Wednesday, May 5, 2010

தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்? பிப்ரவரி மாதம் நடத்த ஆலோசனை


தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2011) மே மாதம் வரை பதவி காலம் உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்று சமீப காலமாக தகவல்கள் வெளியான படி இருந்தது. ஆனால் தமிழக அரசு சார்பில் யாரும் அந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக டெல்லியில் இருந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, ஜனாதிபதி பிரதீபாபட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை சந்தித்துப்பேசினார். தமிழக திட்டப்பணிகளுக்காக அவர் கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்துள்ளது.

முதல்-அமைச்சரின் டெல்லி பயணம் எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக நடந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு மிகுந்த முக்கியத்துவமும், மரியாதையும் கொடுத்தனர். இதன் மூலம் காங்கிரஸ்-தி.மு.க. நட்புறவு மேலும் சாதகமாக பலப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் மீண்டும் வெளியாகியுள்ளது. 11 இடைத்தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றதன் மூலம் உற்சாகத்தில் இருக்கும் தி.மு.க.வுக்கு பருவ மழையும், சாதகமாக உள்ளது. எனவே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதமே முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சட்டசபைக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அதை சந்திக்க காங்கிரஸ் கட்சியும் தயாராக இருப்பதாக டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார். தி.மு.க.வுடன் கூட்டணி நல்ல நிலையில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment