Saturday, May 8, 2010

போலீஸ் முன்னிலையில் இன்ஜி., மாணவர் மீது கொலை வெறி தாக்குதல்

Front page news and headlines today

கோவையில், போலீஸ் முன்னிலையிலேயே இன்ஜி., மாணவர் மீது, ரவுடிக் கும்பல் கொலை வெறி தாக்குதல்நடத்தியது.



சம்பவ இடத்திலிருந்த போலீஸ்காரர், அவசர உதவி கோரி போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்ட போது, 'எல்லை பிரச்னையை' காரணம் காட்டி, உதவி மறுக்கப் பட்டது. அதன் பின் நிகழ்ந்த களேபரமும், போலீஸ் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்களும், போலீஸ் மீதான மக்களின் நம்பிக்கையை நிலைகுலையச் செய்துள்ளன.



கோவை நகரில், மகாளிபாளையம் ரோட்டிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடை பாரில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, 50க்கும் மேற்பட்டோர் போதை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த ஒரு கும்பல், திடீரென அருகிலிருந்த வாலிபரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கத் துவங்கியதும், பலரும் அலறியடித்து ஓடினர். தாக்குதலுக்குள்ளான வாலிபர் உயிர் தப்ப, மகாளிபாளையம் ரோட்டில் அரை கி.மீ., தொலைவுக்கு ஓட, விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் மரக் கட்டை, கற்களால் மூர்க்கத்தனமாக தாக்கியது. அதிர்ச்சியடைந்த சிலர், போலீஸ் 'கன்ட்ரோல் ரூமுக்கு' போனில் தெரிவித்ததும், அடுத்த 15வது நிமிடத்தில் ரமேஷ் என்ற போலீஸ்காரர் ரோந்து பைக்கில் வந்தார். சுற்றி நின்றிருந்த கும்பல், அப்போதும் தாக்கிக் கொண்டே இருந்தது.



கும்பலை தடுக்க முயன்ற போலீஸ்காரர் ரமேஷ் தள்ளப்பட்டு, அவரிடம் இருந்த 'வாக்கி-டாக்கி'யும், மொபைல் போனும் தவறி கீழே விழுந்தது. பதட்டமடைந்த போலீஸ்காரர், 'வாக்கி-டாக்கி'யை தேடி எடுத்து கன்ட்ரோல் ரூம் போலீசாரை தொடர்பு கொள்ள முயன்ற போது, அது இயங்கவில்லை. அருகிலிருந்த ஒருவர் தனது மொபைல் போனை போலீஸ்காரரிடம் கொடுத்தார். பீளமேடு போலீஸ் ஸ்டேஷனை போனில் தொடர்பு கொண்ட போலீஸ்காரர் ரமேஷ், உதவிக்கு போலீசாரை அழைத்தார். மறுமுனையில் பேசிய போலீஸ்காரர், 'அது எங்க 'லிமிட்' இல்லை; நீ சிங்காநல்லூர் போலீசுக்கு போன் போடு...' எனக் கூறிவிட்டு, இணைப்பை துண்டித்து விட்டார்.



மறுபடியும் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்த போலீஸ்காரர்விஷயத்தை சொல்ல, அடுத்த நிமிடமே 'ஒயர்லெஸ்' தகவல் பரிமாற்றம் அலறியது. அதன் பிறகும் கூட அப்பகுதிக்கான இரவு ரோந்துப்பணி உதவி கமிஷனர் முத்துராஜ் மற்றும் அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவில்லை.



எல்லாம் முடிந்து அரை மணி நேரம் கழித்து, பீளமேடு எஸ்.ஐ., முத்துசாமியும், சிங்காநல்லூர் பெண் எஸ்.ஐ., பிரபாவதியும் சம்பவ இடத்துக்கு, 'சினிமா போலீசாக' கடைசியில் வந்தனர். அதற்குள், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரின் தந்தை, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு ஓடி வந்தார்;



அவர், ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார். இவர் வந்த பிறகு தான், அடிபட்ட வாலிபர் சி.ஐ.டி., கல்லூரியில் பி.இ., இறுதியாண்டு படிக்கும் பிரகாஷ்(19) என்பது தெரிய வந்தது. தனது மகன் உயிருக்கு போராடுவதைக் கண்ட தந்தை, போலீசிடம் வாக்குவாதம் செய்து மகனை காப்பாற்ற கெஞ்சினார். ஆத்திரமடைந்த போலீசார், அவரை கழுத்தைப் பிடித்து தள்ளி ஜீப்பில் ஏற்றினர்; தாக்குதலில் ஈடுபட்டவர்கள், 'ஹாயாக' அருகிலேயே நின்றிருந்தனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், போலீசுடன் வாக்குவாதம் செய்தனர். அதன் பின் வேறு வழியில்லாமல், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த சிலரையும் போலீசார் ஜீப்பில் ஏற்றினர்.



அப்போது, சிங்காநல்லூர் எஸ்.ஐ., பிரபாவதியுடன் மொபைல் போனில் பேசிய இரவு ரோந்து இன்ஸ்பெக்டர், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலின் தலைவனை விடுவிக்குமாறு உத்தரவிட்டார். அடுத்த வினாடியே ஜீப்பில் இருந்த தாக்குதல் கும்பல் விடுவிக்க பட்டது; இத்தனையும், பலரது சாட்சியாகவே அரங்கேறியது. தாக்கிய நபர்களை விடுவித்தது தொடர்பாக அங்கிருந்த சிலர் போலீசிடம் கேள்வி எழுப்ப, 'அவர்கள் எங்கே போய் விடுவர்; காலையில் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரிக்கிறோம்' என 'பொறுப்புடன்' பதிலளித்துள்ளார் பெண் எஸ்.ஐ. இத்தனையும் நடக்கும் வரை, அடிபட்ட நபர் உயிருக்கு போராடியபடியே தரையில் சரிந்து கிடந்தார். அருகிலிருந்தோர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.



இதை தடுத்த ஒரு எஸ்.ஐ., அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்குமாறு மிரட்டல் தொணியில் கூறினார் (அரசு மருத்துவமனையில் சேர்த்தால், வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்பதால்). அவ்வாறே அந்த வாலிபர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், பின்னர் அவர் பீளமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். இவ்வளவுக்கு பிறகும் நேற்று மதியம் வரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இச்சம்பவம் குறித்து, கமிஷனர் அலுவலக அதிகாரிகளுக்கு கூட தகவல் தெரிவிக்கப்படாதது ஆச்சரியமளிக்கிறது.


No comments:

Post a Comment