Wednesday, May 5, 2010

மழை வேண்டி 2 ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்

வாழப்பாடி அருகே மழை வேண்டி நூதன வழிபாடு 2 ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது மாரியம்மன்புதூர் கிராமம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையே முழுமையாக நம்பி உள்ளனர். பருவமழை பெய்யாமல் உள்ளதால் இந்த பகுதிகளில் தற்போது கால்நடைகளுக்கு வண்டிகளில் தண்ணீர் வாங்கி ஊற்றிவரும் நிலை உள்ளது.

இந்நிலையில் மழைவேண்டி சிறப்புபூஜை நடத்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு புராணக்கதைகளில் வரும் மன்மதனை தீ வைத்து கொளுத்தினார்கள்.

அவருக்கு உயிர் கொடுக்கும் நிகழ்ச்சியாக புராணக்கதை தெருக்கூத்து நடந்தது. அதனை தொடர்ந்து மன்மதனுக்கு உயிர்கொடுத்து மீண்டும் எழுப்பினர்.


அதைத்தொடர்ந்து மன்மதன் வேடம் அணிந்த ஆண் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியாக அதே கிராமத்தை சேர்ந்த ஆண் ஒருவருக்கு ரதி வேடம் போட்டனர். அதைத்தொடர்ந்து இருவருக்கும் அலங்காரம் செய்யப்பட்டது.


பின்னர் கிராம மக்கள் ஆசி வழங்க ரதிக்கு, மன்மதன் தாலி கட்டினார். அதைத்தொடர்ந்து மன்மதனும் ரதியும் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். வழியில் ஏராளமானவர்கள் மணமக்களுக்கு குளிர்பானம் கொடுத்து உபசரித்தனர்.


மேலும் பல பெண்கள் மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதைத்தொடர்ந்து இருவரையும் தனிவீட்டுக்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி நடந்தது.


இறுதி நிகழ்ச்சியாக கிராமத்தில் உள்ள பெண்கள் மாவிளக்கு எடுத்துவந்து, மாரியம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை நடத்தினார்கள்.

No comments:

Post a Comment