Saturday, May 8, 2010

Font sizeஷாம்பு பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள்: பப்பாளி பழத்தில் பதுக்கி புழல் ஜெயிலுக்குள் செல்போன் கடத்தல்
புழல் ஜெயிலுக்குள் செல்போனில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் வரை அத்தனையும் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதனால் கைதிகளுக்கிடையே மோதல் சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகிறது. நேற்று பகலிலும் புழல் சிறையில் செல்போன் தகராறில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 கைதிகள் சேர்ந்து ஒரு கைதியை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொன்னேரியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். திருட்டு வழக்கில் கைதாகி இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று இவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கொடுங்கையூரை சேர்ந்த அசோக் என்ற கைதி, ராமகிருஷ்ணனிடம் சென்று செல்போன் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதன் காரணமாக இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது அசோக்குக்கு ஆதரவாக முரளி, கவியரசு ஆகிய 2 கைதிகளும் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது ராமகிருஷ்ணன் இரும்பு கம்பியால் குத்தப்பட்டர். பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ஜெயிலர் இளவரசு, புழல் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் விஜயராமுலு விசாரணை நடத்தி வருகிறார்.

மோதலுக்கு காரணமான ராமகிருஷ்ணனின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த பல்சர் பாலா என்ற கைதியிடம் இருந்தும் இன்னொரு செல்போனை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புழல் ஜெயிலுக்குள் செல்போன் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் நூதனமான முறையில் கடத்தப்படுவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரிய பப்பாளி பழத்தை அறுத்து விதைகளை எடுத்து விட்டு அதனை காய வைப்பார்கள். பப்பாளி பழம் நன்றாக உலர்ந்ததும் அதன் உள்ளே செல்போன்களை வைத்து வெட்டுப்பட்ட பப்பாளி பழத்தின் பகுதியை அப்படியே மேலே வைத்து ஒட்டி விடுவார்கள்.

இதேபோல ஷாம்பு பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து ஜெயிலுக்குள் கடத்தி செல்கிறார்கள். இதனால் ஜெயிக்குள் கைதிகள் கஞ்சா போதையில் மிதக்கிறார்கள். செல்போனில் எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

சிறையில் நடக்கும் மோதல் சம்பங்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடற்ற தன்மையே மூலக்காரணமாக உள்ளது. எனவே இதற்கு சிறைத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சிறைவாசலில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



No comments:

Post a Comment