Friday, May 7, 2010

ஜெயலலிதா உயிருக்கு ஆபத்து என கூறி என் மீது பழி போட முயற்சி செய்வதா? அ.தி.மு.க. குற்றச்சாட்டுக்கு Boldகருணாநிதி பதில்
சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை மீதான மானியக்கோரிக்கையை முதல்-அமைச்சர் கருணாநிதி சார்பில் துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-


சேகர்பாபு அ.தி.மு.க.:- தமிழ்நாட்டில் காவல் துறை நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் நடந்ததை விட கொள்ளை திருட்டு போன்ற சம்பவங்கள் பல மடங்கு அதிகமாகி விட்டன. பூட்டிய வீட்டிலும் கொள்ளை நடக்கிறது. திறந்த வீட்டிலும் கொள்ளை நடக்கிறது. பூட்டிய கடையிலும் கொள்ளை நடக்கிறது. திறந்த கடையிலும் கொள்ளை நடக்கிறது. சாதாரண மக்களிடமும் கொள்ளை நடக்கிறது. சப்-இன்ஸ்பெக்டரிமும் கொள்ளை நடக்கிறது.


தலைநகரான சென்னையில் கொலை, கொள்ளை ஆள் கடத்தல், கட்டப்பஞ்சா யத்து அதிகரித்துள்ளது. காவல் துறையின் நிலைமை பரிதாபமாக உள்ளது.


வழக்கறிஞர்கள்-போலீசார் மோதல் பிரச்சினையில் வக்கீல்களும் நீதிமன்றத்துக்கு சென்று இருக்கிறார்கள் காவல் துறையினரும் நீதி மன்றத்துக்கு சென்றிருக்கிறார்கள். காவல் துறை உயர் அதிகாரிகளிடம் ஒற்றுமை இல்லை. நீதிமன்றத்தில் கலவரம், மாணவர்கள்- போலீசாரிடையே மோதல், நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு விழாவில் முதல்-அமைச்சர் முன்னிலையிலேயே பத்திரிகையாளர்கள் தாக்கப்படுகிறார்கள். ஆனால் அதற்கு முறையாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை.


பரிதி இளம்வழுதி:- 2001-ல் எங்கள் தலைவரை கைது செய்ததை கண்டித்து பேரணி நடத்தியபோது காவல் துறையுடன் சேர்ந்து கூலிப்பட்டாளம் ஒருவரை வெட்டிக்கொலை செய்தது. அதையே மறைக்க பார்த்தீர்கள்.
சேகர்பாபு:- நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தக்கூட போலீஸ் அனுமதி வழங்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி துறையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றவர் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஏராளமான மகளிர் காவல் நிலையங்கள் அமைத்து தந்தார். கடந்த 9 வருடமாக மகளிர் காவல் நிலைய எண்ணிக்கையை தி.மு.க. அரசு அதிகரிக்கவில்லை.


போலீஸ் துறையை நவீன மயமாக்க அ.தி.மு.க. ஆட்சியில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கவில்லை.
துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்:- பெண்களுக்கு உள்ளாட்சி துறையில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளித்து உங்கள் ஆட்சியில் சட்டம் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அதை செயல்படுத்திய ஆட்சி தி.மு.க.
2001 முதல் 2006 வரை போலீஸ் துறையை நவீனப்படுத்த 542 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்போது 2006 முதல் 2010 வரை 428 கோடி ரூபாய் ஒதுக்கப்பட் டுள்ளது. இதற்கு காரணம் முன்பு மத்திய அரசு 50 சதவீத நிதியை வழங்கியது.


இப்போது மாநில அரசின் பங்கு 75 சதவீதமாகவும் மத்திய அரசின் பங்கு 25 சதவீதமாகவும் ஒதுக்கப்பட் டுள்ளது. என்றாலும் கடந்த ஆட்சியில் 1,600 கோடியாக இருந்த காவல்துறை நிதி ஒதுக்கீடு இந்த ஆட்சியில் 2,900 கோடியாக உயர்ந்துள்ளது.


சேகர்பாபு:- இந்த ஆட்சியில் போலீசார் ஜாலியாக நடமாடுகிறார்கள். போலி மருந்து, போலி உணவு, போலி சாமியார், போலி அதிகாரி என்று சொல்லவே மூச்சு முட்டுகிறது.


கடந்த ஆட்சியின்போது கொலைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இப்போது அதிகரித்துள்ளது.ஆன்லைன் வர்த்தகத்தில் 1,500 கோடி மோசடி செய்த ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவருக்கு அடைக்கலம் கொடுத்த கோவை பிரமுகரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் சென்னையில் அடைக்கலம் கொடுத்த பிரமுகர் கைது செய்யப்பட வில்லை.


விசாரித்தபோது அவர் கே.கே. நகரில் உள்ள மாநகராட்சி உறுப்பினர் என்று தெரிய வருகிறது. விசித்திரமான கொலை, புதுமையான திருட்டுகளின் புகழிடமாக சென்னை மாறி விட்டது.
பனையூர் கொலையில் பயன்படுத்தப்பட்ட கார் யாருடையது என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலைப்புலிகளையும், தீவரவாதத்தையும் கடுமையாக எதிர்ப்பவர். அவர் பொதுக்கூட்டத்தில் பேசினால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை.அவர் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.


மு.க. ஸ்டாலின்:- சேகர்பாபு திரும்ப, திரும்ப சில தவறான தகவல்களையே தெரிவிக்கிறார்.
பனையூரில் 24.8.2009-ல் இளங்கோவும், அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டார்கள். தப்பி ஓடிய எதிரி ராஜனை பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் உடல் நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் இழந்தார். இது பற்றிய விசாரணை மாநில புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ராஜன் தனி நபராகத்தான் சென்று ஆதாயத்துக்காக கொலை செய்தார் என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதில் அரசியல் தொடர்பு எதுவுமே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.


கே.கே. நகர் பகுதி மாநகராட்சி உறுப்பினர் ஒருவரை மோசடி கும்பலுடன் தொடர்பு படுத்தி கூறினார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
சேகர்பாபு:- இந்த ஆட்சியில் காவல் துறையினரே தாக்கி கொலை செய்யப்படுகிறார்கள். இரவில் வாகனங்கள் எரிக்கப்படுகின்றன. கொலை செய்யப்பட்டவர்களின் தலையை கூட கண்டு பிடிக்க முடியவில்லை.


மு.க. ஸ்டாலின்:- சென்னையில் கொலைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று உறுப்பினர் கூறுவது தவறான தகவல். கொலைகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் கொலை செய்யப்பட்ட எம்.கே. பாலன் உடல் என்ன ஆனது?


சேகர்பாபு:- அந்த கொலை சம்பவத்தில் அ.தி.மு.க. ஆட்சியின்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர்.
மு.க. ஸ்டாலின்:- காணாமல் போன உடல் என்ன ஆயிற்று என்பது தான் என் கேள்வி?


சேகர்பாபு:- காவல் துறை சரிவர செயல்படாததால் இந்த ஆட்சி மோசமாக உள்ளது. மீண்டும் எங்கள் ஆட்சி வரும். இந்த நிலைமை மாறும்.


முதல்-அமைச்சர் கருணாநிதி:- அவருடைய இறுதிக் கட்டப்பேச்சுக்கு நான் பதில் தரப் போவதில்லை. அதற்குத் தமிழ்நாட்டு மக்கள் வாக்குச்சீட்டுகள் மூலமாக அவர்களுக்கும், எங்களுக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறார்கள். நான் இப்போது எழுப்புகின்ற பிரச்சினையெல்லாம்,


முதல்-அமைச்சராக இருந்த- இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற அவருடைய அம்மா அவர்களுக்கு இந்த ஆட்சியில் பொதுக்கூட்டங்களுக்கும், மற்ற நிகழ்ச்சிகளுக்கும் செல்லும்போது, காவல் துறைப்பாதுகாப்பே இல்லை என்று அப்பட்டமான-ஒரு உண்மைக்கு மாறான தகவலைச் சொன்னார்.அம்மையார் அவர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.


அவர் எத்தகைய பாதுகாப்பிலே செல்கிறார்கள். எந்த கேட்டகரியில் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்ற விவரங்கள் எல்லாம் இந்த மாமன்றத்திலே பலமுறை விளக்கப்பட்டிருக்கின்றன. நானும் அறிக்கையின் மூலமாக எடுத்துக் காட்டியிருக்கின்றேன். இப்போது அவர் சொன்னார்-அம்மையார் அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு முதல்-அமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.


ஆக, இதிலேயிருந்து என்ன புரிகிறது என்றால், முதல்-அமைச்சருக்குப் பொறுப்பு என்று குற்றஞ்சாட்டி, இவர்கள் யாரும் அம்மையாருக்கு எந்த ஆபத்தும் விளைவிக்காமல் இருந்தால் போதும் என்பதை மாத்திரம் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
செங்கோட்டையன்:- எங்கள் அம்மாவுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அவரை பாதுகாக்க எங்கள் உயிரைக் கொடுப்போம்.உங்கள் மீது பழி போட மாட்டோம்.


முதல்-அமைச்சர் கருணாநிதி:- ஏற்கனவே சேகர்பாபு பேசிய பேச்சு அவைக்குறிப்பில் பதிவாகி இருக்கிறது. அவர்கள் அம்மாவுக்கு ஆபத்து ஏற்பட்டால் பொறுப்பை முதல்-அமைச்சர் தான் ஏற்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை செங்கோட்டையன் ஏற்றுக்கொள்வாரா?
இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment