Thursday, May 6, 2010

தமிழ்நாட்டுக்கு 2 1/2 லட்சம் டன் கூடுதல் அரிசி; சட்டசபையில் கருணாநிதி தகவல்

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதில் வருமாறு:-
தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு மொத்தம் 3 லட்சத்து 17 ஆயிரம் டன்அரிசி தேவையாக இருந்தது. மத்திய அரசு 2 லட்சத்து 96 ஆயிரத்து 453 டன் அரிசி வழங்குகிறது. இது தவிர மீதி தேவைப்படும் அரிசியை மத்திய அரசு வெளிசந்தை விலைக்கு வழங்குகிறது.
தற்போது தமிழ்நாட்டில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்குவதால் மாதந் தோறும் 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் டன் கூடுதல் அரிசி தேவைப்பட்டது. ஆண்டு முழுவதும் 2 லட்சத்து 37 ஆயிரம் டன் கூடுதலாக தேவைப்படுகிறது.
சமீபத்தில் டெல்லி சென்ற முதல்-அமைச்சர் கருணாநிதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தமிழ்நாட்டுக்கு கூடுதல் அரிசி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 3-ந்தேதி இந்த கோரிக்கை விடப்பட்டது. 4-ந்தேதியே கூடுதல் அரிசியை வழங்க மத்திய அரசு உத்தர விட்டது.
பீட்டர் அல்போன்ஸ்:- முதல்-அமைச்சருடைய கோரிக்கையை ஏற்று தமிழ் நாட்டுக்கு சிறப்பு ஒதுக்கீடாக எவ்வளவு அரிசி வழங்கப்பட்டிருக்கிறது என்கிற தகவலை சொல்ல வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் கருணாநிதி:- டெல்லியிலிருந்து நேற்றைக்கு முன் தினம் நான் திரும்பிய செய்தி உங்களுக்கெல்லாம் தெரியும். நேற்றைக்கு முன்தினம் நான் டெல்லியிலே காங்கிரஸ் கட்சியினுடைய தலைவி சோனியாகாந்தியை சந்திக்கும் போது, தமிழ்நாட்டினுடைய அரிசி தேவையை எடுத்துச் சொன்னேன். அவர்கள் அதைப்பற்றிக் கவனிப்பதாகக் காலையிலே சொன்னார்கள்.
நான் நேற்றைய முன் தினம் மாலையில் இங்கு வந்து சேர்ந்தேன். நான் வருவதற்கு முன்பாகவே அரிசி அனுப்பப்பட்டது என்ற செய்தி இங்கே வந்து விட்டது. அரிசி எவ்வளவு வந்தது என்று பீட்டர் அல்போன்ஸ் கேட்டார். மொத்தமாக வந்த அரிசி 2 லட்சத்து 50 ஆயிரம் டன், 65 ஆயிரம் டன் கோதுமை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment