Saturday, May 8, 2010

சென்னை மாநகராட்சியில் ரூ.1 கோடி கையாடல் முன்னாள் மேயர்கள் உள்பட 71 பேருக்கு ஜெயில்
சென்னை மாநகராட்சியில் ரூ.1 கோடி கையாடல் முன்னாள் மேயர்கள் உள்பட 71 பேருக்கு ஜெயில்
சென்னை மாநகராட்சியில் போலி கையெழுத்து போட்டு, ரூ.1 கோடிக்கு பண மோசடி நடந்து, அதில் பழைய மேயர்கள் உள்பட பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்ட சம்பவம், 1973_ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மாநகராட்சி மின்சார இலாகாவில் போலி சம்பள பட்டியல் தயாரித்து மிகப்பெரிய தொகை கையாடல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
விசாரணையில் ரூ.1 கோடியே 26 லட்சம் பணம் கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் மாநகராட்சி பதவிகளில் அங்கம் வகித்த அரசியல்வாதிகள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, மாநகராட்சி கலைக்கப்படுவதாக, 20_11_1973 அன்று சட்டசபையில் முதல்_அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். குற்றம் செய்தவர்கள் எந்தக்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நடுநிலையுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
(சென்னை மாநகராட்சி 1919_ல் அமைக்கப்பட்டதாகும். 54 வருட வரலாற்றில், மாநகராட்சி கலைக்கப்பட்டது அதுதான் முதல் தடவை)
மாநகராட்சி கலைக்கப் படும்போது மேயராக இருந்தவர், தி.மு.க.வைச் சேர்ந்த ஆறுமுகம். இந்த மோசடி தொடர்பாக, முன்னாள் மேயர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, ஏராள மான தஸ்தாவேஜ×கள், ரொக்கப்பணம் முதலியவற்றை கைப்பற்றினர்.
இந்த வழக்கில் முன்னாள் தி.மு.க. மேயர்கள் மைனர் மோசஸ், முனுசாமி, ஆறுமுகம், பழைய காங்கிரசை சேர்ந்த கே.குப்புசாமி, விநாயகமூர்த்தி, அ.தி.மு.க.வை சேர்ந்த லோகநாதன், இ.காங்கிரசை சேர்ந்த ராஜமன்னார் உள்பட மொத்தம் 107 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் 31 பேர் கவுன்சிலர்கள். என்ஜினீயர்கள் மற்றும் அதிகாரிகள் 74 பேர். மேலும் ஒருவர் சினிமா அதிபர். இன்னொருவர் "சிட்பண்ட்" அதிபர் ஆவார்.
இந்த வழக்கில் முதலில் 107 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் 15_11_1973 அன்று வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது, மேயர் முனுசாமி மரணம் அடைந்தார்.
இதனால் 106 பேர் மீது 6_11_1974_ல் கோர்ட்டில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை தனி செசன்சு நீதிபதி பக்கிரி சங்கர் முன்னிலையில் 20_3_1976_ல் தொடங்கியது.
கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது மின்சார பிரிவு என்ஜினீயர் பாலசுப்பிரமணியம், கவுன்சிலர்கள் ராஜமன்னார் (இ.காங்), ராகவலு (அ.தி.மு.க) ஆகியோர் மரணம் அடைந்தனர். எனவே இறுதியாக 103 பேர் மீது விசாரணை நடைபெற்றது.
அரசு தரப்பில் 360 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 20,780 தஸ்தாவேஜ×கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 27 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 235 தஸ்தாவேஜ×கள் தாக்கல் ஆயின.
இந்த வழக்கில் அப்ரூவர்களான கண்ணப்பன், ராமச்சந்திரன், சுந்தரம், ரத்தினம், ராஜப்பநாயர், காளத்தி, பி.முத்துச் சாமி ஆகியோரும் சாட்சியம் அளித்தனர். இதில் கண்ணப்பன் மட்டும் 103 நாட்கள் தொடர்ந்து சாட்சியம் அளித்தார். இந்தியாவிலேயே நடந்த வழக்குகளில் அப்ரூவர் ஒருவர் இவ்வளவு அதிக நாட்கள் விசாரிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.
அரசாங்க தரப்பு வக்கீலாக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.நட ராஜன் ஆஜரானார். அவருக்கு உதவியாக டி.பி.வெங்கட் ராமன், லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஏ.சி.ராமசாமி ஆகியோர் இருந்தனர். ஐ.ஜி. ஸ்டிரேசி, லஞ்ச ஒழிப்பு பிரிவு டைரக்டர் சி.வி.நரசிம்மன் ஆகியோர் மேற்பார்வையில் சூப்பிரண்டு ஆர்.என். கிருஷ்ணசாமி, துணை சூப்பிரண்டுகள் சுப்பையா, ஏ.சி.ராமசாமி ஆகியோர் விசாரணை செய்தனர். மற்றும் ஏட்டு எஸ். வீரத்தேவர், அண்ணாமலை, ஜெபமணி ஆகியோர் உதவியாக இருந்து வந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் சீனியர் வக்கீல் கே.ராமசாமி, என்.நடராஜன், பி.எச்.பாண்டியன் உள்பட 41 பேர் ஆஜரானார்கள்.
இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை 11_7_1978 அன்று முடிவடைந்தது. சுமார் 600 நாட்கள் விசாரணை நடைபெற்றது. பிறகு 1 மாதம் வக்கீல்கள் வாதம் நடந்தது. பின்னர் 4 மாதங்களுக்கு பிறகு 30_11_1978 அன்று தீர்ப்பு கூறப்பட்டது.
சட்டசபை உறுப்பினராக இருந்த நல்லதம்பி, மாநகராட்சி காங்கிரஸ் தலைவராக இருந்த விநாயகமூர்த்தி, மணிவண்ணன் உள்பட 32 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். 71 பேருக்கு ஒரு ஆண்டு முதல் 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி பக்கிரி சங்கர் தீர்ப்பு கூறினார்.
கவுன்சிலர் சாரங்கன் உள்பட 17 பேருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், உதவி கேஷியர்கள் மார்க்கபந்து, துரைவேலு, சோமசேகரன், எத்திராஜ×லு உள்பட 8 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், கவுன்சிலர்கள் எஸ்.எம்.கிருஷ்ணன், தணிகாசலம், ஜீவரத்தினம், துளசிங்கம், எம்.கண்ணப்பன், எம்.எஸ்.ராமச்சந்திரன் உள்பட 15 பேருக்கு தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், முன்னாள் மேயர்கள் மைனர் மோசஸ், ஆர்.ஆறுமுகம் மற்றும் கவுன்சிலர்கள், என்ஜினீயர்கள், சிப்பந்திகள் உள்பட 30 பேருக்கு தலா 1 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.
நீதிபதி தனது தீர்ப்பை 2,400 பக்கங்களில் எழுதியிருந்தார். நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்ததாவது:-
இந்த வழக்கை விசாரித்த போது நான் ஆச்சரியமும், மன வேதனையும் அடைந்தேன். சென்னை மாநகராட்சிக்கு மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் அதை மறந்துவிட்டு பொறுப்பற்ற தன்மையில் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெளிவாகி உள்ளது.
மக்களுக்கு நன்மை செய்வதை மனதில் கொள்ளாமல், மாநகராட்சியின் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக செயல்பட் டுள்ளனர். மாநகராட்சியின் பணத்தை மக்கள் நன்மைக்காக செலவிடாமல் ஏப்பம் விட்டிருக்கின்றனர். தங்களுடைய `பை'களை நிரப்புவதிலும், தாங்கள் பணக்காரர் ஆவதிலுமே குறியாக இருந்திருக்கின்றனர் என்பது தெளிவாகி உள்ளது.
நிர்வாகத்தை சரியாக கண்காணித்து செயல்பட வேண்டிய அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை காற்றில் பறக்க விட்டு தவறு செய்து இருக்கின்றனர். பணம் கையாடல் செய்வதற்காக சதித்திட்டங்கள் தீட்டி, பொய் கையெழுத்து போட்டு மோசடி மஸ்டர் ரோல் தயார் செய்தது முழுவதும் விசாரணயில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து 38 லட்சத்து 56 ஆயிரத்து 577 ரூபாய் 75 காசு மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கையாடல் செய்ததன் மூலம் சொத்து சேர்த்துள்ளார்கள் என்பது ஊர்ஜிதம் ஆகி உள்ளது. கிரிமினல் சட்டப்படி சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்."
இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டு இருந்தார். போலீஸ் அதிகாரிகள், வக்கீல்கள் ஆகியோரை நீதிபதி பாராட்டினார்.
தீர்ப்பை கேட்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கோர்ட்டில் பெருந்திரளாக கூடியிருந்தனர். தண்டனை அடைந்தவர்களின் உறவினர்கள், தீர்ப்பைக் கேட்டு கண்ணீர் விட்டனர். தண்டனை அடைந்தவர்களில் 19 பேர் முன்னாள் கவுன்சிலர்கள். அவர்களில் 15 பேர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். 2 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க, ஜனதா கட்சியினர் தலா ஒருவர்.

No comments:

Post a Comment