இவ்வாறு அந்த ஆசிரியர் கூறினார்.

பல மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டும் தொனியிலும் குறிப்பு எழுதி வைத்துள்ளனர். சிலர் கருணை காட்டும்படி கெஞ்சியுள்ளனர். ஒரு மாணவன் விடைத்தாளுடன் இணைத்துள்ள துண்டுச்சீட்டில், “நான் ஏற்கனவே 3 முறை பெயில் ஆகி விட்டேன். இந்த ஆண்டும் பெயிலானால், தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை” என்று எழுதியிருந்ததாகவும் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment