Saturday, May 8, 2010

100சதவீதம் அதிகரிப்பு: எம்.பி.க்கள் சம்பளம் ரூ.1.6 லட்சமாக உயர்கிறது; கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு

எம்.பி.க்களுக்கு தற்போது மாதம்தோறும் ரூ.16 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. இதுதவிர பாராளுமன்ற குழு கூட்டங்களில் கலந்து கொள்ளவும், தொகுதிகளுக்கு சென்று வரவும் என்பது போன்று பல்வேறு அலவன்சுகள் வழங்கப்படுகிறது. மேலும் பல்வேறு சலுகைகளையும் எம்.பி.க்கள் அனுபவிக்கிறார்கள்.


சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6-வது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி கணிசமான அளவுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது. அதேபோன்று தங்களுக்கும் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல தங்களுக்கும் 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு நிலுவைத் தொகையும் தரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.


இதையடுத்து எம்.பி.க்கள் சம்பளத்தை எந்த அளவுக்கு உயர்த்தலாம் என்பது பற்றி ஆய்வு செய்ய காங்கிரஸ் எம்.பி சரன்தாஸ் மகந்த் தலைமையில் கூட்டுக்குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர் எம்.பி.க்களிடம் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தனர். அந்த அறிக்கை பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், மேல்- சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஹமீத் அன்சாரி ஆகியோரிடம் தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதற்கான ஒப்புதலை பெறுவதற்காக நிதி அமைச்சகத்திடமும் இந்த அறிக்கை தகவல்கள் கொடுக்கப்பட்டன. அதில் எம்.பி.க்கள் சம்பளத்தை 100 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி எம்.பி.க்கள் மாத சம்பளம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாக உயர்கிறது. அலவன்சு தொகை ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாக உயர்கிறது. மொத்தத்தில் எம்.பி.க்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1.6 லட்சம் பெறுவார்கள்.


சம்பளம் தவிர பாராளுமன்றக்குழு கூட்டங்களில் எம்.பி.க்கள் பங்கேற்கும் போது தனியாக எம்.பி.க்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் இப்படி 5 லட்சம் ரூபாய் கிடைக்கும். எம்.பிக்களுக்கு இப்படி சம்பளத்தையும், அலவன்சுகளையும் உயர்த்துவதற்கு பிரதமர் மன்மோகன்சிங் ஒப்புதல் அளித்துவிட்டார்.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் எம்.பி.க்கள் சம்பளத்தை 100 சதவீதம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசு பணியாளர்கள் போல எம்.பி.க்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் குருதாஸ் குப்தா, டி.ராஜா கூறி உள்ளனர்.


எம்.பி.க்களுக்கு சம்பளத்தை உயர்த்துவதால் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு கூடுதலாக ரூ.170 கோடி செலவாகும் என்று தெரியவந்துள்ளது. இதுபற்றி விமர்சனம் எழுந்ததால் பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த பரிந்துரை கொண்டு வரப்படவில்லை.


பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் முன்பு இந்த பரிந்துரையை பரிசீலித்து முடிவு எடுப்பதாக நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி உறுதியளித்துள்ளார். இதனால் எம்.பி.க்கள் சம்பள உயர்வு சில மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment