Thursday, May 6, 2010

ரவுடி- வக்கீல் கொலை: கொலையாளிகள் 4 பேர் கைது; கள்ளக்காதல் தகராறில் தீர்த்துக் கட்டினர்


சென்னை பேசின் பிரிட்ஜ் நரசிம்மன் நகரில் வசித்து வந்தவர் சின்னா என்ற சின்னகேசவலு (வயது 42). பிரபல ரவுடி. கடந்த 30-ந்தேதி பூந்தமல்லி கோர்ட்டுக்கு வந்த சின்னா மற்றும் அவரது வக்கீல் பகவத்சிங் ஆகியோர் குமணன் சாவடியில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். காரில் சாப்பிட்டு கொண்டிருந்த இருவரும் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கொலையாளிகளை பிடிக்க புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார். துணை கமிஷனர்கள் சமுத்திரபாண்டி, வரதராஜூ ஆகியோரது மேற்பார்வையில், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.


தனிப்படையினர் நடத்திய விசாரணையில் புளியந்தோப்பைச் சேர்ந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் திட்டம் போட்டு சின்னாவை தீர்த்துக் கட்டியது தெரியவந்தது. இவனது கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு:-
1. வேல்முருகன் (வயது 24), குன்றத்தூர் நந்தம்பாக்கம்.
2. ராகேஷ் (24), கே.கே. நகர் அம்பேத்கார் காலனி.
3. சதீஷ் (23), குன்றத்தூர்.
4. ராசி (24), குன்றத்தூர்.


இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் இந்த இரட்டைக் கொலை நடந்தது தெரிய வந்தது.
இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட சின்னாவும், ஆற்காடு சுரேசும் ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். அப்போது அஞ்சலை என்ற பெண்ணை சின்னா தீவிரமாக காதலித்து வந்தார். சுரேசுக்கும் அஞ்சலை மீது ஒரு கண் இருந்துள்ளது.


இதனால் அஞ்சலையை சுரேஷ் 2-வது மனைவியாக்கி கொண்டான். இதன் பிறகே, சின்னாவுக்கும், சுரேசுக்கும் பெரும் பகை ஏற்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையே அடிக்கடி சின்ன சின்ன உரசல்கள் ஏற்பட்டன.
சின்னாவை போட்டுத்தள்ள சுரேசும், சுரேசை தீர்த்துக்கட்ட சின்னாவும் நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அஞ்சலையை தேடி புளியந்தோப்புக்கு சென்ற சின்னா, சரமாரியாக அவரை அடித்து உதைத்துள்ளார். கட்டப்பஞ்சாயத்து செய்வதிலும் சின்னாவுக்கும், சுரேசுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.


தனது இடத்துக்கே வந்து மனைவியை சின்னா தாக்கிய சம்பவம் சுரேசின் மனதில் கொலை வெறியை ஏற்படுத்தியது. இதற்காக ரவுடிகள் வட்டாரத்தில் தனக்கு நெருங்கிய நண்பர்கள் 20 பேரை கூட்டு சேர்த்து கொண்டு, சின்னாவை தீர்த்துக்கட்டியது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆற்காடு சுரேஷ் உள்பட 17 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.


இவர்களில் சுரேசின் நண்பர் சிசிங் ராஜா, ராயபுரம் துரை, புளியந்தோப்பு விஜி, தாம்பரம் ஆதி, பாய்கடை சரவணன், அஞ்சலையின் மகன் எழில், ராஜேஷ் ஆகியோர் முக்கியமானவர்கள்.


சுரேசின் சொந்த ஊர் ஆற்காடு. ரவுடிகள் உலகில் சுரேஷ் என்ற பெயரில் பலர் இருந்ததால் தனது பெயருக்கு முன்னால் ஊர் பெயரை சேர்த்துக் கொண்டான். 10-வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சுரேஷ் முதலில் “கேட்டரிங்” தொழில் செய்து வந்தான்.


அப்போது சைதை சுகு என்ற ரவுடியுடன் சுரேசுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து 2002-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஒருவரை தீர்த்துக் கட்டினர். இதுதான் சுரேசின் முதல் கொலை. பின்னர் 2004-ம் ஆண்டில் சைதாப்பேட்டை வெங்கடேசன், காஞ்சீபுரம் பரமசிவம் என அடுத்தடுத்து 2 பேரை போட்டுத் தள்ளினான். தற்போது தனது எதிரியான சின்னாவையும் தீர்த்துக் கட்டியிருக்கிறான்.


சுரேஷ் ஜெயிலில் இருந்த போது, டி.பி.சத்திரத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தட்சிணாமூர்த்தி ஜெயிலுக்குள் கஞ்சா விற்று வந்தான். இதனை காட்டிக் கொடுத்த குமார் என்ற கைதியை ஜெயிலுக்குள் வைத்தே சுரேஷ் வெட்டினான். வெளியில் வந்த பின்னர் குமாரை கொலை செய்யவும் சுரேஷ் முயற்சி செய்தான். இது தொடர்பாக கொலை முயற்சி வழக்கும் சுரேஷ் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment